அதனாலே அவள் இறைவி


1

அவன் அவளிடம்
ஒரு பாதகம் செய்தான்
மன்னிப்பு கோரினான்
ஆனால் மன்னிக்க முடியாதது
உறவை உடைக்கக் கூடியது

கொலை, தற்கொலை—
நிகழ்ந்திருக்கலாம்
ஆனாலும் அறியாமல் செய்த குற்றம்
கன்றைக் கொன்ற சோழனைப் போல
கோவலனைக் கொன்ற சேரனைப் போல

அவள் வார்த்தைகளால் தாக்கினாள்
வசைகள் ஆன்மாவைக் கிழித்தன

சோழனைப் போல் சேரனைப் போல்
அவன் தன்னுயிரை மாய்க்க முடிவு செய்தான்
சாகசமாய் மாத்திரைகள் வாங்கினான்
நண்பனை அழைத்து
காலை பத்து மணிக்கு
அவன் கவிதைகளை இணையத்திலிருந்து
நீக்கச் சொன்னான்—
பொய்யான காரணம் சொல்லி.

காலையில் அவளிடம் வசை தின்றபோது
“நான் உயிரை மாய்த்துக்கொண்டால்
என்ன செய்வாய்?” என்றான்
செத்துப் போவேன் என்றாள்.

அந்த இரண்டு வார்த்தைகள்—
அவளுடையவையா?
அல்லது
மாரதோனாவின் ‘கடவுளின் கை’ போல
அசரீரியின் ஒலியா?

இல்லம் திரும்பி
மாத்திரைகளைத் தூர எறிந்தான்.

இரவு, ஒரு செய்தி வந்தது:
“உன்னைப் புண்படுத்திவிட்டேன்,
நாள் முழுதும் நீ வேதனையில்
இருந்திருப்பாய், மன்னித்துவிடு.”

2

அவன் நண்பன் ஒருவன்
தோழிகளின் தவறுகளுக்கு
நூறு முறை மன்னிப்பு கேட்டவன்
ஒருமுறை, அவன் கேட்ட மன்னிப்பே
அவனுக்கு எதிராகி
சிறையில் தள்ளியது.
நீதிபதி கேட்டார்:
“தவறு செய்யவில்லையெனில்,
ஏன் மன்னிப்பு கேட்டாய்?”

இவனும் அப்படியே—
பெண்களின் தவறுகளுக்கு
நூறு முறை மன்னிப்பு கேட்டவன்
இப்போது, முதல் முறையாக
அவன் பாதகத்துக்கு
அவள் மன்னிப்பு கேட்கிறாள்.