வருகின்ற ஜனவரி மூன்றாம் தேதி மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள காஸ்மபாலிடன் கிளப்பில் கார்ல் மார்க்ஸின் இரண்டாவது நாவலான பீச் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அழைப்பிதழ் இன்னும் எனக்குக் கிடைக்காததால் சரியான நேரம் தெரியவில்லை. வெளியீட்டு விழாவில் நானும் பேசுகிறேன். நாவலை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். முன்னுரையில் கார்ல், வாசிப்பு இன்பம் பற்றிச் சொல்லியிருப்பதாலும், நாவலை அடியேனுக்கு சமர்ப்பணம் செய்திருப்பதாலும் நாவலை வாசிக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
சமீபத்தில் நான் எழுதியிருந்த எல்லோரும் இன்புற்றிருக்க ஓர் வாழ்வியல் கையேடு கதையைப் படித்து விட்டு மனுஷ்ய புத்திரன் என்னிடம் நீண்ட நேரம் வாசிப்பு இன்பம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். நான் முயற்சி செய்யாமலேயே அந்த விஷயம் என் எழுத்தில் வந்து தொற்றிக்கொண்டு விட்டது. எனக்கு வாசிப்பு இன்பம் தந்த எழுத்தாளர்கள் பலர். தி.ஜானகிராமன், அசோகமித்திரன், லா.ச.ரா., ஆதவன். அதற்காக வாசிப்பு இன்பம் நல்காத எழுத்தாளர்கள் மட்டம் என்று அர்த்தம் ஆகாது. நகுலனிடம் எனக்கு வாசிப்பு இன்பம் கிடைப்பதில்லை. ஆனால் அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர். ஜனரஞ்சக எழுத்தில் சுஜாதாதான் ஆக உச்சம். என் எழுத்தில் வாசிப்பு இன்பம் திளைக்கத் திளைக்கப் பெருகிக் கிடப்பதன் காரணம், என் ஊர் என்று நினைக்கிறேன். அந்த மக்களின் பேச்சே படு சுவாரசியமானது. என் ஊர் என்றால் மொத்த தஞ்சாவூர் மாவட்டத்தையே சொல்கிறேன். சலிப்புத் தரக் கூடியவாறு ஒருத்தர் பேசுகிறார் என்றால் அவர் நிச்சயம் தஞ்சாவூராக இருக்க வாய்ப்பே இல்லை. நாகர்கோவிலாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
எனக்கு பிறந்த நாள், புத்தாண்டு என்று எதுவும் இல்லை. மூன்றாம் தேதிதான் எனக்குப் புத்தாண்டு தினம். காஸ்மபாலிடன் கிளப்புக்கு வந்து விடுங்கள். காலர் போடாத டி ஷர்ட்டுக்கு மட்டும் அனுமதி இல்லை. அதேபோல் வேட்டி, கைலி ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை என்று நினைக்கிறேன். எதற்கும் கார்ல் மார்க்ஸிடம் கேட்டுக் கொள்ளுங்கள். ஷூ அவசியம் இல்லை. செருப்பு அணிந்து வர அனுமதி உண்டு.
மூன்றாம் தேதி மாலை காஸ்மபாலிடன் கிளப்பில் சந்திக்கலாம்.