என் கையெழுத்தின் கட்டணம் 5000 ரூ. ஏன்?

1.திங்கள் கிழமை அன்று மாலை சரியாக ஆறரை மணிக்குக் கூட்டம் ஆரம்பித்து விடும்.  இந்த விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை.  முடியும் நேரம் எட்டரை என்று வைத்திருக்கிறோம்.  ஒருவேளை ஒன்பது ஆகலாம்.  ஒன்பதுக்கு மேல் ஒரு நிமிடம் கூட அதிகம் ஆகாது.  பல இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்று நான் படாத அவஸ்தை பட்டிருக்கிறேன் என்பதால்தான் இந்தத் தீவிரமான முடிவு.  அது மட்டும் அல்லாமல் நேரம் தவறாமையை நான் ஒரு தீவிரவாதியைப் போல் என் வாழ்வில் கடைப்பிடித்து வருபவன்.  பொதுவாக பத்திரிகைகளுக்குக் கொடுக்கும் விஷயங்களைக் கூட ரொம்பவும் முன்கூட்டியே கொடுத்து விடும் ஆள் நான்.  இப்போதுதான் இந்த ஜனவரி 5 விழா வேலைகள் காரணமாக ஒரு நண்பரிடம் வாக்குத் தவறி விட நேர்ந்திருக்கிறது.  இன்னும் அவருடைய நூலுக்கு முன்னுரை கொடுக்கவில்லை.  ஆறாம் தேதி கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.

2. ஏன் பெரிய ஆட்களை, பிரமுகர்களைப் பேச அழைக்கவில்லை என்று மனுஷ்ய புத்திரன் கேட்டார்.  ஜனவரி 5 கூட்டத்தில் பேசுபவர்களும் பிரமுகர்கள்தான் என்றாலும் பெரும் தலைகளை அழைக்காததற்கும் மனுஷ்ய புத்திரனின் முன்னுதாரணம்தான் காரணம்.  இ.கூட்டங்களில் பேச வரும் பெரும் தலைகள் தாங்களே ஒரு மணி நேரம் பேசி அமர்வதால், மற்றவர்களும் அதேபோல் ஒருமணி நேரம் பேசி, கூட்டம் முடியும் போது மிட்நைட் ஆகி விடுகிறது.  அந்த tragic comedy-ஐத் தவிர்க்கவே நண்பர்களாகப் பார்த்து அழைத்தேன். மேடையில் பேசுபவர்களிடையே கூட சமத்துவம் இல்லை என்றால் சமூகத்தில் எப்படி சமத்துவம் இருக்கும்?

3. என் கையெழுத்துக்குக் கட்டணம் 5000 ரூபாய் என்பதை எல்லோருமே மறந்து விட்டனர் என்று நினைக்கிறேன்.  உயிர்மை கூட்டத்தில் ஒரு நண்பர் கையொப்பம் கேட்டார்.  அன்புடன் மறுத்து விட்டேன்.  இனிமேல் அப்படித்தான்.  5000 ரூ கொடுத்தால் எந்தப் புத்தகத்திலும் கையெழுத்துப் போடத் தயார்.  ஏன் இந்த முடிவு என்பதை ஜனவரி 5-ஆம் தேதி கூட்டத்தில் விளக்குகிறேன்.

ஜனவரி 5 அன்று என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்.  5000 ரூ இல்லையென்றால் விட்டு விடுங்கள்.  என் கையெழுத்து என்ன அவ்வளவு பெரிய விஷயமா?  என் கையெழுத்திட்ட புத்தகங்கள் Collectors’ copy ஆகப் பத்திரப் படுத்த நினைப்பவர்களுக்கு மட்டுமே.

4. வெளியூரிலிருந்து வரும் வாசகர் வட்ட அன்பர்கள் ஒருமுறை செல்வகுமார் வீட்டில் இறங்கினர்.  அதனால் செல்வகுமார் அராத்துவின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்துக்கு வரத் தாமதம்.  இதனால் என்ன பிரச்சினை ஏற்பட்டது என்றால், கூட்டம் ஒருமணி நேரம் தாமதமாகியது.  ஒருமணி நேரமாக கௌதம் மேனனும் இன்னும் 1000 பார்வையாளர்களும் செல்வாவுக்காகக் காத்திருந்தார்கள்.  ஏனென்றால், அவர் தான் சிற்றுண்டி கொண்டு வந்தார்.  இது போன்ற சமாச்சாரங்கள் எதுவுமே ஜனவரி 5 கூட்டத்தில் நடக்க விட மாட்டேன்.  கூட்டத்தை ஆறு மணிக்கு அல்லாமல் ஆறரைக்கு வைத்திருப்பதே உங்களின் சௌகரியம் கருதித்தான்.  எனவே, விழா ஏற்பாடு செய்யும் நண்பர்களை உங்கள் அன்பால் தொந்தரவு செய்து தாமதம் ஏற்படுத்தி விடாதீர்கள்.  அப்படித் தொந்தரவு செய்தாலும் விழா ஆறரைக்கு ஆரம்பமாகி விடும்.

5. இன்று என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் விழாவுக்கு வர கட்டணம் ஏதும் உண்டா என்று கேட்டார்.  ஏன் மனிதர்கள் இவ்வளவு அப்பாவிகளாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.  கட்டணம் வைத்தால் பத்து பேர் வருவார்கள்.  காமராஜ் அரங்கம் கொள்ளளவு 2000.  எனவே, நேற்று இரவு முழுவதும் – அதாவது காலை ஐந்து மணி வரை – பத்து பேர் சென்னை முழுவதும் தட்டி கட்டினார்கள்.  அவர்கள் அனைவரும் என் நண்பர்கள்.  பெரிய பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள்.  ஐந்து மணிக்குத் தட்டி கட்டி முடித்ததும் நேராக மூஞ்சி கைகால் அலம்பி விட்டு நாகேஸ்வர ராவ் பூங்கா, கோடம்பாக்கம் பூங்கா, எட்வர்ட் எலியட்ஸ் பீச், மெரினா பீச் என்று நோட்டீஸ் கொடுக்கப் போய் விட்டார்கள்.  இவர்களில் ஒருவர் சீனியர் டாக்டர்.  எதற்கு இவ்வளவும்?  இந்த விழா பிரம்மாண்டமாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான்.  அரங்கத்தில் ஒரு இருக்கை கூட காலியாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான்.

எனவே அனுமதி இலவசம், வாருங்கள்…