மனதால் நினைந்து…

’நீயெனைப் பிரிந்தால்
உனக்கு இன்னொருத்தி
நீ சொல்வாய்,
பிரேதங்கள் மீது நடந்து செல்வதாக
அந்தப் பிரேத வரிசையிலே
நான் கிடப்பேன் கடைசியாக,
இல்லையா?’

அடியேய்,
நின் பெயரை
மனதால் நினைந்து
வாயால் சொல்லி
நின்றேன் இருந்தேன்
கிடந்தேன் திரிந்தேன்

நாடாத மலர் நாடி
நின் வாடாத மலர் அடிக்கீழ்
வைத்தேன்
கூடவே
நினைந்து நைந்து கரைந்துருகி
புனைந்த என்
கவிதை ஐநூறும் சாற்றினேன்

இதற்கு மேலுமா சந்தேகம்?
சரி, இனியொரு ஐநூறு
புனைவேன்
அப்போதேனும்
நம்புவாயா
என் நந்தா விளக்கமே?

(காலையிலிருந்து நம்மாழ்வாரையும் பெரியாழ்வாரையும் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தோன்றிய கவிதை இது. டி.எஸ். எலியட்டின் இண்டர்டெக்ஸ்சுவாலிட்டி டெக்னிக்கைப் பயன்படுத்தினேன். பல சொற்றடர்கள் இரண்டு ஆழ்வார்களிடமிருந்தும் பெற்றது.)