ஒரு சீமாட்டியின் கதை: வளன் அரசு

எனக்கு ஒரு கேர்ள் ஃப்ரண்ட் இல்லை.

எனக்கு வயது முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நான் இதுவரை எந்தப் பெண்ணுடனும் இருந்ததில்லை. நான் எனக்கான தோழியை தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அமையவில்லை. ஒரு உறவுக்குள் நுழைவதில் எனக்கு சிக்கல் இருக்கிறது. இரண்டு வருடத்து முன் இது நடந்தது, என் வீட்டுக்கு அருகில் இருக்கும் பாருக்கு சென்றிருந்தேன். தனியாக தான் சென்றேன். எனக்கு நண்பர்களும் அவ்வளவாக இல்லை. எல்லாருக்கும் காதலிகள் இருப்பதால் எனக்கான நேரம் கொடுக்க மறுக்கிறார்கள். எனவே நானே சொந்த முயற்சியில் பாருக்கு சென்று ஒரு பெண்ணை பழக்கப்படுத்திக் கொள்ளலாம் என்று தான் சென்றேன். எட் ஷெரின் சொன்னது நினைவிருக்கிறது தானே! The club isn’t the best place to find a lover So the bar is where I go, mm-mm… நினைத்தது போல என்னை ஒரு பெண் நெருங்கி வந்தாள். அவளுக்கு நான் சில காக்டெயில் வாங்கிக் கொடுத்தேன். இருவருக்கும் போதை ஏறியது. அவள் என்னை கட்டியணைத்து முத்தமிட்டாள். எனக்கு பதற்றத்தில் விந்து வெளியேறிவிட்டது. இது தான் என் பிரச்சனை. எனக்கு என் பெற்றோர்கள் சேர்த்து வைத்த மில்லியன் கணக்கான சொத்திருக்கிறது. நானும் ஒரு கார்ப்ரேட் ஆடிட்டராக நிறைய சம்பாதிக்கிறேன். ஆனால் எனக்கென்று ஒரு தோழி இல்லை. என் காதலியுடன் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று எனக்கு கற்பனைகள் இருக்கிறது ஆனால் எனக்கு இதுவரை யாரும் அமையவில்லை. இதனாலே நான் என் குடும்பத்திலிருந்து நண்பர்களிடமிருந்து ஒதுக்கப்படுகிறேன்.

நான் எப்படியிருந்தாலும் என்னை அரவணைத்துக்கொள்ளும் ஒரே பெண் என் ஆன்டீ கில்டா தான். ஆன்டீ கில்டாவுக்கு எழுபது வயது நெருங்குகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் அறுபதுக்கு குறைவாகதான் யாரும் மதிப்பிடுவார்கள். கில்டா அந்தளவுக்கு தன்னை பராமரித்துக்கொள்வாள். உணவு விஷயத்தில் மிகவும் கடுமையாக இருப்பாள். எவ்வளவு தான் வற்புறுத்தினாலும் சில உணவுகளை சுவைப்பது கூட இல்லை. எப்போதும் சீவப்பட்ட கேசம். அலங்கரிக்கப்பட்ட முகம். தேவதையை போல இருந்தாள் ஆன்டீ கில்டா. என் பதின்வயதில் கில்டாவை போல எனக்கொரு காதலி வேண்டும் என்று ரகசியாமாக ஆசைப்பட்டிருக்கிறேன்.

“அங்கிள் ஜார்ஜ், ஆன்டீ கில்டா தூங்கி எழும்போது எப்படியிருப்பாள்?”

கில்டாவின் கணவர் ஜார்ர்ஜுக்கு நான் ஏன் அப்படிக் கேட்டேன் என்று தெரியாமல் சற்றே திகைத்தார். நான் அப்போது பள்ளியின் இறுதியண்டு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் விருந்தில் எல்லோர் முன்னும் இப்படிக் கேட்டது நாகரீகம் அல்ல. என்றாலும் அது என் கேள்வி மட்டும் அல்ல அங்கிருந்தவர் யாவர் மனதிலும் இருந்தக் கேள்வியாக இருந்ததால், யாரும் என்னை இக்கட்டான சூழலிருந்து மீட்க வரவில்லை. மாறாக ஜார்ஜ் என்ன சொல்வார் என்று அவர் முகத்தை பார்த்தார்கள். சூழலை புரிந்துக்கொண்ட ஜார்ஜ் புன்முறுவலுடன் சொன்னார், “தூங்கியெழுந்ததும் அவள் இதைவிட பேரழகாக இருப்பாள்… அதைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு மட்டும் தான் என்பதால் ஒப்பனையிட்டு மறைத்து தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள்” என்றார். என் குடும்பத்தார் யாவரும் சிரித்து ஆர்பரிக்க ஜார்ஜ் கில்டாவை மென்மையாக முத்தமிட்டார்.

ஜார்ஜுக்கு கில்டாவைவிட வயது அதிகம். ஆன்டீ கில்டாவின் வயது சரியாக தெரியததால் ஒப்பிட விரும்பவில்லை. ஆனால் அங்கிள் ஜார்ஜ் சமீபத்தில் தான் தன் தொண்ணுற்றி மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடினார். இருவருக்கும் திருமணம் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிறது. பிறந்தநாளையும் திருமணநாளையும் ஒன்றாக கொண்டாடினார்கள். ஜார்ஜுக்கு வயதின் மூப்பு உடலில் தெரிய தொடங்கியது. மெதுவாக தான் நடப்பார். நான் கடைசியாக ஜார்ஜை பார்த்த போது அவர் நுரையீரலில் துளையிட்டு அதில் கோர்த்திருந்த நீரை வடிகட்டிக் கொண்டிருந்தார்கள். கில்டா ஜார்ஜை மிகக் கவனமாக கவனித்துக்கொண்டாள். ஜார்ஜுக்கு ஏற்கனவே ஒரு திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். மூத்தவன் மகன் பின்னர் இரட்டை பெண் பிள்ளைகள். முதல் மனைவி மார்பக புற்று நோயால் பதிக்கப்பட்டு இறந்தாள். மனைவி இறந்த அதே ஆண்டு இந்தப்பக்கம் ஆன்டீ கில்டாவுக்கு ரேண்டீ திருமணமாகியிருந்தது. கில்டாவின் பெற்றோர்கள் அதாவது என் தந்தைவழி தாத்தா பாட்டியை போலவே ரேண்டியின் பெற்றோர்களும் நகரத்தின் பெரும் பணக்காரர்கள். ஆகவே ஆடம்பரமாக கில்டா ரேண்டியின் திருமணம் நடந்தது. ஆனால் மூன்றே மாதத்தில் விவாகரத்து.

“ரேண்டீ ஒரு இம்பொட்டண்ட். வேறெதுவும் என்னிடம் கேட்காதீர்கள் ப்ளீஸ்” கில்டா மத்தியஸ்தம் பேச வருபவர்களுக்கு பதில் சொல்லி அனுப்பி வைத்தாள்.

அதற்கு பிறகு அங்கிள் ஜார்ஜுடன் திருமணம். மூன்று வளர்ந்த பிள்ளைகள், ஜார்ஜுக்கு அறுபது வயதுக்கு மேல் எதுவும் அப்போது தடையாக இல்லை. பார்த்தவுடன் காதல் உடனே திருமணம். பிள்ளைகள் இல்லை. சில கோல்டன் ரெட்ரீவர்களை ஒன்றன் பின் ஒன்றாக பிள்ளைகளை போல் வளர்த்தார்கள். என்னளவில் அது ஒரு பர்ஃபெக்ட் ரிலேஷன்ஷிப். அப்படியான ஒரு ரிலேஷன்ஷிப்புக்காக தான் ஏங்கினேன்.

தொண்ணுற்றி மூன்றாவது பிறந்தநாளுக்கு பிறகு எல்லாம் தலைகீழானது. ஜார்ஜ் உடல்நிலை மோசமானது. நுரையீரல் பிரச்சனைக்கு பிறகு அவருக்கு நடை தடுமாற்றம் ஏற்பட்டது. அடிக்கடி கீழே விழுந்து கைகால் முறிவு ஏற்பட்டது. அதன்பிறகு ஸ்ட்ரோக். மூன்று மாதத்துக்கு முன் அங்கிள் ஜார்க் இறந்துவிட்டார். ஆன்டீ கில்டாவுக்கு இது ஓர் பேரிழப்பு தான். ஜார்ஜின் இறுதி சடங்கிலும் கில்டா வசீகரமாகவே இருந்தாள். அவளிடம் சோகமிருந்தது. ஆனால் அது வெளிப்பட்டவிதம் அவ்வளவு நளினமாக இருந்தது.

எல்லாம் முடிந்து மூன்று மாதத்துக்கு பிறகு இப்போது ஆன்டீ கில்டா என்னை தன் வீட்டில் உணவருந்த அழைத்திருக்கிறாள். கில்டாவுக்கும் ஜார்ஜுக்கும் குழந்தையாக இருந்த கடைசி கோல்டன் ரெட்ரீவர் இறந்ததும் இனிமேல் நாய்கள் வாங்கப் போவதில்லை என்று முடிவு செய்ததும் என்மீது அந்தப் பாசத்தை வைத்தார்கள். ஜார்ஜ் குறித்து என்ன பேசி அனுதாபம் கூறுவது என்று மனதுக்குள் பேசிக்கொண்டு கில்டாவின் வீட்டுக்கு சென்றேன்.

நான் வீட்டுக்குள் நுழைந்த போது வீட்டின் கீழ் தளத்திலிருந்து ஆன்டீயின் குரல் கேட்டது.

“ஆன்டீ கில்டா… ஐ’ம் ரயன். ஐ’ம் ஹியர்” என் இருப்பை பதிய வைத்து அமைதியாக சென்று அமர்ந்தேன். ஜார்ஜுக்கு பிடித்த ஹைட்ரேஞ்சர் மலர்கள் வாங்கி வந்திருந்தேன். அதை மேஜையில் வைத்துவிட்டு கில்டாவுக்காக காத்திருந்தேன். கில்டா படிகட்டு ஏறி வரும் சத்தம் கேட்டது.

“சாரி ரயன், கீழே வாஷிங் மெஷினை எப்படி இயக்குவது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தேன்” காரணம் சொல்லிக்கொண்டு என்னை கட்டிப்பிடித்து வரவேற்று அழுதாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

முதல்முறை ஆன்டீயை மேக்கப் இல்லாமல் பார்க்கிறேன். காதோரம் நரைமுடிகற்றைகள். நெற்றியிலும் கழுத்திலும் சுருக்கங்கள். ஆனால் இப்போதும் அவ்வளவு வயதானவளாகத் தெரியவில்லை. ஜார்ஜ் சொன்னது போல வேறுமாதிரி அழகாகத்தான் இருந்தாள். கண்கலங்கியதில் மை கலைந்தது. அதை தன் கைக்குட்டையில் ஒற்றி எடுத்து சரிப்படுத்தினாள்.

இளவேனிற்காலம் என்பதால் வெளியில் புல்வெளியில் அமைந்திருந்த மேஜையில் அமர்ந்தோம். அந்த வெயிலுக்கு இதமாக எனக்கான ஜின் அண்ட் டானிக்கை நிறைய ஐஸ்கட்டிகளுடன் நான் எடுத்துக்கொண்டேன். கில்டாவுக்கு குளிர்ந்த வெள்ளை ஒயின்.

கொஞ்ச நேரம் என்ன சொல்வதென்று தெரியாமல் என் பானத்தை நான் பருகிக்கொண்டிருந்தேன். அவளும் எதுவும் சொல்லாமல் ஒயின் அருந்திக்கொண்டிருந்தாள். எங்கள் மௌனத்தை எங்கிருந்தோ வந்த கார்டினல் பறவை கலைத்தது. கருப்பு முகம் அலகும் உடலும் சிவந்த கையளவு பறவை எங்களருகில் தத்தி தத்தி விளையாடியது.

“ஆன்டீ கார்டினல் பறவைகள் நம் இறந்து போன முன்னோர்கள் என்றொரு நம்பிக்கை இருக்கிறது தெரியுமா? நான் வந்திருப்பது தெரிந்ததும் அங்கிள் ஜார்ஜ் வந்துவிட்டதாக நினைக்கிறேன்” என்றேன்

“அந்த சன் ஆஃப் த பிச் என் கனவில் அவனாகவே வருகிறான். ஆகவே அவன் இன்னும் கார்டீனல் பறவையாக மாறவில்லை. ஒருவேளை இது உன் தாத்தாவாக இருக்கலாம்” என்றாள் எனக்கு தூக்கி வாரி போட்டது. ஒரு பர்ஃபெக்ட் கப்புல் என்று நினைத்திருந்தேன் அங்கிளை சன் ஆஃப் த பிச் என்கிறாரே?

“என் வார்த்தைகளுக்காக மன்னிக்கவும்… ஆனால் உன் அங்கிள் எனக்கு பெரிய துரோகத்தை செய்துவிட்டார். நான் அவரை தினம் தினம் நினைத்து வருந்துகிறேன். ஆனால் இப்படி செய்வாரென்று நான் நினைக்கவில்லை.” அவள் கண்களிலிருந்து நீர் பெருகியது.

எனக்கு எதுவும் புரியாமல் குழம்பினேன்.

“இருபத்து ஐந்து வருடமாக நான் அவரைப் பார்த்துக்கொண்டேன். ஆனால் அவருக்கிருந்த பல மில்லியன் சொத்தில் வெறும் ஐம்பதாயிரம் டாலர் மட்டும் தான் எனக்கு. மற்ற எல்லா சொத்தையும் தன் மூன்று பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்…” கட்டுப்படுத்த முடியாமல் அழுதாள் கில்டா.

“அதுமட்டுமல்ல இந்தப் புகைப்படத்தை பார்…” தன் கைபேசியில் தேடி படத்தை என்னிடம் நீட்டினார்

‘ரீட்டா 1935-1991 ஜார்ஜ் 1932-2025’ என்று எழுதப்பட்ட கல்லறையின் நினைவுக்கல்.

“அங்கிளை அவருடைய முன்னாள் மனைவியுடன் அடக்கம் செய்துவிட்டார்களா?” என்று பரிதாபமாக கேட்டேன்.

“அதுமட்டுமல்ல அங்கே சிறிய எழுத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று படி” உத்தரவிட்டாள்

மீண்டும் சரியாக பார்த்த போது இரண்டு பெயர்களுக்கு இடையில் மெல்லிய எழுத்துருவில் ‘அவருடைய அன்புக் கணவர்’ என்று எழுதியிருந்தது. அதாவது ‘ரீட்டா 1935-1991அவருடைய அன்புக் கணவர் ஜார்ஜ் 1932-2025’

“அப்போது இருப்பத்தைந்து வருடமாக பார்த்துக் கொண்ட நான் யார்? ரீட்டா தான் அவர் மனைவி என்றால் நான் பீ மூத்திரம் அள்ளிப்போட்ட வேலைக்காரியா? இது தான் ஜார்ஜ். அவருக்கு என்னுடன் இருக்க வேண்டும் அவ்வளவு தான். மற்றப்படி அவர் உள்ளம் எப்போதும் அவருடைய பிள்ளைகளுடனும் முன்னாள் மனைவியையும் தான் நினைத்துக் கொண்டிருந்தார். அது தான் இந்த சொத்து விவகாரத்திலும் தெரிகிறது.” கடுகடுப்புடன் பேசி அமைதியானாள்.

“அப்படி இல்லை ஆன்டீ கில்டா… ஜார்ஜ் உங்களை முழுமையாக நேசித்தார்…” நான் சொல்லி முடிக்கும் முன் இடைமறித்து,

“ரயன், ஐந்து கிறிஸ்துமஸுக்கு முன் நான் ஜார்ஜ் குடும்பத்துடன் விருந்துண்ண சென்றேன். ஜார்ஜ் முதல் நாளே சென்றுவிட்டார். மகன் வீட்டாரும் மகள்கள் வீட்டாரும் வந்திருந்தார்கள். நான் மாலை நான்கு மணிக்கு சென்றேன். அப்போது ஜார்ஜும் அவர் மகனும் பயங்கர போதையில் இருந்தார்கள். நான் சமயலறையில் மற்றவர்களுக்கு உதவ சென்றேன். என்ன ஆனது என்று தெரியவில்லை. எங்கிருந்தோ வந்த ஜார்ஜின் மகன் என்னை அசிங்க அசிங்கமாக பேசினான்

‘ஏய் பொட்ட நாயே! நீ எங்கடி வந்த? இது என் வீடு வெளிய போடீ’

‘வெளிய போடீ தேவிடியா… உனக்கு என் அப்பன் போதாதா என்னையும் ஓக்க வந்தியா? வெளிய போடீ’

நான் எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியாமல் ஜார்ஜை பார்த்தேன். அவர் சிரித்துக்கொண்டு நின்றிருந்தார்.

‘என்ன ஜார்ஜ் இதெல்லாம்…?’ என்று ஆற்றாமையுடன் கேட்டேன். அவர் என் கார் சாவியை கையில் எடுத்துக் கொடுத்து ‘நீ இப்போது போ… அப்றம் பேசிக்கலாம்’ என்றார். அவர் என்னுடன் சேர்ந்து வந்திருக்க வேண்டாமா? சொல் ரயன்…. குறைந்த பட்சம் அவர் மகனை கடிந்திருக்கலாமே?… இல்லை.”

எனக்கு நெஞ்சுக்குள் இடி இறங்கியது.

“இது தான் ஜார்ஜ். இவருடன் தான் நான் இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தேன்…” விம்மலும் கண்ணீரும் வெளிவந்தது.

மீண்டும் எங்களுக்குள் மௌனம் உறைந்தது.

இருட்ட தொடங்கியதால் வீட்டுக்குள் சென்று அமர்ந்தோம். கில்டா கருப்பு காட் மீனும் காய்கறிகளும் செய்திருந்தாள். மௌனத்தோடே அதை சாப்பிட்டு முடித்தோம்.

உணவு முடிந்ததும் இனிப்புக்கு சீஸ் கேக் செய்திருந்தாள். சீஸ் கேக் பரிமாறப்பட்டதும் காலிங் பெல் சத்தம் கேட்டது.

“ஓ அவர் வந்துவிட்டார்….” வேகமாக தன் அறைக்குள் சென்ற கில்டா முழு ஒப்பனையுடன் திரும்பி வந்தாள். நெற்றி சுருக்கமும் கழுத்து சுருக்கமும் முக்கால்வாசி மறைந்திருந்தது. அவள் வேகமாக கதவை திறக்க ஓடினாள். அவளிடம் தேங்கியிருந்த முதுமை சட்டென வற்றிவிட்டதாக தோன்றியது.

“மைக்கில் கமான் இன்!”

ஊன்றுகோலுடன் உள்ளே வந்த முதியவரை கட்டியணைத்து உதட்டில் முத்தமிட்டாள் கில்டா. முதியவர் இன்னொரு கையில் ரோஜா பூங்கொத்து வைத்திருந்தார்.

அதை வாங்கி முகர்ந்துவிட்டு நான் கொண்டு வந்த ஹைட்ரேஞ்சர் மலர்களுக்கு அருகில் வைத்தாள்.

“மீட் மை நெஃப்யூ ரயன்… ரயன் இது மைக்கில் – என் பாய் ஃப்ரண்ட்” என்று அறிமுகப்படுத்தினாள். நான் செய்வதறியாது மைக்கிலிடம் கைகுலுக்கினேன். அவர் தன் மேட்டிமை தனத்துடன் கைகுலுக்கி வாழ்த்தினார்.

பின்னர் கில்டாவும் மைக்கிலும் அருகருகே அமர்ந்துக்கொண்டு ஒருவரையொருவர் புகழ்ந்து கொண்டார்கள். மைக்கிலின் கை கில்டாவின் தொடைமீதிருந்தது. மைக்கிலுக்கு தொண்ணூறுக்கு மேல் இருக்கும். எனக்கு கூச்சமாகவும் பதற்றமாகவும் இருந்தது.

“ரயன் உன்னை மைக்கிலுக்கு அறிமுகப்படுத்தி வைக்கத்தான் அழைத்தேன். மைக்கேல் ஒரு கான்செர்ட்டுக்கு சென்று வந்ததால் சீஸ் கேக் சாப்பிட வருவதாக சொன்னார்.”

மைக்கில் பெருமிதமாக தலையாட்டிக்கொண்டிருந்தார்.

மைக்கில் தான் ஒரு ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் உருவாக்கியதையும் தனக்கு பிறகு இப்போது அவர்கள் பேரக்குழந்தைகள் பிஸ்னஸை நடத்துவது குறித்தும் பெருமையடித்துக் கொண்டார்.

“எனக்கு இனி எல்லாமே கில்டா தான். நானும் கில்டாவும் அமெரிக்கா முழுவதையும் சுற்றிவர வேண்டும். அது தான் என் பெருங்கனவு.” என்று மைக்கில் முடித்ததும் கில்டா அவரை மெல்ல அணைத்து முத்தமிட்டார்.

நான் சங்கோஜத்தில் நெளிந்துக்கொண்டிருந்தேன். பின்னர் விடைபெற்றுக்கொண்டேன். என்னை வழியனுப்ப கில்டா வாசல் வரை வந்தார். நான் எதுவும் பேசவில்லை.

என் அமைதியை புரிந்துக்கொண்டு கில்டா, “ஜார்ஜ் இறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. அதனால் தான் நான் மைக்கிலை டேட் செய்ய ஆரம்பித்தேன். என்னால் தனிமையில் இருக்க முடியாது. சீக்கிரம் நாங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறோம். நீ தான் மைக்கிலுக்கு பெஸ்ட் மேனாக (துணை மாப்பிள்ளை) இருக்க வேண்டும்” என்றாள் காரில் ஏறி நான் புறப்பட்டதும் எனக்கு கைக்காட்டிவிட்டு உள்ளே சென்றாள் கில்டா. நான் கார் விளக்குகளை போட்டதும் அருகிலிருந்த மரத்திலிருந்து என் காரில் மேல் தாவிக்குதித்த கார்டினல் பறவை என் காரின் முன் கண்ணாடியை கொத்திக் கொத்திக் காட்டியது.

வளன் அரசுவின் மின்னஞ்சல் முகவரி: kingvalan093@gmail.com