இன்று மதியம் நானும் அருணாசலமும் சவேரா ஓட்டலுக்கு மதிய உணவுக்காகச் சென்றிருந்தோம். அப்போது அவர் என்னை சுமார் அறுபது புகைப்படங்கள் எடுத்தார். தொழில் ரீதியாக அல்ல. கைபேசி மூலமாக.
இதில் ஒரு சமூகவியல் பிரச்சினை இருக்கிறது.
திருவள்ளுவர், பரண\ர், கபிலர், இளங்கோ என்று யாரை எடுத்தாலும் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. அவர்கள் காலத்தில் புகைப்படம் இல்லை. ஆனால் சிற்பக்கலை இருந்தது. சிற்பங்களாகக் கூட அவர்கள் செதுக்கப்படவில்லை. சிற்பத்தை விடுங்கள். ஓவியம் ஆதி கலை. ஓவியமாகக் கூட யாரும் வரையப்படவில்லை.
அதே சமயம் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகின் முதல் லெஸ்பியன் கவியான ஸாஃபோ எப்படி இருந்தார் என்பதற்கான தத்ரூபமான சிற்பங்கள் உள்ளன. சாக்ரடீஸ், ப்ளேட்டோ போன்றவர்களுக்கும் சிற்பங்கள் உண்டு. ஆனால் மிகச் சமீபத்தில் வாழ்ந்த பாரதிக்கு ஒரே ஒரு புகைப்படம்தான் உள்ளது.
அதையெல்லாம் கூட மறந்து விடுவோம். நம் காலத்தில் வாழ்ந்த மௌனி, கு.ப.ரா., தி. ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் புகைப்படங்கள் கூட ஒன்றிரண்டுதான் இருக்கின்றன.
ஒரு சோகக் கதை சொல்கிறேன். நான் எழுதிய பழுப்பு நிறப் பக்கங்கள் ஒரு தினசரியில் தொடராக வந்தது. தி.ஜ. ரங்கநாதன் பற்றி எழுதியிருந்தேன். பிறகு அது கிழக்கு பதிப்பகத்தில் புத்தகமாக வந்தது. தி.ஜ. ரங்கநாதனின் ஒரே ஒரு புகைப்படத்தையும் கிழக்கு பதிப்பகத்துக்கு அனுப்பினேன். அந்தப் புகைப்படம் நம் தமிழ் வாசகர்களின் அவலத்தின் குறியீடு. தி.ஜ.ர. ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். சிறை சென்றவர். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மத்திய அரசு உதவித் தொகை அளித்தது. அதை வாங்க அவர் மறுத்து விட்டார். கடைசிக் காலத்தில் அன்றாட வாழ்க்கை பெரும் போராட்டமாக அமைந்தது. மைலாப்பூரில் வசித்தார். தினமும் சாப்பாட்டுக்கே போராட்டம். அவர் மனைவி வீடுகளில் பாத்திரம் தேய்த்து குழந்தைகளுக்கும் கணவருக்கும் ஒரு வேளை சோறு போட்டார். வீட்டு வாடகைக்கு வழியில்லை. அரசாங்கத்திடம் உதவி கேட்டார்கள் தி.ஜ.ர.வின் நண்பர்கள். அரசும் உதவியது.
மைலாப்பூரில் குயில் தோப்பு என்று ஒரு சேரி உள்ளது. அந்தச் சேரியில் அவருக்கு 500 சதுர அடியில் ஒரு வீடு கொடுக்கப்பட்டது. வீட்டுக்கான பட்டாவை சிலேட்டில் எழுதி அதை அவர் பிடித்துக் கொள்ள அவர் குடும்பத்தினர் அவர் அருகில் நிற்க அரசு அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டது. இந்த உலகிலேயே அதி அவலமான புகைப்படம் என்றால் அதுதான். இதை விட அந்தக் கலைஞனை கொன்று போட்டிருக்கலாம். சிறைக் கைதிகளைத்தான் அப்படி புகைப்படம் எடுப்பார்கள்.

இதையெல்லாம் எதிர்த்துத்தான் நான் என் புத்தகங்களில் என் புகைப்படத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். எல்லா இடங்களிலும் என் புகைப்படத்தை எடுக்கச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். நான் ஒரு புகைப்பட வெறியனாக மாறியதற்கு தி.ஜ.ரங்கநாதனின் வாழ்வே காரணம்.
பழுப்பு நிறப் பக்கங்களுக்காக தி.ஜ.ர.வின் ஒரே ஒரு புகைப்படத்தை கிழக்கு பதிப்பகத்துக்கு அனுப்பினேன். தி. ஜானகிராமன் என்று வேறொரு எழுத்தாளர் இருக்கிறார். இரண்டையும் போட்டுக் குழப்பி விடாதீர்கள் என்றும் கடிதம் எழுதினேன். கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட பழுப்பு நிறப் பக்கங்கள் புத்தகத்தில் தி.ஜ. ரங்கநாதன் பற்றிய கட்டுரையில் தி. ஜானகிராமனின் புகைப்படம் வந்திருந்தது. கொலைவெறி ஆகிக் கத்திக்கொண்டிருந்தேன். ஜெயமோகன் தான் அப்போது என்னை ஆற்றுப் படுத்தினார். பிறகு அது சரி செய்யப்பட்டது என்று ஞாபகம்.
என் புகைப்படங்களைத் தொடர்ந்து நான் வெளியிட்டுக்கொண்டே இருப்பதன் காரணம் இதுதான் என்பதை என் நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலே உள்ள புகைப்படம் ஒன்றுதான் தி.ஜ.ரங்கநாதனின் ஒரே ஒரு புகைப்படம். தன் இளமை முழுவதையும் சுதந்திரப் போராட்டத்திலும் மீதி வாழ்நாளை தமிழ் இலக்கியத்துக்காகவும் அர்ப்பணித்த ஒரு தியாகிக்குத் தமிழ்ச் சமூகம் அளித்த பரிசே மேற்கண்ட புகைப்படம்.
ந. சிதம்பர சுப்ரமணியம் தன்னுடைய மண்ணில் தெரியுது வானம் என்ற நாவலில் தி.ஜ.ர. பற்றி சில பக்கங்களை எழுதியிருக்கிறார். அதை நீங்கள் படிக்க வேண்டும். படிக்காதிருந்தால் சொல்கிறேன்.
சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டம். முப்பதுகளின் பிற்பகுதி. சென்னையில் காங்கிரஸ் மாநாடு. மூன்று நாள் மாநாடு. காந்தி நேரு எல்லாம் கலந்து கொள்கிறார்கள். ரங்கநாதன் இளைஞன். பறந்து பறந்து வேலை செய்கிறான். மூன்றாம் நாள் மாநாடு முடிந்தது. தலைவர்கள் கிளம்பி விட்டார்கள். ரங்கநாதன் வீட்டுக்குப் போகத் துடிக்கிறான். மாநாட்டுத் தலைவர் “கொஞ்சம் இருந்து சாப்பிட்டு விட்டுப் போயேண்டா” என்கிறார். ”இல்லை, உடனடியாகக் கிளம்ப வேண்டும்” என்கிறான் ரங்கநாதன்.
அப்படி என்னடா அவசரம்?
காலையில் என் ஒரு வயதுக் குழந்தை இறந்து விட்டது. நான் போய் ஈமக் கடன்களை முடிக்க வேண்டும்.
டேய் பாவி, நீ மனுசனாடா?
இல்லை ஐயா, நான் தொண்டன்.
இதைப் படித்துத்தான் நான் ஒரு எழுத்தாளனாக வாழக் கற்றுக் கொண்டேன். ந. சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம் நாவலைப் படியுங்கள்.
இப்படி வாழ்ந்த ஒரு மகத்தான மனிதனின் புகைப்படம் நம்மிடம் இல்லை. அவன் கையில் நம்பர் எழுதிய சிலேட்டைக் கொடுத்தது தமிழ்ச் சமூகம். அதனால்தான் இந்தத் தமிழ்ச் சமூகத்துக்கு நான் என்னுடைய புகைப்படங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.
சஞ்சனா, நான் செய்யும் ஒவ்வொரு செயலும் என் இலக்கிய கெரில்லா நடவடிக்கையின் ஒவ்வொரு அடி என்பதைப் புரிந்து கொள். இந்தப் பதிவையே நான் உனக்காகத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். உன் வாழ்க்கை முழுவதும் இம்மாதிரி கலைஞர்களுக்காகத்தான் நீ போராட வேண்டும் என்று உன் ஆசிரியனாக உன்னைக் கேட்டுக் கொள்கிறேன். செய்வாய் என்ற நம்பிக்கை இருக்கிறது. மற்றவர்களைப் போல் “எங்களுக்கும் சாரு நிவேதிதாவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று நீ ஃபேஸ்புக்கில் அறிவிக்க மாட்டாய். இது சத்தியம்.