சாரு நிவேதிதா அவர்களுக்கு,
வணக்கம்! உங்களது வலைப்பக்கத்தில் “புகைப்படம் என்ற கலாச்சார அடையாளம்” என்று தலைப்பிட்ட கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதில் இப்படிக் குறிப்பிட்டுள்ளீர்கள்: “ஆனால் மிகச் சமீபத்தில் வாழ்ந்த பாரதிக்கு ஒரே ஒரு புகைப்படம்தான் உள்ளது“.
ஆனால் உண்மையில், பாரதியின் ஆறு புகைப்படங்கள் நமக்குக் கிடைக்கப்பெற்றதாய் பாரதி ஆய்வாளார்கள் கூறுகின்றனர். தி ஹிந்து நாளிதழ் நடத்திய “The Hindu Lit for Life 2017”-ல் அதைப்பற்றிய ஒரு காணொளியின் சுட்டி இங்கே: https://www.youtube.com/watch?v=GZ1yQqyxSbI (காணொளியில் படங்களை 42:08 முதல் காணலாம்).
இவை இருந்தும், பொதுவாக நாம் பார்க்கும் படங்களில், ‘குங்குமப் பொட்டு’ வைத்த, ‘சாந்த சொரூபியான’ பாரதியை காணப் பெறுவது ஒரு அவலம். நான் சிறுவயது முதல் வைத்திருக்கும் பாரதியார் கவிதைகள் அட்டைப் படம் ஒரு உதாரணம் (இந்த மின்னஞ்சலுடன் அந்த அட்டைப் படத்தைச் சேர்த்துள்ளேன்).
பாரதியார் போக, ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் புகைப்படங்களும் அவ்வளவாக இல்லை. இதைப்பற்றி இயற்பியலாளர் சுப்ரமணியன் சந்திரசேகரின் வாழ்க்கைக் குறிப்புப் புத்தகமான, “Chandra, A Biography of S. Chandrasekhar“-ல் (அட்டைப் படத்தைச் சேர்த்துள்ளேன்) ராமானுஜத்தின் புகைப்படம் அவரது மனைவியிடம் இல்லாததால், அவர் வீட்டிலிருந்த அவரது கடவைச்சீட்டிலிருந்தப் புகைப்படத்தை சந்திரசேகர் கொண்டு வந்ததைப் பற்றியக் குறிப்பு உள்ளது (அந்தப் பகுதியுள்ள புத்தகத்தின் படத்தைச் சேர்த்துள்ளேன்; ஆனால் இந்த்தப் படம் சரியாக எடுக்கப்படவில்லை). ராமானுஜத்தின் இப்புகைப்படம் தான் நமக்கெமெல்லாம் பரீச்சயமானது என்பது குறிப்பிடத்தக்கது (சந்திரசேகர் மற்றும் கணிதவியலாளர் ஹார்டியின் புண்ணியத்தில்)!
இப்படிக்கு,
பவித்ரன் நாராயணன்