சலிப்பு

வாசகனின் தற்கொலைக் கடிதம்
வாசித்ததிலிருந்து தற்கொலை எண்ணம்
நீரில் நனைந்த சிகரெட்டைப் போல்
மனதில் புகைகிறது

யோசிக்கும் வேளையில்
வந்தமர்ந்த மைனாவிடம்
சேதி சொன்னேன்
சிறிது நேரம் மௌனித்த மைனா
காரணம் கேட்டது
’எல்லாவற்றுக்கும் காரணம் உண்டா?
பேரரசனாய் வாழ்ந்த ஹெமிங்வே
ஏன் தன்னை சுட்டுக் கொண்டான்?’

மேஜை மேலிருந்த மாத்திரைகளைக்
காண்பித்தேன்
சாகசம் செய்து வாங்கியவை
வாழ்க்கையை முடித்து வைக்கும்
சிறு வெள்ளைத் துண்டுகள்

பார்த்து விட்டுச் சிரித்த மைனா
தற்கொலைக் கவிதை எழுதுபவனெவனும்
தற்கொலை செய்து கொண்டதில்லை என்றது

’உளறாதே, ஒரு நூறு உதாரணம் சொல்வேன்
வுல்ஃப் பற்றித் தெரியாதா?
தற்கொலை பற்றியே எழுதினாள்
பல முறை முயன்று
கடைசியில் ஆற்றில் மூழ்கினாள்’

‘நீ அவள் இல்லை
படித்தவன்
ஞானியென்றும் சொல்கிறாய்
நீ ஒரு முடிவெடுத்தால் சரியாகவே இருக்கும்
செத்துப் போ, பார்க்கலாம்’
என்று சொல்லிப் பறந்தது மைனா

வாழ்க்கை பெரும் அலுப்பு
அதனால்தான் மாத்திரைகள் வாங்கினேன்
ஆனால்
சரியான காரணமின்றி சாவது
வாழ்வின் அலுப்பை விடப்
பெரும் அலுப்பு

மாத்திரைகளை பத்திரப்படுத்தி விட்டு
உடைந்து போன பழைய நாற்காலியில் அமர்ந்து
வழக்கம் போல் கவிதையில் மூழ்கினேன்
கவிதை மட்டுமே சாவிலிருந்து
தடுத்துக்கொண்டிருக்கிறது