கல்பாறை: குர்மாத்: இரு மகாத்மாக்கள்: ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் (சிறுகதை)

(இதே கதையின் முந்தைய படிவத்தில் சில முக்கியமான விவரங்களை விட்டு விட்டேன்.  கடும் பசியுடன் எழுதியதால் அந்த விடுபடல்.  இப்போதைய பிரதியை வாசிக்கும்படி வேண்டுகிறேன்.)

டிசம்பர் 18 என் பிறந்த நாள் எப்போதும் போலவே கொலைப்பசி காலையுடன் தொடங்கியது. காரணம் நான்தான். வழக்கம் போல் காலை நடையை முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பினேன். திரும்பும்போது மணி ஒன்பது. வந்ததும் பூனைகளின் மலஜல மண்ணை எடுத்து மூட்டை கட்டி வெளியே வைத்து விட்டுத்தான் மறு வேலை. அன்றைக்கும் அதேதான். உடனே சின்ன வெங்காயத்தை நறுக்கி நீராகாரத்தில் போட்டு மாகானிக் கிழங்கு ஊறுகாயுடன் மூன்று டம்ளர் குடிப்பேன். ஆனால் அன்றைய தினம் நீராகாரம் இல்லை. காரணம், அதற்கு முந்தின தினம்தான் நானும் கண்ணனும் மற்றொரு நண்பரும் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபாவில் அறுசுவை அரசுவின் விருந்துக்குச் சென்றிருந்தோம். அதனால் சோறு செய்யவில்லை. அதனால் மறுநாள் நீராகாரம் இல்லை. இட்லி மாவு இருந்தது. சட்டென்று இட்லியோ தோசையோ போட்டு சாப்பிட்டிருக்கலாம். ஆனால் பிறந்த நாள் ஆயிற்றே? இன்றைக்குமா வெறும் இட்லியும் மிளகாய்ப் பொடியும் என்று கலங்கினேன். வர்ஷா கொடுத்த மிளகாய்ச் சட்னி இருந்தது. அதையும் தினந்தோறும் சாப்பிட்டிருந்தேன். அமிர்தமே என்றாலும் தினமும் சாப்பிட முடியுமா? அதனால் இன்று தக்காளி சட்னியுடன் இட்லி சாப்பிடலாம் என்று முடிவெடுத்தேன்.

தக்காளி, வெங்காயமெல்லாம் நறுக்கினேன். மணி பத்தரை. முந்தின நாள்தான் அவந்திகா துபயிலிருந்து வந்திருந்தாள். நள்ளிரவில் படுத்தது. எழுந்து வந்தவள் நான் வெங்காயம் தக்காளி நறுக்குவதைப் பார்த்து விட்டு, “என்னப்பா, சபாவிலிருந்து சாப்பாடு வாங்கி வருவதாகச் சொல்லியிருந்தாயே?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

எனக்கும் அதைக் கேட்டு அதிர்ச்சியாயிற்று. ”ஐயோ, லஞ்ச் அல்லவா வாங்கி வருவதாகச் சொல்லியிருந்தேன்?” என்றேன். பிறந்த நாளும் அதுவுமாக அந்தக் கூட்டத்தில் போய் எவன் நிற்பது என்று தோன்றியது. சபாக்களில் சாப்பாட்டுக் கச்சேரிக்கான கூட்டம் ஒரே தள்ளுமுள்ளாக இருந்தது. சரி, மதியத்துக்கு சபாவுக்குப் போய் பார்சல் வாங்கி வந்து விடுவோம் என்று திட்டமிட்டேன்.

பசிக்கிறது என்றாள். தயாராக இருந்த இட்லியையும், சட்னியையும் அவளுக்குக் கொடுத்து விட்டு நான் தோசை போட்டுச் சாப்பிட்டேன். மணி பதினொன்று. சட்னிக்கு ஆசைப்பட்டது தவறாயிற்று. கொலைப்பசியில் மயங்கி விழும் நிலையில் நானே தோசை போட்டுச் சாப்பிட வேண்டியிருந்தது.

வாட்ஸப்பில் இருநூறு நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பியிருந்தார்கள். ஒன்றிரண்டு நண்பர்கள் பணமும் அனுப்பியிருந்தார்கள். சுரேஷ் ஆஸ்திரேலியத் தேனும், ஒரு வாசகி சாக்லெட்டும் அனுப்பியிருந்தார்கள். இரண்டு நண்பர்கள் அற்புதமான சட்டை அனுப்பினார்கள்.

ஒரு நண்பர். அவருக்கு நான் கல்பாறை என்ற புனைப்பெயர் இட்டிருக்கிறேன். அவரிடமிருந்து சொல்லே வராது. செயலில் மட்டுமே நம்பிக்கை கொண்டவர். செயல்வீரனும் கூட. (சட்டை அனுப்பிய இருவரில் ஒருவர்.) ஆனால் தொலைதூரத்தில் இருந்துகொண்டு என் விஷயத்தில் செயலில் ஈடுபட சந்தர்ப்பம் கம்மிதானே? சொல்லாவது வரலாமே என்பேன். சொல்லில் நம்பிக்கை இல்லை என்பார். அவர் உலகில் சொல் செத்து விட்டது.

இந்தக் கல்பாறை பற்றி அனாடமி நாவலில் ஏகமாக எழுதிக் குவித்திருக்கிறேன். அதனால் இங்கே அதிகம் வேண்டாம். அந்தக் காலத்தில் பேனா நட்பு என்ற ஒன்று இருந்தது. கடிதத்தின் மூலம் மட்டுமே நண்பர்களாக இருப்பார்கள். சாகும் வரை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்காது. நான் அந்தப் பேனா நட்பை பானா நட்பு என்று அழைப்பது வழக்கம். பா என்பதை பால் (பந்து), பால்ஸ் (அர்த்தம் தேவைப்படாது) என்ற வார்த்தைகளில் வரும் ‘ப’வைப் போல் உச்சரிக்க வேண்டும். பானா நட்பு. பானா என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. நாகூருக்கு என்று ஒரு தனித்த பேச்சு வழக்கு உள்ளது. அதில் பானா என்றால் டோங்கா என்று பொருள். டோ என்பதை டாங்கி, டில்டோ என்ற வார்த்தைகளில் வரும் ட போல் உச்சரிக்க வேண்டும். ஓ, உங்களுக்கு டோங்கா என்றாலும் தெரியாது. அதுவும் நாகூர் பாஷைதான். அந்தக் காலத்தில் ஹெர்னியாவுக்கு அறுவை சிகிச்சை இல்லையோ என்னவோ. சிலருக்கு விதைக்கொட்டை பலாக்காய் மாதிரி பெரிதாகி விடும். அந்த ஜாமானைத்தான் பானா என்றும் டோங்கா என்றும் அழைப்போம். பேனா நட்பின் மீது கொண்ட அசூயையின் காரணமாகவே அதற்கு பானா நட்பு என்று பெயர் சூட்டினேன்.

கல்பாறை என்னோடு அப்படிப்பட்ட பானா நட்பு பூண்டவர். அப்போதைய பேனாவுக்கு இப்போதைய ஈடு வாட்ஸப்.

மறந்து விடாதீர்கள். கல்பாறை சொல்லில் நம்பிக்கை இல்லாதவர். செயல் வீரர்.

நானோ சொல்லில் வாழ்பவன். அப்படிப்பட்ட நானே டிசம்பர் பதினெட்டு அன்று சொல்லை வெறுத்து விட்டேன். அன்றைய தினம் எனக்குக் கிடைத்த சொற்கள் என் பசியாற்றவில்லை. ஹேப்பி பர்த்டே சாரு. இப்படி இருநூறு பேர். இந்த இருநூறு நண்பர்களுக்கும் இன்றோ நாளையோ நான் நன்றி என்ற சொல்லை அனுப்பியாக வேண்டும். என்னை அன்றைய தினம் அவர்கள் நினைத்திருக்கிறார்கள். வாழ்த்தியிருக்கிறார்கள். நன்றி மறப்பது நன்றன்று. ஏன் உடனடியாக நன்றி அனுப்பவில்லை? கடந்த பத்தாண்டுகளாக நண்பர் ஸ்ரீராம் என் கதைகளையும் கட்டுரைகளையும் சரி பார்த்து, தொகுத்து அனுப்பியவண்ணமாக இருக்கிறார். இருபது புத்தகங்கள் சேர்ந்து விட்டன. இதோ அதோ என்று பத்தாண்டுகள் கடந்து விட்டன. இனியும் தாமதம் செய்யலாகாது என்று அந்த நூல்களை செப்பனிடும் பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டேன். இரண்டு நூல்களை பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன். மாயமான் வேட்டை என்ற சிறுகதைத் தொகுப்பு. இஞ்சி சுக்கு கடுக்காய் என்ற கட்டுரைத் தொகுதி. அதற்கு நான் எழுதிய முன்னுரையில் 2021 என்று வந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய முன்னுரை. இப்போது மயன் மாளிகை என்ற கட்டுரைத் தொகுதியை செப்பனிட்டுக்கொண்டிருக்கிறேன். (இந்த நூல்களையெல்லாம் எப்போதும் போல் அறுபது பிரதிகள் வாங்கி எனக்குப் பேராதரவு நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.) இந்த வேலையினால்தான் உடனடியாக நன்றி தெரிவிக்க முடியாமல் போனது.

இருநூறு பேரின் ஹேப்பி பர்த்டே சாரு. மூன்றும் இருநூறும் அறுநூறு வார்த்தைகள். இந்த அறுநூறு வார்த்தைகளால் என் ஒருத்தனின் பசியை ஆற்ற முடியவில்லை. இருநூறு பேரில் ஒருவருக்குக் கூட ஒரு கேக்கை அனுப்பலாம் என்று தோன்றவில்லை. முதல் நாள் அனுப்பியிருந்தால் பிறந்த நாள் அன்று காலையில் பட்டினி கிடக்க நேர்ந்திருக்காது. அன்றைய தினமும் ஸ்விக்கி மூலம் காய்ந்த இட்லியை வாங்கிச் சாப்பிட மனம் ஒப்பவில்லை. லட்சங்களில் புரள்பவர்கள் கூட ஹேப்பி பர்த்டே என்ற வார்த்தையைத்தான் அனுப்பினார்கள்.

எனக்கு உதவிக்கொண்டிருக்கும் நண்பர்கள் இதைப் படித்துத் தவறாக எண்ணக் கூடாது. ஒரு நண்பர் என் மாதாந்திர வாகனச் செலவாக ஐம்பதாயிரம் செலவு செய்கிறார். ஜனவரியில் மட்டும் புத்தக விழாவுக்குச் செல்வதற்காக அந்த வாகனச் செலவு ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயைத் தாண்டி விடும். மதியம் பன்னிரண்டிலிருந்து இரவு பன்னிரண்டு வரை வாகனக் கட்டணம் போட்டுக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அது போன்ற நண்பர்களைச் சொல்லவில்லை. வெறுமனே வார்த்தைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களைக் கேட்கிறேன். பிச்சைக்காசு ஐநூறு ரூபாய்க்கு ஒரு கேக் அனுப்பக் கூடாதா? மைலாப்பூரில் உள்ள பத்மஸ்ரீ ஃபூட்ஸ் என்ற கடையின் கேக் அதியற்புதமாக இருக்கும்.

மதியம் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபாவுக்குப் போய் அறுசுவை அரசுவின் உணவை பார்சல் வாங்கிக்கொண்டு வரலாம் என்று கிளம்பினேன். அவந்திகா பார்சல் வேண்டாம், நானும் வருகிறேன் என்றாள்.

போனோம். ஆட்டோ டிரைவர் தெரிந்தவர். எப்போதும் எங்கள் இருவரையும் அழைத்துச் செல்பவர். அவர் ஒரு மகாத்மா. ஆட்டோ குழுமத்தில் அது ஒரு நம்ப முடியாத விஷயம். ஆனால் மகாத்மா என்பதில் சந்தேகமே இல்லை. ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா வாசலில் இறங்கிய கையோடு அவந்திகா ஆட்டோ டிரைவரிடம் “நீங்களும் எங்களோடு சாப்பிடுங்கள்” என்றாள். டிரைவரோ “நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன், நீங்கள் போய் சாப்பிடுங்கள்” என்று விநயமாகச் சொன்னார். “அந்த சாப்பாட்டை நீங்கள் இரவுக்கு வைத்துக்கொள்ளுங்கள், இது விசேஷமான சாப்பாடு, நீங்கள் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்” என்று வற்புறுத்தினாள். அவர் திரும்பவும் விநயமாக மறுக்க, இவள் திரும்பவும் வற்புறுத்த இந்த நாடகம் ஒரு ஐந்து நிமிடம் ஓடியது. கடைசியில் அவந்திகா டிரைவரை சம்மதிக்க வைத்து விட்டாள். (டிரைவருக்கு வேறு வழி?)

ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபாவில் ரஜினி, விஜய், அஜித் படத்தின் முதல் நாள் பட ரிலீஸ் அளவுக்குக் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அவந்திகா கொலைவெறி ஆகி விட்டாள். ஸ்ரீ வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவளுக்கும் கமல்ஹாசன் போலவே பிராமணத்துவம் பிடிக்காது. கடுமையான விமர்சனங்களைக் கொண்டவள். அங்கோ சாப்பிட வந்திருந்த இரண்டாயிரம் பேரில் ஆயிரத்து ஐநூறு பேர் பிராமணர். மீதி ஐநூறு வட இந்திய சேட்டு குடும்பங்கள். காரணம், அங்கே பூண்டு வெங்காயம் இல்லாத சமையல்.

”இப்படியுமா சாப்பிட வேண்டும், இவர்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லை?” என்று கத்தி விட்டு, உடனடியாகக் கிளம்பி விட்டாள். கொஞ்ச நேரம் க்யூவில் நின்று பார்க்கலாமே என்றேன். ஏனென்றால், நான் ஒரு கடைந்தெடுத்த பிராமண அடிவருடி என்பது போலவே பிராமண உணவுக்கும் அடிமை. அதிலும் முந்தின நாள் இருபது அய்ட்டங்கள் கொண்ட உணவு. பட்டப்பாவின் கிட்டத்தில் கூட வர முடியாது என்றாலும், சுவையாகத்தான் இருந்தது.

இன்று உன் பிறந்த நாள் என்பதால் சும்மா விட்டேன் என்றாள் அவந்திகா. அவளுக்கு இப்படிக் கூட்டத்தில் அடித்துப் பிடித்து சாப்பிடுவது அறவே பிடிக்காது.

நல்லவேளை, இவள் நேற்று எங்களோடு இங்கே வரவில்லை, வந்திருந்தால் நிச்சயம் அடிதடி ஆகியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.  அது ஒரு அவல நாடகம்.

நானும் கண்ணனும் கண்ணனின் நண்பரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.  இருபது அய்ட்டங்கள்.  அப்போது ஒரு அமெரிக்கையான அம்மாள் படு தோரணையுடன் வந்து சந்திரமுகி ஜோதிகா ஸ்டைலில் ஏய் என்று ஒரு சத்தம் போட்டார்.  அவர்தான் அந்த சாப்பாட்டு நிறுவனத்தின் எஜமானி அல்லது எஜமானனின் மனைவி என்று அவர் தோரணையிலேயே தெரிந்தது.  அவர் ஏய் என்று கூப்பிட்டது அங்கே பரபரவென்று பறந்து பறந்து பரிமாறிக்கொண்டிருந்த பரிசாரகர்களில் ஒருத்தரை.  ஏற்கனவே சொன்னேன், அங்கே வந்திருந்தவர்கள் அனைவருமே அப்போதுதான் சொர்க்கத்திலிருந்து இறங்கியவர்கள் போல் தோற்றம் கொண்டிருந்தார்கள்.  தொட்டால் ரத்தம் வந்து விடும் நிறம்.  ஆனால் அங்கே பறந்து கொண்டிருந்த பரிசாரகர்கள் அனைவரும் பஞ்சத்தில் அடிபட்டவர்களைப் போல் இருந்தார்கள்.  சருமமும் எண்ணெய்ப் பசையே இல்லாமல், வறண்டு போயிருந்தது.  கருத்த நிறம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.  அப்படிப்பட்ட ஒருவரைத்தான் அந்த தேவலோகத்துப் பெண்மணி ஏய் என்று கத்திக் கூப்பிட்டார். 

“உனக்கு அறிவில்லையா, இங்கே அப்பளம் போடணும்னு உனக்குத் தெரியாதா?  போட்றா…”

திருவாளர் கல்பாறை அவர்களே, சொல்லின் வலிமை தெரியாமல் இருக்கிறீர்களே, அந்த இடத்தில் அந்த தேவலோகத்துப் பெண்மணியின் திருவாயிலிருந்து நெருப்பு கொட்டியது.  அதைக் கேட்டதும் என் இலையிலிருந்த உணவு பீயாக மாறியதை அறிவீர்களா?  ஒரே ஒரு சொல்.  ஏய்.  என் உணவைப் பீயாக மாற்றியது.

இதுவே ஒரு ஐரோப்பிய தேசமாக இருந்திருந்தால் அங்கே ஒரு ரகளை நடந்திருக்கும்.  ஏன், அவந்திகா இருந்திருந்தாலே ஒரு பெரும் ரகளைக்கு உத்தரவாதம்.  இதைத்தான் அவந்திகா வெறுக்கிறாள்.  இதைத்தான் பிராமணத்துவம் என்கிறாள்.  இன்னமுமா நாம் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்கிறோம்?

சரி, நீங்கள் என்னைக் கேட்பீர்கள், இப்படி உணவே பீயாக மாறின இடத்துக்கா மறுபடியும் செல்லத் துணிந்தீர்கள் என்று.  என்ன செய்வது, நான் பெண்கள் மற்றும் உணவு ஆகிய இரண்டிலும் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே இல்லாதவன்.  பேட் அவ்ர் பேட் கே நீச்சே.  கபர்தார்.   

ஆட்டோவில் கிளம்பி சவேரா மால்குடி போனோம். மால்குடியின் உணவு அவந்திகாவுக்கு ஒத்துக் கொள்ளும். மால்குடி மட்டும்தான் ஒத்துக் கொள்ளும். வேறு எங்காவது சாப்பிட்டால் வயிற்றுக்குக் கேடு உண்டாகும்.

சவேராவின் வாசல். ஆட்டோவிலிருந்து இறங்கினோம்.

மகாத்மா காந்தி பற்றி உங்களுக்குத் தெரியாதது இல்லை. ஆனால் கஸ்தூர் பா பற்றித் தெரியுமா? சபர்மதி ஆசிரமத்துக்கு வந்த திருடன் பற்றித் தெரியுமா? ஒரு மகாத்மாவுடன் வாழ்வது எப்பேர்ப்பட்ட கொடுமை தெரியுமா?

ஆட்டோ டிரைவரையும் சவேரா மால்குடியில் சாப்பிட அழைத்தாள் அவந்திகா. மகாத்மா ஐயா, மகாத்மா. நானுமே ஒரு எக்ஸ் மார்க்ஸிஸ்ட்தான். இன்னமும் என்னிடம் மார்க்சீய ஹேங்க் ஓவர் உண்டுதான். இருந்தாலும் சவேரா மால்குடிக்கு ஆட்டோ டிரைவரை அழைத்துச் செல்லும் அளவுக்கு நான் மார்க்ஸிஸ்ட் இல்லை. முதலில் அம்மாதிரி நட்சத்திர ஓட்டல்களில் ட்ரெஸ் கோட் உண்டு. ஆட்டோ டிரைவரை அனுமதிக்க மாட்டோம் என்று ஓட்டலில் சொல்லி விட்டால் அது எத்தனை பெரிய அவமானம்? அப்படி நடந்திருந்தால் அங்கே ஒரு புரட்சியே வெடித்திருக்கும். பிறந்த நாளும் அதுவுமாக நான் ஒரு புரட்சித் தீயில் குதித்திருப்பேன். இந்தியா பாகிஸ்தான் போரில் நடுவில் மாட்டிக்கொண்ட கிராமத்துக்காரன் மாதிரி குண்டடி பட்டுச் சாக வேண்டியதுதான்.

இந்த விஷயத்தை நான் அவந்திகாவிடம் சொல்லவும் முடியாது. சொன்னால் இனிமேல் சவேரா இருக்கும் தெருப்பக்கமே வர மாட்டேன் என்று சொல்லி கதீட்ரல் சாலையையே புறக்கணித்து விடுவாள். அன்றைய தினம் அவள் முதலமைச்சரையே தொடர்பு கொண்டாலும் ஆச்சரியமில்லை. அதனால் நான் வாயையும் சூவையும் மூடிக்கொண்டு கம்மென்று இருந்தேன். இரண்டு மகாத்மாக்களில் எந்த மகாத்மா வெல்கிறார், பார்ப்போம்.

கடவுள் இருக்கிறார்தான். சந்தேகம் இல்லை. அவந்திகா ஐந்து நிமிடம் போராடியும் டிரைவர் மறுத்து விட்டார்.

என் எழுத்தின் தீவிர ரசிகை ஆகிவிட்ட அவந்திகா இந்தக் கதையைப் படித்து விடக் கூடாது என்று எல்லாம் வல்ல பெருமாளை வேண்டிக் கொள்கிறேன். ஏனென்றால், அவளுக்கு சென்னையிலேயே மால்குடியின் உணவு மட்டும்தான் ஒத்துக் கொள்கிறது. இங்கேயும் வர மாட்டேன் என்று அவள் கொள்கை முடிவு எடுத்து விட்டால் என் கதி அதோ கதிதான்.

உள்ளே போய் நான் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்தேன். அவள் சைவ உணவு. பிறந்த நாள் ஆயிற்றே, அதுவும் அறுசுவை அரசுவின் உணவு இல்லாமல் போய் விட்டது, அசைவம் சாப்பிடலாமா என யோசித்தேன். அவந்திகாவிடம் அனுமதி கேட்டேன். சே, என்ன ஒரு அறிவுகெட்டத் தனம். எனக்காக பூமியிலுள்ள அத்தனை ஜீவராசிகளையும் சமைத்துக் கொடுக்கும் ஒரு மகாத்மாவிடமா அப்படிக் கேட்டு விட்டேன்? தாராளமா சாப்பிடுப்பா, ஏன் என்னைக் கேட்கிறாய் என்றாள் அவந்திகா.

பழக்க தோஷம்தான். கோவிந்தனோடு இதே இருக்கையில் அமர்ந்து ஒரு நூறு முறை சாப்பிட்டிருப்பேன். கோவிந்தன் ஒரு சைவ உணவு கெரில்லா. அவரோடு சாப்பிடும்போது அசைவம் பற்றி மனதால் கூட நினைக்க முடியாது. “ஆமாம் சாரு, தீவிரமான பிராணி நல ஆர்வலரான நீங்கள் எப்படி ஆடு மாடையெல்லாம் அடித்துத் தின்கிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது நான் சாம்பார்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். இருந்தாலும் கேட்டார். மாடு சாப்பிடுவதே இல்லை கோவிந்தன், ஆட்டை நான் அடிப்பதில்லை என்று ஏதோ உளறினேன். “நீங்கள் அடிப்பதில்லை என்றாலும் எப்படி மனசு வந்து சாப்பிடுகிறீர்கள்?” என்றார் திரும்பவும்.

அப்போது அங்கே வந்த பரிசாரகரிடம் “கொஞ்சம் ரசம் ஊத்துங்க சார்” என்று பேச்சை மாற்றி விட்டேன்.

கோவிந்தன் என்றதும் இன்னொரு விஷயமும் ஞாபகம் வருகிறது. அவர் அடிக்கடி சொல்வார், பிராமணர்கள் அனைவரையும் தமிழர்கள் அமெரிக்காவுக்கு விரட்டி விட்டார்கள், இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு பிராமணன் கூட இருக்க மாட்டான் என்று.

எனக்கு ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபாவில் பார்த்த கூட்டம் நினைவில் தட்டியது. அவர்களெல்லாம் ஏதோ சொர்க்கத்திலிருந்து இப்போதுதான் இறங்கியவர்கள் போல் ஜொலித்தார்கள். பிரகாசமான தோற்றம். பெண்களெல்லாம் ஆளை மயக்கும் அழகு. ஜெர்மனியில் கூட இப்படி ஒரு காம்பீர்யத்தையும் வெண்சங்கை ஒத்த சருமத்தையும் இந்த உயரத்தையும் கண்டதில்லையே என மலைத்தேன். அசோகமித்திரன் கூட அடிக்கடி சொல்வார். எங்களையெல்லாம் தமிழ்நாட்டில் இப்போது யூதர்களைப் போல் நடத்துகிறார்கள் என்று.

எனக்கு இது பற்றியெல்லாம் எதுவும் தெரியாது.

நிற்க. திருவாளர் கல்பாறைக்கு இந்தக் கதையை அனுப்பிப் படிக்கச் சொன்னேன்.  ஹஹ்ஹா என சிரித்து விட்டு, கல்பாறை என்ற பெயர் பிடித்திருப்பதாகச் சொன்னார். சரி, இங்கே ஒரு ரகசியத்தை உடைத்து விடுகிறேன். கல்பாறை வெறும் ஒரு பாதுகாப்புக் கவசம்தான். உள்ளே அவர் ஒரு கண்ணாடிக் கூண்டு. தொட்டால் உடைந்து விடும். அழுதால் நிறுத்த முடியாது. ஒரு ஆண்மகன் இப்படி அழலாமா எனக் கேட்டால், எவன்யா சொன்னது நான் ஆண் என்று? நான் ஆண் பாதி, பெண் பாதி, தெரியுமா? என்பார் சமத்காரமாக.

இன்னொரு விஷயத்தையும் கதையில் விட்டு விட்டீர்கள் என்றார்.  ”சட்டையை நான் அனுப்பவில்லை.  என்னதான் நீங்கள் என்னை பானா நட்பு என்று கிண்டல் அடித்தாலும் சட்டையை எடுத்துக்கொண்டு நான் நேரில் அல்லவா வந்தேன்?  செயல் என்றால் அதுதான்.  அதனால்தான் சொல்லில் எனக்கு நம்பிக்கை இல்லை என்கிறேன்.”

ஹா.  அதை எப்படி மாற்றி எழுதித் தொலைத்தேன்.  செயல் வீரர் என்பதை கல்பாறை செயலிலேயே காண்பித்தார்.  இன்னொரு ஆச்சரியத்தையும் கொண்டு வந்து கையில் கட்டினார்.

நான் பாண்டிச்சேரியில் சில காலம் வாழ்ந்ததாலோ என்னவோ, அங்கே பெரும்பான்மையோர் கையில் கட்டியிருக்கும் குர்மாத்தின் மேல் அளப்பரிய ஆர்வம் ஏற்பட்டு விட்டது.  சரியாக நாற்பது ஆண்டுகளாக குர்மாத் அணிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. 

நாற்பது ஆண்டுகளாக அது நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது.  அரை மணி நேரத்தில் அதைச் செயல்படுத்தி விடலாம்.  குர்மாத் என்று பாண்டிச்சேரியில் மட்டும்தான் சொல்கிறார்கள்.  மற்ற இடங்களில் ப்ரேஸ்லெட் என்கிறார்கள்.  கடா என்றும் சொல்வதுண்டு.  வெள்ளியில் மொத்தமாக ஒரு சங்கிலி வளையம்.  இப்போது சென்னையில் எல்லா டாக்ஸி ட்ரைவர்களும் அணிந்திருக்கிறார்கள்.  இலங்கையிலும் இந்த குர்மாத்தை அணியாத ஒரு டிரைவரைக் கூட பார்க்க முடியாது. 

சமீபத்தில்கூட அதை அணிந்திருந்த ஒரு டிரைவரிடம் விசாரித்தேன்.  கோட்டூர்புரத்தில் ஒரு சேட்டுக் கடையில் வாங்கியதாகச் சொன்னார்.  இன்னும் நான் முப்பது ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தாலும் நான் எந்தக் கடைக்கும் போய் அதை வாங்கி அணியப் போவதில்லை.  தனியாக நான் எங்கேயும் சென்றதில்லை.  கோவா சென்றிருந்த போது அங்கே வசிக்கும் அத்தனை ஆண்களும் இந்த குர்மாத்தை அணிந்திருப்பதைப் பார்த்து என் கூட வந்திருந்த ராஜேஷை அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.  அப்போது கொக்கரக்கோ என்னவோ சொல்லித் தடுத்து விட்டான்.  என்ன சொன்னான் என்று ஞாபகம் இல்லை.  ஆனால் தடை சொன்னால் நான் விட்டு விடுவேன். 

கல்பாறை என் பிறந்த நாளுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு என்னைச் சந்தித்து ஒரு சட்டையையும் நாற்பது ஆண்டுகளாக நான் ஆசைப்பட்டுக்கொண்டிருந்த குர்மாதையும் வழங்கினார்.

சரி, ஒரு பிறந்த நாள் அன்று உங்களை ஆச்சரியப்படுத்தும்படி ஒரு பரிசுப் பொருள் கிடைக்கும் என்றால் அது என்னவாக இருக்கும் என்று கேட்டார்.

எனக்கு ஜாகுவார் காரும் அதற்கேற்ற ஒரு ஷாஃபரும் கிடைத்தால் ஆச்சரியமடைவேன் என்று நினைத்தேன்.  சொல்லவில்லை.  ஆமாம், கல்பாறையை நான் அவர் இவர் என்று குறிப்பிட்டதால் அவர் வயது ஒரு நாற்பது என்றுதானே நினைத்தீர்கள்?  இல்லை.  அவர் ஒரு கல்லூரி மாணவர்.  அவர் எனக்கு சட்டை வாங்கியதும் (அதுவும் ரேர் ரேபிட்) இந்த குர்மாத் வாங்கியதுமே பெரிய ஆச்சரியம். 

அதனால் வேறு ஏதாவது சிறியதாகச் சொல்லலாம் என யோசித்தேன்.  ஒன்றும் தோன்றவில்லை.

கடைசியில் இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில்தான் தோன்றுகிறது.  மீண்டும் ஒரு குர்மாத்.  கல்பாறை இப்போது வாங்கிக் கொடுத்திருப்பது வெள்ளை உலோகம்.  இதுவே வெள்ளியில் இருந்தால் சிலாக்கியம்.

(சே, ஸ்டாலின் காலத்து ருஷ்ய எழுத்தாளர்களைப் போல் இலக்கியத்துக்காக என்னென்ன தகிடுதத்தம் எல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது! அது என்ன தகிடுதத்தம் என்கிறீர்களா? வேறு என்ன, பெண்பாலையெல்லாம் ஆண்பாலாக மாற்றி எழுத வேண்டியிருக்கிறது. எல்லாம் என் தலையில் ஓத்த விதி! எனக்கே என்னை நினைத்தால் அவமானமாக இருக்கிறது.)