அந்த நான்கு மனித மிருகங்களின் மீதும் பொதுஜனம் தனது உச்சபட்ச வெறுப்பைக் காண்பித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தப் பொதுஜனத்துக்கும் அந்த நான்கு மனித மிருகங்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஏனென்றால், இதே மாதிரி பொதுஜனம்தான் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் தொண்ணூறு லட்சம் யூதர்களை இதேபோல் சித்ரவதை செய்து கொன்றது. இப்போது அறச்சீற்றம் காட்டும் இந்தியப் பொதுஜனமும் ஜெர்மானியப் பொதுஜனத்திடமிருந்து சிறிதும் வேறுபட்டதல்ல. குஜராத்தில் நடந்த படுகொலைகளை உங்களுக்கு நான் ஞாபகப்படுத்துகிறேன்.
சமீபத்தில் கூட தெருநாய்களைப் பிடித்து பட்டியில் அடையுங்கள் என்று உச்ச நீதிமன்றம் சட்டம் போட்டவுடன் இந்திய நகரங்களின் பொதுஜனம் ஒரே அணியாய் நின்று தெருநாய்களை அடித்துக் கொல்லத் தயாரானது. கர்னாடகாவில் ஒரு பிரமுகர் தான் மூவாயிரம் நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாகப் பீற்றிக் கொள்ளும் ரீல்ஸையும் நான் பார்த்திருக்கிறேன்.
இந்தியா முழுதும் பல ஊர்களில் பல நகரங்களில் மக்கள் நாய்களை அடித்துக் கொன்றார்கள். இப்போது அது நின்றிருக்கிறது.
என்னைப் பொருத்தவரை மனிதனை அடித்துக் கொல்வதும், நாயை அடித்துக் கொல்வதும் ஒன்றுதான்.
பதினேழே வயது ஆன அந்த நான்கு மனித மிருகங்களும் தாங்கள் குறி வைத்த வட இந்திய இளைஞனை ரயிலிலேயே துன்புறுத்த ஆரம்பித்து விட்டார்கள். இது பற்றி ரயிலில் இருந்த பொதுஜனம் மூச்சு கூட விடவில்லை. எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் நான்கு மனித மிருகங்களும் அந்த இளைஞனை ஒரு தனி இடத்துக்கு அழைத்துச் சென்று ஆயுதங்களால் தாக்கினார்கள்.
இதற்குக் காரணம் மது என்று சொல்லி மடைமாற்றம் செய்பவர்களின் வாயில் டாஸ்மாக்கிலிருந்து மக்டவல் விஸ்கியை வாங்கி தண்ணி கலக்காமல் ‘ரா’வாக ஆறு பெக் ஊற்ற வேண்டும். அதுதான் அவர்களுக்கு உரிய தண்டனை.
இந்தியச் சமூகம் அதி துரித வேகத்தில் சீரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அந்தச் சீரழிவில் முன்னணியில் நிற்பது தமிழ்நாடு. அதற்குக் காரணம், தமிழ் சினிமா. மற்றொரு காரணம், பெற்றோர். மூன்றாவது காரணம், கல்வி முறை. சமச்சீரற்ற கல்வி முறை. நகரங்களில் வசிக்கும் நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கும் கிராமங்களிலும் சிற்றூர்களிலும் நிலவும் கல்விக்கும் உள்ள வித்தியாசம் பற்றி உங்களுக்கே தெரியும். இன்னொரு சமீபத்திய காரணம், வன்முறையை நேரடியாகத் தூண்டும் சில கானா பாடல்கள். நான் கானா பாடல்களின் ரசிகன். ஆனால் சமீபத்திய சில கானா பாடல்கள் மண்டையை உடை, நாக்கை அறு என்று நேரடியாகவே வன்முறையைத் தூண்டுவதாக எழுதப்பட்டு பாடப்படுகின்றன. இது போன்ற வன்முறைப் பாடல்கள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்.
விஜய் நடித்த படம் ஒன்றில், பதினேழு வயது சிறுவனை வைத்து உன்னைக் கொல்வேன் என்கிறார் வருங்கால முதல்வர் விஜய். சட்டம் ஒன்றும் பண்ண முடியாது. ஜூவனைல் சட்டத்தின் படி மூன்று ஆண்டுதான் ஜெயில். இது விஜய் பேசும் வசனம். சமூகம் எப்படி உருப்படும்?
அந்த நான்கு மனித மிருகங்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம்?
1.காந்தி எழுதிய சத்திய சோதனை புத்தகத்தை தினமும் படிக்க வேண்டும். மாதத்தில் இரண்டு முறை மனுஷ்ய புத்திரன், பாரதி கிருஷ்ணகுமார், பவா செல்லத்துரை ஆகிய மூவரும் நான்கு மிருகங்களும் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்குச் சென்று அந்த மிருகங்கள் சத்திய சோதனை நூலை படித்திருக்கிறார்களா என்று கேள்வி கேட்டு சோதனை செய்ய வேண்டும். படித்திருக்காவிட்டால் படித்து முடிக்கும் வரை தண்டனைக் காலத்தை நீட்டிக்க வேண்டும்.
2. பணத்தாசை இல்லாத யோகா மாஸ்டர் ஒருவரைக் கொண்டு மூச்சுப் பயிற்சி, தியானம், பிராணாயாமம் ஆகியவற்றை நால்வருக்கும் கற்பிக்க வேண்டும். ஆசனங்களை விடவும் தியானம் இந்த மிருகங்களிடம் குடி கொண்டுள்ள வன்முறையைப் போக்க உதவும் என்று நம்புகிறேன்.
3. இது முக்கியம். ட்டி.எம். கிருஷ்ணாவைக் கொண்டு இந்த நால்வருக்கும் கர்னாடக சங்கீதம் கற்பிக்க வேண்டும். அதே சமயம் ட்டி.எம். கிருஷ்ணா தனது நாத்திகக் கருத்துக்களை இந்தப் பையன்களிடம் புகுத்தி விடாதபடி ஒரு மேற்பார்வையாளரையும் நியமித்து விட வேண்டும். நாத்திகம் ஒன்றும் கெட்ட விஷயம் அல்ல. ஆனால் எந்த முன்விரோதமும் இல்லாமல் ஒரு சக மனிதனை மண்டையில் அடித்துக் கொல்ல முயலும் பையன்களிடம் கடவுளும் இல்லை என்று சொல்லி விட்டால் அவன்கள் பக்காவான, முழுமையான மிருகங்களாக மாறி விடுவார்கள். இந்த உளவியலெல்லாம் ட்டி.எம். கிருஷ்ணாவுக்குப் புரியாது. மூன்று ஆண்டு\கள் கடந்து அந்த நான்கு பேரும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியை விட்டு வெளியே வரும்போது கர்னாடக இசையில் ஒரு கச்சேரி செய்யும் அளவுக்கு அவர்களைத் தயார் செய்து விட்டு விட வேண்டியது கிருஷ்ணாவின் பொறுப்பு.
கர்னாடக இசைக்கும் இந்த வன்முறைக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். வன்முறையைத் தூண்டும் சில கானா பாடல்களைக் கேட்டுத்தான் இவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதால் கர்னாடக இசையை இங்கே கொண்டு வருகிறேன். மற்றபடி நான் கானா பாடல்களின் தீவிர ரசிகன்.
பொதுவாகச் சொன்னால், தமிழ்ச் சமூகம் சினிமா என்ற பெருவியாதியிலிருந்து விடுபட்டாலே இம்மாதிரி சீரழிவுகளிலிருந்து தப்பிக்க சாத்தியம் உண்டு. இலக்கிய நூல்களை வாசியுங்கள் என்று சொல்ல மாட்டேன். இந்த ஃபிலிஸ்டைன் சமூகம் இலக்கியத்தின் பக்கம் நகர்வதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகும்.
இது தவிர, அதிகாரம் என்ற ஒரு நுண்ணரசியல் இதில் இயங்குகிறது. நீ ஒண்டியாள், நாங்கள் நாலு பேர், உன்னிடம் ஆயுதம் இல்லை, எங்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன, உன்னைக் கேட்க இங்கே நாதியில்லை.
இதுதான் அதிகாரம். இந்த வன்முறைச் சம்பவத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், இதை விடியோவில் பதிவு செய்து அதை இன்ஸ்டாவில் வெளியிடுகிறார்கள் நான்கு கிரிமினல்களும். ஆக, சட்டம் பற்றியோ தண்டனை பற்றியோ எந்தக் கவலையும் அவர்களுக்கு இல்லை. அப்படித்தான் அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும், அடுத்தவரைத் துன்புறுத்தினால் உனக்கு தண்டனை உண்டு என்று பெற்றோரோ அல்லது சமூகத்தின் வேறு எந்த அலகுகளோ அவர்களுக்குக் கற்பிக்கவே இல்லை. அப்படியானால் இந்த மொத்த சமூகமே சீழ் பிடித்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.
வன்முறை என்பதை விட அதிகாரம் பற்றி யோசியுங்கள். பல மனைவிமார் தாங்கள் வேலைக்குப் போய் நல்ல ஊதியம் பெற்றாலும் தன்னை வேலைக்காரி போல் நடத்தும் கணவனைப் பிரியாமல் குடும்பத்துக்குள்ளேயே கிடப்பதன் காரணம், குடும்பம் என்ற அமைப்பு தரும் பாதுகாப்புதான். அந்தக் கணவனை அவளால் ஒரு நாள் கூட தாங்க முடியாது. இருந்தாலும் சகித்துக் கொள்கிறாள். காரணம், வெளியே போனால் கண்டவனெல்லாம் “படுக்க வர்றியா?” என்று கேட்பான். சமூகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதைப் பயன்படுத்தி கணவன் அவள் மீது தன் அதிகாரத்தைப் பிரயோகிக்கிறான். இதேபோல் மனைவி ஆளுமை அதிகம் கொண்டவளாக இருந்தால் கணவன் மீது அதிகாரம் செலுத்துகிறாள். அங்கே கணவன் அடிமை. அவன் வெளியே வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பாதுகாப்பு இன்மை போன்ற பிரச்சினை கிடையாது என்றாலும் வேறு பிரச்சினைகள் உண்டு. முக்கியமாக, செக்ஸ், தனிமையுணர்வு போன்றவை. குழந்தை இருந்தால் குழந்தைப் பாசம் வேறு.
இதே போன்ற அதிகாரம்தான் அந்த நாலு பொறுக்கிகளிடமும் வன்முறையாக மாறியது. மேலே நான் குறிப்பிட்ட தண்டனை முறைகள்தான் இது போன்ற வன்முறையைக் குறைக்கும் வல்லமை கொண்டவை. இதையே என் புத்தாண்டுச் செய்தியாகக் கொள்ளவும்.