கொஞ்சம் கருணை காட்டுங்க ப்ளீஸ்…

அன்பிற்குரிய சாரு,

 ஊரின் மிக அழகான பெண் படித்துக் கொண்டிருக்கிறேன். சு. கிருஷ்ணசாமி, ஜி. குப்புசாமி வரிசையில் நீங்களும் இருக்கிறீர்கள். மிக நேர்த்தியாக, கதைகளின் மோனத்தை, தனிமையை கலைக்காமல் அப்படியே கடத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி சாரு.

Thanks & Regards,
Bala K
அன்புக்குரிய பாலா,
30 ஆண்டுகளுக்கு முன்னால் என்று நினைக்கிறேன்; ஓரிரு ஆண்டுகள் பிந்தியோ முந்தியோ இருக்கலாம்.  அப்போது நான் தில்லியில் இருந்தேன்.  அப்போது பிரம்மராஜன் என்ற கவிஞர் ஊட்டியிலிருந்து மீட்சி என்ற பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார்.  அப்போது அந்தப் பத்திரிகையில் நானும் சிவகுமார் என்பவரும் மாங்கு மாங்கென்று உலக இலக்கியத்தை – முக்கியமாக லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தோம்.  இப்போது என் வயது 61.  30 ஆண்டுகளுக்கு முன்னால் ஜி.குப்புசாமி ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.  அஜித், விஜய் வரிசையில் ரஜினியும் இருக்கிறார் என்று சொல்வது போல் உள்ளது.  என் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள் ப்ளீஸ்.
ஒருவனைப் பாராட்டிக் கூட மண்டையில் அடிக்க முடியும் என்பது இப்போது தான் என் மட புத்திக்கு விளங்குகிறது.  கடவுளே என்னைக் காப்பாற்று!
சாரு