தடுக்கி விழுந்தவனைப் பார்த்து கைதட்டி மகிழும் லும்பன்கள்!

டேய் அம்பி,

நீ என்னை அண்ணாவாக பாவித்து என்னை “நீ” என விளித்திருப்பதால் நானும் உன்னை என் தம்பியாக பாவித்து டேய் என விளித்திருக்கிறேன். மற்றபடி உன்னை டேய் என்று திட்டி விட்டேன் என்று குதிக்காதே.

பின்வரும் பதிவை செப்டம்பர் 30 அன்று எழுதியிருந்தேன்:

”இரண்டொரு தினங்களுக்கு முன் மகாபாரதக் கதையில் ஒரு பிழை விட்டேன். பெருந்தேவி சுட்டிக் காட்டி கடிதம் எழுதினார். திருத்திக் கொண்டேன். இப்போது அதைவிடப் பெரும் பிழை, ஸ்வர ராக ஸூதாரஸ கீர்த்தனையை பஞ்ச ரத்னா கீர்த்தனைகளில் ஒன்று எனச் சொல்லி விட்டேன். அந்தப் பிழையைச் சுட்டிக் காட்டி வந்துள்ள கடிதம் கீழே. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இசையில் எனக்கு ரசனை அனுபவம் மட்டுமே உண்டு. ”கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற பாடல் ஒலித்த திராவிட குடும்பத்தைச் சேர்ந்தவன் வேறு. அதனால் பிழைகளுக்குப் பஞ்சமிருக்காது. ஏன் திராவிடக் குடும்பம் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், பிராமணக் குடும்பம் என்றால் நமக்கு இசையில் நாட்டமில்லாவிட்டாலும் வீட்டின் ஒரு மூலையில் யாரோ ஒருத்தர் சங்கீதம் கற்றுக் கொண்டிருப்பார். நம் செவிகளில் அது விழுந்துகொண்டே இருக்கும்.”

ஸ்வர ராக ஸூதாரஸ கீர்த்தனையை பஞ்ச ரத்னா கீர்த்தனை என்று நான் தவறாக எழுதியது செப்டம்பர் 29. மறுநாளே பிழையைத் திருத்தி ஒரு கடிதம் வந்தது. அதை அன்றைய தினமே வெளியிட்டு என் பிழைகள் பற்றியும், என் போதாமை பற்றியும் எழுதினேன். அது கீழே:

”இப்படி பஞ்சரத்னா கீர்த்தனைகள் என்ன என்று கூடத் தெரியாதவன் தியாகராஜரைப் பற்றி ஒரு நாவல் எழுத வந்து விட்டானே என்று கூட இந்நேரம் பரவலாக விமர்சனம் வந்திருக்கும். திரும்பவும் சொல்கிறேன். நாவலில் பிழை இருக்காது. சரியானபடி பிழை திருத்தம், எடிட்டிங் எல்லாம் செய்த பிறகுதான் நாவல் வெளிவரும். தியாகராஜர் பற்றி சாரு என்ன எழுதி விட முடியும் என்று கேட்கும் அன்பருக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன். தியாகராஜர் 96 லட்சம் தடவை ராமநாமம் ஜெபித்து விட்டார். ராமன் வரவில்லை. ஏன் வரவில்லை, ஏன் என்னை இப்படி வதைக்கிறாய் என்று கேட்டு கீர்த்தனை மழை பொழிந்தும் ராமன் வரவில்லை. தியாகராஜரின் அப்போதைய மனநிலை பற்றி மட்டுமே என்னால் நூறு பக்கம் எழுத முடியும். அதற்கு இசை ஞானம் தேவையில்லை. இலக்கியம் தெரிந்தால் போதும். அதேபோல் ஒரு கட்டத்தில் தியாகராஜர் ராமனையும், சீதையையும், ஹனுமனையும் பார்க்கிறார். தியாகராஜரின் அப்போதைய மனநிலை பற்றியும் ஒரு நூறு பக்கம். சர்ஃபோஜி மன்னர் தியாகராஜரின் உஞ்சவிருத்திப் பையில் பொற்காசுகளைப் போடச் சொல்லி சிப்பந்தியை அனுப்புகிறார். சிப்பந்தியும் மன்னர் சொன்னபடி செய்கிறான். வீட்டுக்குள்ளே வந்து பைக்குள் பொற்காசுகள் இருக்கக் கண்டு அதைத் தெருவில் கொண்டு போய் போட்டு விட்டு வந்த தியாகராஜரின் அப்போதைய மனநிலை பற்றி ஒரு இருநூறு பக்கம் எழுதலாம்.

இப்போது பிழை பற்றிய கடிதம். என் கட்டுரையில் பிழைகள் இருந்தால் (நிச்சயம் இருக்கும்) உடனடியாகத் திருத்தலாம். எனக்கு எழுதலாம். இந்த விஷயத்தில் உங்கள் யாருக்கும் தயக்கமே வேண்டாம். முன்பு நான் ஏன் கோபமாகவும், தூஷணை வார்த்தைகளிலும் எழுதினேன் என்றால், தியாகராஜர் பற்றி சாரு எழுத என்ன இருக்கிறது என்று கேட்டதால்தான். தமிழ்க் கலாச்சாரத்துக்கு வெளியே இருக்கும் வெள்ளைக்காரரான ஜாக்ஸன் எழுதலாம், 55 ஆண்டுக் காலம் சங்கீதம் கேட்டுக்கொண்டிருக்கும் நான் எழுதக் கூடாதா என்ற கோபமே அந்த எதிர்வினைக்குக் காரணம். என் அளவுக்கு ஒரு எருமை சங்கீதம் கேட்டிருந்தால்கூட அந்த எருமைக்கு சங்கீத ரசனை வந்திருக்கும் என்பது என் அபிப்பிராயம்.

RESPECTED AND DEAR CHARU,

adiyen abhivaathanam and namaskarams.

This is the first letter adiyen is writing to you, after going through your blog from 2014….i require your pardon for differing from you in your Sept.29th art Swara Raaga Sudha Rasa….adiyen kindly wish to suggest the following lines for your kind consideration…
The Pancharatna Kritis by Saint Thyagaraja are a set of five famous songs in Carnatic music: Jagadanandakaraka, Dudukugala Nanne, Sadhinchene, Kanakana Ruchira, and Endaro Mahanubhavulu. These compositions are notable for being set in the five Ghana Ragas, which are Nata, Goula, Arabhi, Varali, and Sri, respectively
if you find this letter wrong or arrogant,

kindly KSHAMA KARNA please

NAMASKARAM

S.R. SUNDARAKRISHNAN, MADURAI

Dear Sir,

மேற்கண்ட முக்கியமான பிழையை சுட்டிக் காட்டியதற்கு மிகவும் நன்றி. இனிமேலும் பிழைகள் இருந்தால் அதை சுட்டிக் காட்டுவதில் எந்தத் தயக்கமும் வேண்டாம்.

தங்கள் ஊழியன்,

சாரு”

இத்தனை நீண்ட விளக்கத்துக்குப் பிறகும் டேய் அம்பி, நீ இது பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் செப்டம்பர் 30 அன்றே என் தவறு பற்றிக் கேலி செய்து விஷமத்தனமாக எழுதியிருக்கிறாய். அதாவது, விக்கிப்பீடியாவைப் பார்த்து நான் எழுதியதால்தான் பிழை விட்டிருக்கிறேன் என்கிறாய். டேய் அம்பி, விக்கிப்பீடியா எல்லாம் காணாமல் போய் ரொம்ப காலம் ஆகிறது. இப்போது சாட் ஜிபிடி, க்ரோக் என்று ஏகப்பட்ட செயற்கை நுண்ணறிவுகள் வந்து விட்டன. இம்மாதிரி சிறு விவரங்களையெல்லாம் அதிலிருந்தே எடுக்கலாம். நான் அப்படிச் சரி பார்க்கத் தவறி விட்டேன்.

இன்னொரு விஷயம். நான் உன்னைப் போல் அறிவாளி அல்ல. எனக்குப் பல விஷயங்கள் தெரியாது. மஹாத்மா காந்தியின் பெயரையே ஒருமுறை கரம்தாஸ் மோகன்சந்த் காந்தி என்று எழுதி, அது அப்படியே பத்திரிகையிலும் வந்து விட்டது. பிறகு வருத்தம் தெரிவித்தேன். இன்னொரு முறை, கொச்சியில் நடந்த ஒரு பெரிய இலக்கிய விழாவில் நான் மேடையிலிருந்து பேசுகிறேன். என் மறதி பற்றி இப்படிக் குறிப்பிட்டேன்:

”ஒருநாள் பத்திரிகை ஆசிரியரோடு பேசிக்கொண்டிருக்கையில் “நாளை புத்தகத்தைக் கொடுத்தனுப்ப முடியுமா?” என்று கேட்கிறேன். நாளை ஆகஸ்ட் பதினைந்தாயிற்றே, விடுமுறை என்கிறார் ஆசிரியர். இப்படி ஆகஸ்ட் பதினைந்து ரிபப்ளிக் டே என்பது கூட எனக்கு மறந்து போகிறது.”

பார்வையாளர்கள் அப்போது சிரித்தார்கள். பேசி முடித்த பிறகு ஏன் சிரித்தார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

இப்படியாக நான் அவ்வப்போது தடுக்கி விழுவதுண்டு. அப்படித்தான் பஞ்சரத்னா கீர்த்தனை விஷயத்திலும் விழுந்தேன். அதை ஒரு பெரியவர் எப்படி எதிர்கொண்டார் என்பதை மேலே உள்ள கடிதத்தைப் பார்த்து நீ தெரிந்து கொள்ளலாம். விநயம் என்றால் என்ன என்று அந்தக் கடிதத்தில் ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் நடந்திருக்கிறது.

நீ என்னை உன் அண்ணாவாக நினைத்து நீ என்று விளித்திருந்தாலும் உன் கிண்டலில் ஒரு லும்பன்தனம்தான் தெரிகிறது. தடுக்கி விழுந்தவனின் புடுக்கைப் பார்த்துக் கெக்கலி கொட்டிச் சிரிக்கும் லும்பன்தனம் அது. உன் அடிதடிப் பதிவின் கடைசிப் பத்தி இது:

”நான் தியாகராஜாவைப் பத்தி எழுதினா உங்களுக்குப் பிடிக்காதே! எட்றா அந்த பார்ப்பன துவேஷ டெம்பிளேட்ட!” என்று நான் சொல்வதாக எழுதியிருக்கிறாய்.

உன் கற்பனையில் கொள்ளி வைக்க!

ஏண்டா அம்பி, உனக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்? தமிழ் இந்து ஆரம்பித்த புதிதில் சமஸ் தன் கட்டுரைகளில் பார்ப்பனர்கள் என்றே குறிப்பிடுவது வழக்கம். நான் அவரைத் தொலைபேசியில் அழைத்து, அந்த வார்த்தை இப்போது வசை வார்த்தையாக மாறி விட்டது என்றும் பிராமணர் என்றே குறிப்பிடும்படியும் அரை மணி நேரம் விளக்கினேன். அன்றிலிருந்து அவர் பிராமணர் என்றே எழுதுகிறார்.

நடிகர் விவேக் சினிமா காமெடியில் பிராமணர்களையும் ஹிந்து மதத்தையும் பகடி என்ற பெயரில் கொச்சைப்படுத்திக்கொண்டிருந்த போது அதைக் கண்டித்து எழுதினேன். இப்படி சுமார் ஐம்பது சம்பவங்கள். இதனாலெல்லாம் என்னை பிராமண அடிவருடி என்று சொல்கிறார்கள். நீயும் உன்னைப் போன்றவர்களும் என்னை பார்ப்பன துவேஷி என்கிறீர்கள். இதிலிருந்து உன் அறிவுக்கு என்ன தெரிகிறது? எதார்த்தவாதி வெகுஜன விரோதி! நான் யார் பக்கமும் இல்லை. நியாயத்தின் பக்கத்தில் நின்று மட்டுமே பேசுவேன்.

மேலும், பஞ்சரத்னா என்று குறிப்பிடுவது விக்கிபீடியாவைப் பார்த்து அல்ல. நீ நினைப்பது போல் நான் இந்த நாவலைத் தமிழில் எழுதவில்லை. ஆங்கிலத்தில்தான் எழுதுகிறேன். பிறகு தமிழில் மொழிபெயர்ப்பேன். சரியா?

மேலும், நீ ஒருவனைத் தாக்குவதற்கு முன்னால் அவன் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஸீரோ டிகிரி, ராஸ லீலா, பெட்டியோ போன்ற நாவல்கள் உலக இலக்கிய அரங்கில் எந்த இடத்தில் இருக்கின்றன என்று உனக்குத் தெரியுமா? அந்த என் பயோடேட்டாவை எழுதி எழுதி எனக்கு அலுத்து விட்டது. இதைத்தான் அந்தக் காலத்து பிராமண புத்தி என்கிறேன். எதிரே நிற்பவன் பற்றி எதையுமே அறிந்து கொள்ளாமல் அவனைத் தீண்டத்தகாதவனைப் போல் நடத்துவது. ஸீரோ டிகிரி இந்தியாவில் எழுதப்பட்ட ஐம்பது சிறந்த படைப்புகளில் ஒன்றாக ஆங்கில விமர்சகர்கள் மதிப்பிட்டு அதை ஃபிஃப்ட்டி புக்ஸ் ஃபிஃப்ட்டி ரைட்டர்ஸ் என்ற தொகுப்பு நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

நான் எழுதுவது இசை நூல் அல்ல. அது ஒரு நாவல். நீ சமகாலத்து இலக்கிய நூல்களை ஒன்று கூடப் படிக்காத நிரட்சர குட்சி என்பது நீ எழுதியுள்ள சிறுகதையிலிருந்தே தெரிந்து கொண்டேன். எனக்கு ராக ஞானம் கிடையாது. எந்த ராகத்தையும் அது இன்ன ராகம் என்று சொல்லத் தெரியாது. இசைக் கணிதம் தெரியாது. அதனால் கச்சேரிகளுக்குப் போய் நான் மட்டுமே தொடை தட்டாமல் அமர்ந்திருப்பேன்.

ஆனால் உன்னைப் போன்ற இசை நுண்ணுணர்வு அற்றவர்களை விட எனக்கு நுண்ணுணர்வு அதிகம். அதனால்தான் என்னால் இப்போதைய பாடகர்கள் பலரை ரசிக்க முடியவில்லை. இன்றைய பாடகர்கள் இளைஞர்களுக்குத் தேவையானபடி இலக்கணச் சுத்தமாகவும், தொழில்நுட்பத் திறனுடனும் பாடுகிறார்கள். இவர்கள் ஆன்மாவிலிருந்து பாடவில்லை. இவர்களின் இசையில் ஆன்மா இல்லை. தொழில்நுட்பம் மட்டுமே தெரிகிறது. ஆன்மாவிலிருந்து பாடியவர்கள் என ஒரு சிலரை என்னால் சொல்ல முடியும். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்மங்குடி சீனிவாச அய்யர், ஜி.என்.பி., மதுரை மணி அய்யர், மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யர், முசிறி சுப்ரமணிய அய்யர், எம்.டி. ராமநாதன், கே.வி.என்., சித்தூர் சுப்ரமணிய பிள்ளை, ட்டி.எம். தியாகராஜன். இவர்களையெல்லாம் கேட்டு விட்டு என்னால் இப்போதைய பாடகர்களைக் கேட்கவே முடியவில்லை. ட்டி.எம். கிருஷ்ணா அற்புதமான பாடகர். ஆனால் அவர் ஸ்ரீசூர்ணத்தை அழித்ததிலிருந்து பாடுவதை ரசிக்க முடியவில்லை. நீயோ மச்சானைப் பாத்தீங்களா, மலவாழைத் தோப்புக்குள்ளே போன்ற மகா உன்னதமான கீர்த்தனைகளுக்கு இசையமைப்பவர்களையெல்லாம் மேதை என்கிறாய்! பேஷ்!

சுருக்கமாகச் சொன்னால், ஒரு மகத்தான சங்கீதக் கலைஞனைப் பற்றி எழுத சங்கீத ரசனையில் நுண்ணுணர்வு இருந்தால் போதும். ராகங்களின் பெயர் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அந்த டேட்டாவை மனப்பாடமாக வைத்துக்கொண்டு எருமைகளை ரசித்துக்கொண்டிருப்பதை விட ராகங்களின் பெயர் தெரியாத ஒருவர், தன் ஆன்ம வெளியில் சங்கீதம் என்ற அற்புதத்தைக் கொண்டு சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்களோடு ஒன்றி விட முடியும்.

இப்படிக்கு,

சாரு நிவேதிதா

https://www.facebook.com/share/p/1DkKcwgL8a/