இனிமேல் கவிதை இல்லை…

என் எழுத்து எப்போதும் கொண்டாட்டத்தையும் உற்சாகத்தையும் தந்து கொண்டிருந்தன. எவ்வளவு வலியையும் வாதையையும் எழுதினாலும் அது எல்லோரையும் சிரிக்கச் செய்தன. ஆனால் இப்போதைய கவிதைகள் வலி மிகுந்திருக்கின்றன. எழுதுபவனுக்கும் அது யாரைப் பற்றியதோ அவருக்கும். என் எழுத்து எப்போதும் உற்சாகத்தை மட்டுமே தர வேண்டும். அதனால் இப்போதைக்குக் கவிதைகளை நிறுத்துகிறேன். நேற்று எந்த நேரத்தில் ஒரு நண்பன் “ஏன் உங்கள் அந்தரங்க விஷயங்களைப் பொதுவெளியில் வைக்கிறீர்கள்?” என்று கேட்டானோ அதுவே கவிதைக்கு முற்றுப்புள்ளி ஆகி விட்டது. ஏனென்றால், என் அந்தரங்கம் என்பது என்னைப் பற்றியது மட்டுமே அல்ல. நாவல் என்றால் அடித்து விளையாடலாம். கவிதை அப்படி அல்ல. யாருக்கும் நான் இம்சை கொடுக்க விரும்புபவன் அல்ல. எனவே இப்போதைக்குக் கவிதைக்கு முற்றுப்புள்ளி.

இன்னொரு நண்பர் சொன்னார், கவிதை எழுதுவது சரி, ஆனால் உங்கள் ப்ளாகில் வழக்கமாக வரும் விஷயங்கள் எதுவுமே இல்லாமல் போய் விட்டனவே?

நல்ல கேள்வி. ஆனால் இதற்கு நான் முன்பே பதில் எழுதி விட்டேன். நான் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைத் தொகுதிகள் எழுதி விட்டேன். ஆனால் நாவல் பத்தையே தாண்டவில்லை. எனவே என் இறுதி நாள் வரை நாவல்களே எழுத வேண்டும் என்று திட்டம். கட்டுரைகள் இனி எப்போதுமே இல்லை. எனவே, கவிதை இல்லையேல் ப்ளாக் காலியாகத்தான் இருக்கும். ஏனென்றால், கட்டுரைகளில் நேரத்தைச் செலவிட நான் விரும்பவில்லை. நான் சமூகத்திலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் தமிழ்ச் சூழலிலிருந்தும் ஒதுங்கி விட்டேன். அனாடமி ஆஃப் டிஸனன்ஸ் கூட ஆங்கிலத்தில்தான் எழுதுகிறேன். இனி எழுதும் நாவல்கள் அனைத்துமே ஆங்கிலத்தில்தான். ஆனால் அவை தமிழிலும் வெளிவரும். தமிழில் எழுதி எந்தப் பயனும் இல்லை. பணம் வருவதில்லை. காரணம், ஐநூறு பேர் தான் வாங்குகிறார்கள். இப்போது வந்திருக்கும் கவிதைத் தொகுதி கூட நூறு பிரதிதான் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். அதுவே அதிகம். என் கணக்கு ஐம்பதுதான். அதிக பட்சம் இருநூறு பிரதி விற்கும். என் ஆன்மாவை உருக்கி உருக்கி எழுதிய கவிதைகள். அவ்வளவுதான் தமிழ்ச் சூழல்.

தனிமை எனக்கு அத்தனை பழக்கமானதில்லை என்பதால் அது மிகவும் மன உளைச்சலைத் தருவதாக இருக்கிறது. தனிமை பயமுறுத்துகிறது. அதிலிருந்து விடுபடுவதற்காக மட்டுமே கவிதைகள் எழுதினேன். கவிதை பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால் அது பலருக்கு – ஆம், பலருக்கு – மன உளைச்சலைத் தருவதால் அதை நிறுத்துகிறேன். உடனடியாகச் செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளன. மீதி கவிதைகளைத் தொகுத்து அடுத்த தொகுதி வர வேண்டும். அதுவே என் கடைசி கவிதைத் தொகுதியாக இருக்கும். அடுத்து, அனாடமியைத் தொடர வேண்டும். அதற்கடுத்து பல வேலைகள் உள்ளன. அவற்றையெல்லாம் வாழ்வில் தனித்திருந்து செய்வதற்கு எனக்கு மனத்திடம் வேண்டும். அது ஒன்றை மட்டுமே இப்போது பிரார்த்திக்கிறேன்.

ரொலாந் பார்த் பற்றிய ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் உள்ளது. Tiphaine Samoyault எழுதியது. அதில் ரொலாந் பார்த் குறிப்பிடுவது எனக்கும் பொருந்தும். பார்த் எழுதியது பத்து சதவிகிதம்தான். மீதி தொண்ணூறு சதவிகிதத்தை அவர் பேசி மட்டுமே இருக்கிறார். அவர் பேசியது அனைத்தும் பார்த் ஆர்க்கைவ்ஸில் உள்ளது. அவற்றிலிருந்து தொகுத்தே இந்த வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியிருக்கிறார் திஃபேன். நானுமே பத்து சதவிகிதத்தை மட்டுமே எழுதியிருக்கிறேன். மீதி தொண்ணூறை எழுத இயலாது. அவற்றைப் பேச மட்டுமே முடியும். ஆனால் என் பேச்சைக் கேட்க மாணவர்கள் இல்லை. அவர்கள் என்னை நெருங்குவதற்குத் தடையாக இருப்பது என்னுடைய மனோபாவமும் நட்புமுறையும் காரணமாக இருக்கலாம். நான் குரு ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால் மதித்துக் கேட்பார்கள். நான் நண்பனாகப் பழகுவதால் தோளில் ஏறி அமர்கிறார்கள். எனக்கே பாடம் சொல்கிறார்கள். தட்டி விட்டால் கீழே விழுந்து அடிபட்டு என்னை விட்டு ஓடி விடுகிறார்கள். சாருவுடன் யாரும் பழக முடியாது என்ற குற்றச்சாட்டுடன். ஜெயமோகன் போல் இருந்தால்தான் இருபது பேருடன் வலம் வரலாம் போல் இருக்கிறது. அந்தப் பாணி எனக்குக் கைவரவில்லை. எனக்கு எதுவும் நஷ்டமில்லை. அவர்களுக்கும் நஷ்டமில்லை. ஏனென்றால், என்னிடம் என்ன இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் என் புத்தகங்களை மட்டுமே அறிவர்.

திரும்பவும் சொல்கிறேன். என்னிடம் இருக்கும் அறிவுப் பெட்டகத்தை நான் எளிதில் அடைந்து விடவில்லை. தில்லியில் செண்ட்ரல் செக்ரடேரியட் நூலகத்தில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை படிப்பேன். மொபைல் ஃபோன் இல்லாத காலம். எல்லாவற்றையும் குட்டி குட்டி நோட்டுப் புத்தகங்களில் பொடிக் கையெழுத்தில் எழுதிக் கொள்வேன். மதியம் பசிக்கும். கையில் காசு இருக்காது. ஒரே ஒரு கச்சோடி மட்டுமே சாப்பிடுவேன். கச்சோடி என்பது சமோசா மாதிரி ஒரு பண்டம். ஒரு டீ குடிப்பேன். இப்படித்தான் பல ஆண்டுகள் படித்தேன். ரொலாந் பார்த், தெரிதா, ஃபூக்கோ எல்லாம் இப்படிப் படித்ததுதான்.

சினிமாவும் இப்படித்தான். வடக்கு தில்லியில் உள்ள என் அலுவலகத்திலிருந்து பஹாட் கஞ்ஜில் உள்ள ரங்காயன் தியேட்டருக்கு இரண்டு பஸ் பிடித்து ஓட வேண்டும். நிஜமாகவே ஓடுவேன். டீ குடிக்கவும் நேரம் இருக்காது.

நிஜமாகவே சொல்கிறேன். என்னைப் போல் படித்த, என்னைப் போல் சினிமா பார்த்திருக்கின்ற ஒரு நபரை நான் இன்னும் பார்க்கவில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு, சிங்கள எழுத்தாளர் கேகே என்றும் ஸர்பயா என்றும் அழைக்கப்படும் சமன் குமர மட்டுமே.

அப்படி ஒரு அறிவுப் பெட்டகத்தை வைத்திருக்கும் என்னிடமிருந்து ஏன் கற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்? இன்றைய தலைமுறை வசதியையும் சொகுசையும் விரும்புகிறது. பணம் வருகிறது என்றால் தண்டி தண்டியான எஞ்ஜினியரிங் புத்தகங்களை உடல் வருத்திப் படிக்கிறார்கள். நான் இலவசமாக ஞானத்தைத் தருகிறேன் என்றால், நீ பழகுவதற்கு லாயக்கில்லை என்கிறார்கள். ஞானத்தினால் பயனில்லை என்று நம்புகிறார்கள்.

ஸ்ரீராமானுஜர் இந்திய வரலாற்றிலும் சமூகச் சிந்தனையிலும் எத்தனை முக்கியமானவர் என்று நமக்குத் தெரியும். அவர் தன் சிறு பிராயத்தில் ஓம் நமோ நாராயணாய என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தின் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள விரும்பினார். அவரது குரு ஆளவந்தார் திருக்கோஷ்டியூரில் இருக்கும் நம்பி என்பவரைப் பார்க்கச் சொன்னார். அவரைத் தேடிப் போனார் ராமானுஜர். ராமானுஜர் வசித்த ஸ்ரீரங்கத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தூரம் திருக்கோஷ்டியூர். இப்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. பிறகு வா என்றார் நம்பி. திரும்பவும் நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்தார் ராமானுஜர். போக வர இருநூறு கிலோமீட்டர். இப்படியே பதினெட்டு முறை அலைய விட்டார் நம்பி. பதினெட்டு முறையும் தவறாமல் இருநூறு கிலோமீட்டர் நடந்து சென்றார் ராமானுஜர். பதினெட்டாவது முறைதான் ராமானுஜருக்கு அர்த்தம் சொன்னார் நம்பி. அப்போதும் ஒரு நிபந்தனை விதித்தார். இந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லக் கூடாது. சொன்னால் நரகம் என்றார்.

உடனே ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோவில் கோபுரத்தில் ஏறி நின்று எல்லோருக்கும் மந்திரத்தின் அர்த்தத்தைக் கூறினார். நம்பி கோபமடைந்தார்.

அழைத்து விசாரித்தார். ராமானுஜர் கூறினார். மந்திரத்தின் அர்த்தம் தெரிந்தால் எல்லோருக்கும் ஸ்ரீவைகுண்டம். சொன்ன எனக்கு நரகம். அதனாலென்ன, இத்தனை பேர் வைகுண்டம் செல்வார்களே என்றார். அப்போது நம்பி ஸ்ரீராமானுஜரை எம்பெருமானார் என்று அழைத்தார். எம் எஜமான் என்று பொருள். இன்றும் ராமானுஜர் எம்பெருமான் என்றே அழைக்கப்படுகிறார்.

ஞானத்தை அடைய இத்தனை சிரமப்பட்டிருக்கிறார்கள். நானும் அப்படித்தான் அறிவை அடைந்தேன். ஜனக்புரியில் ஜனவரி மாதக் குளிரில் வெந்நீர் வைக்கும் வசதி கூட இல்லாமல் நடுக்கும் குளிரில் பச்சைத் தண்ணீரில் ஐந்து மணிக்குக் குளித்து விட்டு ஆறு மணிக்குக் கிளம்பி வந்தால்தான் காலை எட்டு மணிக்குத் தொடங்கும் திரைப்பட விழாவின் முதல் படத்தைப் பார்க்க முடியும். இரண்டு பஸ் மாற வேண்டும். முதல் படம் லத்தீன் அமெரிக்கப் படமாக இருக்கும்.

இதை உங்களுக்குச் சொன்னால், நீங்கள் இப்போது உங்கள் மொபைல் ஃபோனில் பார்க்க முடியும். ஆனால் என்னிடம் வரத் தயங்குகிறீர்கள்.

என் வயது எழுபத்து மூன்று. இன்னும் எத்தனை ஆண்டுகள் என்று தெரியாது. என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன். இதுவரை என்னை ஓரளவு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் சீனியும் ஸ்ரீயும் மட்டுமே. மற்றவர்கள் என்னை நேரில் சந்திப்பதில்லை.