புதிய எக்ஸைல் : முதல் பிரதி

1978-இலிருந்து 1990 வரை தில்லியில் இருந்த போது பாரதி மணியோடு அவ்வளவு பழக்கம் இல்லை.  அங்கே வெங்கட் சாமிநாதனோடு சேர்ந்து விட்டால் மற்றவர்களோடு நட்பு கொள்வது சாத்தியம் இல்லை.  சாம் ஒன்றும் சொல்ல மாட்டார்.  ஆனால் நமக்கே அப்படித் தோன்றி விடும்.  அது மாதிரி ஒரு ‘பயங்கரவாத’ குழு அது.  டாக்டர் ரவீந்திரன் மட்டும் எல்லோருடனும் நட்பாகப் பழகுவார்.  இந்தப் பிரச்சினையினாலேயே க.நா.சு., ஆதவன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களோடு அங்கே பழக முடியாமல் போய் விட்டது.  இலக்கியச் சந்திப்புகளில் ஹாய் சொல்வதோடு சரி.  இ.பா. சென்னை வந்த பிறகுதான் அவருடைய தொடர்பு கிடைத்தது.  சாமோடு ஒரு ஐந்து ஆண்டுகள்தான்.  அதற்குப் பிறகு அவரோடும் பிய்த்துக் கொண்டு விட்டது.  அதற்குப் பிறகு நான் தனி ஆள்.   சௌத் ப்ளாக் ஆட்கள் தனி.  நான் வடக்கு தில்லி வாசி.  அங்கே பெரும்பாலும் பஞ்சாபிகள்தான்.  சிவில் சப்ளைஸில் உத்தியோகம்.  அதுவும் வடக்கு தில்லி.  பெண்ணேஸ்வரனோடு மட்டும் கடைசி வரை எனக்கு நல்ல நட்பு இருந்தது.  ஆனால் நான் சென்னை வந்த பிறகு அவருக்கும் என் மீது கடும் கோபமும் அசூயையும் ஏற்பட்டு விட்டது.  என்ன காரணம் என்று தெரியவில்லை.  நேரில் பார்த்தால் கேட்க வேண்டும்.  காரணமே தெரியாமல் சிலருடைய பகைமைக்கும் வெறுப்புக்கும் ஆளாகி விடுகிறேன்.

தில்லியில் இருந்த போது நான் கதை கதையாய் கேள்விப்பட்ட நண்பர் பாரதி மணி.  அவரோடும் சென்னை வந்த பிறகுதான் பழக்கம்.  தில்லியில் அவரைப் பற்றி நான் கேட்ட கதைகளை வால்யூம் வால்யூமாகத் தொகுக்கலாம்.  குடியை என்னைப் போலவே கொண்டாடுபவர்.  பைப்பும் புகைப்பார்.  அவருடைய குடி கொண்டாட்டத்தைப் பற்றியே இரண்டு வால்யூம் எழுதலாம்.  கேள்விப்பட்ட கதைகள்தான்.  எது உண்மை எது பொய் என்று தெரியாது.

சென்னையில் நான் சின்மயா நகரில் இருந்த போது அவரை அடிக்கடி சாலையிலேயே சந்தித்திருக்கிறேன்.  அவரும் சின்மயா நகர் என்று ஞாபகம்.  அவரைப் பார்க்கும் தோறும் தில்லியில் நான் அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட கதைகள் எல்லாம் ஞாபகம் வரும்.  எதையுமே சொல்ல மாட்டேன்.  அடுத்தவர் அந்தரங்கம் அது.  ஆனால் என்னைப் போலவே குடியை கொண்டாடுபவர் என்பதால் அவர் மீது எனக்கு அலாதியான பிரியம் உண்டு.  அதுவும் குடிக்கத் தெரியாமல் குடித்துப் பாழாகும் தமிழ்நாட்டில் என்னைப் போல் ஒருவர் என்றால் அது விசேஷம் தானே?  இவர் ஒருநாள் குடியை விடுவாரோ, அல்லது குஷ்வந்த் சிங் போல் கடைசி வரை குடிப்பாரோ என்று அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன்.  அவரை சந்திக்கும் போதெல்லாம் அக்கறையுடனும் ஆர்வத்துடனும் ”குடியை நிறுத்தவில்லையே?” என்று கேட்பேன்.  அவரும் சிரித்துக் கொண்டே அது பாட்டுக்கு ஓடுது என்பார்.  ஒருநாள் அவர் சாலையில் என்னை சந்தித்த போது குடியை நிறுத்தி விட்டதாகச் சொன்ன போது எனக்குப் பெரும் அதிர்ச்சி.  இருந்த ஒரே ஒரு சகாவும் கட்சி மாறி விட்டாரே என்ற அதிர்ச்சி.  அப்புறம் அவர் ஒரு வேத வாக்கியம் சொன்னார்.  ”குடியை நிறுத்தி விட்டதால் எந்தப் பிரச்சினையும் இல்லை.  ஒன்றே ஒன்றைத் தவிர.”  “என்ன அந்த ஒன்று?” என்று கேட்டேன்.

அவருக்கு அதற்கு முன்பு ஒரு ஐநூறு நண்பர்கள் உண்டு.  என் அனுமானத்துக்கு மேலும் இருக்கலாம்.  ”ஒரு நண்பர் கூட இப்போது இல்லை.  குடியை நிறுத்தியதும் எல்லோரும் காலி.  அது ஒன்றுதான் பிரச்சினை” என்றார்.

இப்போது நானும் பாரதி மணியின் நிலையில்தான் இருக்கிறேன்.  எனக்கு அவ்வளவு நண்பர்கள் இல்லை.  ஐம்பதுதான் இருக்கும். அத்தனை பேரும் காலி என்று சொல்ல மாட்டேன்.  எப்போதாவது ஃபோனில் பேசுகிறார்கள்.  அத்தோடு சரி.

ஆனால் நான் தான் இழப்பைப் பற்றிக் கவலைப்படாதவன் ஆயிற்றே?  நாய், பூனை போன்ற பிராணிகளைக் காப்பாற்றும் குழுக்களில் சேர்ந்து நிறைய தோழிகளை சம்பாதித்துக் கொண்டேன்.  ஆண்கள் கிடக்கிறான்கள், குடிகாரப் பசங்கள்.

இந்த நிலையில் ஜனவரி 5 விழாவுக்காக அண்ணா நகர் பார்க், தி.நகர் பார்க், நாகேஸ்வர ராவ் பார்க் ஆகிய மூன்று இடங்களிலும் நோட்டீஸ் கொடுக்க நண்பர்கள் தேவை.  அடுத்த விழா என்றால் தோழிகளைக் கேட்கலாம்.  இப்போது உடனே போய் உதவி கேட்டால் நன்றாக இருக்காது இல்லையா?

ஒருநாள் பெரியார் சம்பந்தருக்கு ஃபோன் செய்தேன்.  பதிலே இல்லை.  இப்போதைக்கு என்னோடு ஃபோனில் தொடர்பில் இருக்கும் (ஆண்) ஆத்மாக்கள் சீனி, கணேஷ், (வாரத்துக்கு ஒரு முறை) செல்வா, டாக்டர் ஸ்ரீராம் ஆகியோர் மட்டுமே.  அதனால்தான் உதவி கேட்கிறேன்.  நண்பர்கள் முன்வந்து ஆதரவு தர வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

***

வாழ்வில் எப்போதுமே இந்த அளவுக்கு வேலைப் பளுவில் மூழ்கியதில்லை.  எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் தமிழில் கம்மி என்று உங்களுக்குத் தெரியும்.  அப்படிப் பிடித்த ஒரு சிலரில் ஒருவரின் நூலுக்கு நாளை காலைக்குள் முன்னுரை எழுதித் தர வேண்டும்.  நாளை காலை ஐந்தே கால் மணிக்கு படப்பிடிப்புக்காக கோவளம் செல்ல வேண்டும்.  அங்கிருந்து பாண்டிச்சேரி, நாகூர் போக வேண்டும்.  செவ்வாய் இரவுதான் திரும்ப முடியும்.

இதற்கு இடையில் தருணுக்கு புதிய எக்ஸைலில் எவ்வளவு மொழிபெயர்ப்பு முடிந்திருக்கிறதோ அதை சரி பார்த்து அனுப்ப வேண்டும்.  ஒரு நண்பர் ஒரு வாரமாகத் தூங்காமல் இந்த மொழிபெயர்ப்பைச் செய்து கொடுத்தார்.  இன்னொரு நண்பர், தன்னுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் தேர்வைக் கூட  எழுதாமல் அந்த மொழிபெயர்ப்பைத் திருத்தம் செய்து கொடுத்தார்.  இன்னும் பத்து பக்கம் வர வேண்டும்.  இன்று இரவுக்குள் வர வேண்டும்.  இல்லாவிட்டால் நாளை பயணத்திலேயே அந்த வேலையைச் செய்ய வேண்டி வரும்.  இதைச் செய்யாவிட்டால் தருணுக்கு மீண்டும் ஸீரோ டிகிரியைப் பற்றியே பேச வேண்டிய கட்டாயம் ஏற்படும்.  அப்படி ஏற்பட்டால் முதல் ஆளாக அரங்கத்தை விட்டு ஓடி விடலாம் என்று இருக்கிறேன்.

இன்னொரு வேலை, பலருக்கும் தருண் என்றால் டெஹல்கா என்றும் இன்னொரு விவகாரமும்தான் ஞாபகம் வரும்.  பழைய பிஜேபி ஆட்சியில் நடந்த ஒரு சம்பவம் இது:  தருணைத் தீர்த்துக் கட்டி விட்டு அந்தப் பழியை வாஜ்பாய் அரசின் மீது போட்டு விட்டால் அரசு கவிழ்ந்து விடும் என்று நினைத்து, பாகிஸ்தான் உளவு ஸ்தாபனங்கள் சில கொலைகாரர்களை ஆயுதங்களோடு நேபாளம் வழியாக அனுப்பியது.  ஆனால் அந்தக் கொலையாளிகள் இந்திய உளவுத் துறையால் கைது செய்யப்பட்டார்கள்.  தருண் அப்போது மிகத் தீவிரமாக பிஜேபிக்கு எதிராக இயங்கிக் கொண்டிருந்தார்.  (எப்போதுதான் அவர் பிஜேபிக்கு எதிராக இல்லை?)  தருணின் ஸ்டிங் ஆபரேஷனில் பிஜேபியின் அகில இந்தியக் கட்சித் தலைவரே சிறைக்குப் போய் விட்டார்.  அந்தச் சூழ்நிலையைத்தான் பயன்படுத்திக் கொள்ள நினைத்தது பாகிஸ்தான்.  கொலையாளிகள் பிடிபட்ட நிலையில் தருணுக்கு பிஜேபி அரசு ஒரு பிரதம மந்திரிக்குக் கொடுக்கக் கூடிய பாதுகாப்பைக் கொடுத்தது.  மூன்று கட்ட பாதுகாப்பு வளையத்தில் பத்து ஆண்டுகள் இருந்தார் தருண்.  அவரது வீட்டைச் சுற்றித் தடுப்பு அரண்கள்.  அவர் திருவனந்தபுரத்தில் வந்து இறங்கினால் அங்கே black cat commandos விமான நிலையத்தில் தயாராக இருப்பார்கள்.  தருணின் உயிரை அவரது எதிரிகளே காப்பாற்றித் தர வேண்டிய விசித்திரமான சூழ்நிலை அது.

இன்று இந்தியா பூராவும் ஊழலுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் ஆவேசமான உணர்வலைகளுக்குத் தன்னுடைய உயிரையும் துச்சமாக மதித்துப் போராடிய ஒரே ஆள் தருண் தேஜ்பால்.  இந்தியாவின் அஸாஞ்ஜே.  இந்த விஷயத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டிய வேலை உள்ளது.

தேகம் நாவலின் இரண்டாம் பதிப்பையும் ஐந்தாம் தேதியே கொண்டு வந்து விடலாம் என்று திட்டமிடப்பட்டது.  திருத்த வேண்டிய படி என் மேஜையில் உள்ளது.  தொடக் கூட முடியவில்லை.

எந்த வேலையை முதலில் செய்வது என்று தெரியாமல் இதோ இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஏன் இதை எழுத ஆரம்பித்தேன் எனில், சென்ற புத்தக வெளியீட்டு விழாவைப் போல் இந்த முறையும் புதிய எக்ஸைலின் முதல் பிரதிகளை வாங்குபவர்களை மேடையில் அழைத்து என் கையெழுத்திட்டு வழங்குவேன்.  இதை சென்ற வாரமே எழுதியிருக்க வேண்டும்.  நேரம் இல்லை.  ஒவ்வொரு பிரதியிலும் முதல் பிரதி, இரண்டாம் பிரதி, மூன்றாம் பிரதி என்று என் கையெழுத்தில் எழுதிக் கையொப்பம் இட்டுத் தருவேன்.  இன்று அதற்கு எந்த மதிப்பும் இல்லை.  ஆனால் பத்து ஆண்டுகளில் அதன் மதிப்பு எங்கோ போய் விடும்.  ஒரு நண்பரிடம் இருபது ஆண்டுகளுக்கு முன் முத்து முத்தான எழுத்தில் நான் கையால் எழுதிய ஸீரோ டிகிரி பிரதி உள்ளது.  அதன் மதிப்பு இப்போது எவ்வளவு இருக்கும்?  அவரிடம் கேட்க எனக்குத் தயக்கமாக உள்ளது.  அதேபோல் தான் புதிய எக்ஸைலின் முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம்…..  பிரதிகளும்.  இப்படி முப்பது பிரதிகளுக்கு வரிசை எண் போட்டுத் தருவேன்.  அடிப்படை விலை, பத்தாயிரம் ரூபாய்.

தொடர்புக்கு:

charu.nivedita.india@gmail.com

பணம் அனுப்புவதற்கான விபரம்:

Account holder’s Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account number: 911010057338057

Branch: Radhakrishnan Salai, Mylapore

IFSC UTIB0000006

MICR CODE: 600211002

***

K. ARIVAZHAGAN
ICICI  Account number 602601 505045
t. nagar branch
chennai
IFSC Code: ICIC0006026