ஏன் காமராஜ் அரங்கம்?

அன்புள்ள வாசகர்களுக்கு,

பின்வரும் கடிதத்தை சென்ற மாதம் என் நெருக்கமான நண்பர்கள் மூன்று பேருக்கு அனுப்பி வைத்திருந்தேன்.  அதை உங்களோடும் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.  கடிதம்:

புதிய எக்ஸைல் வெளியீட்டு விழா வரும் ஜனவரி 5-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள காமராஜ் அரங்கத்தில் நடைபெற உள்ளது.  கிறிஸ்துமஸ் விடுமுறையும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் முடிந்து அலுவலகங்களும் கல்வி நிலையங்களும் திறக்கும் தேதி ஜனவரி 5.  திங்கள் கிழமை.  சிரமத்துக்கு என்னை மன்னிக்க வேண்டும்.  ஏனென்றால், அது மார்கழி மாத இசைப் பருவம் என்பதால் சென்னையில் எந்தப் பெரிய அரங்கமும் கிடைக்கவில்லை.  சிறிய அரங்கத்தில் விழாவை வைத்தால் பலரும் நிற்க வேண்டியிருக்கிறது.  பலரும் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.  அதனால்தான் காமராஜ் அரங்கத்தைத் தேர்ந்தெடுத்தோம்.  2000 பேர் கொள்ளளவு உள்ள அந்த அரங்கத்தில்தான் இரண்டு முறை என்னுடைய புத்தக வெளியீட்டு விழாக்கள் நடந்திருக்கின்றன.  இரண்டு முறையுமே அரங்கம் நிறைந்த கூட்டம்.  சென்ற விழாவில் பேசிய இந்திரா பார்த்தசாரதி, “இவ்வளவு பெரிய அரங்கத்தில் – அதுவும் ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசுவது என் வாழ்நாளில் இதுவே முதல் முறை” என்று குறிப்பிட்டார்.

இப்போது 2015 ஜனவரி 5-ஆம் தேதி நடக்கும் “புதிய எக்ஸைல்” வெளியீட்டு விழா காமராஜ் அரங்கில் நடக்கும் என்னுடைய மூன்றாவது புத்தக வெளியீட்டு விழா.  இந்த விழாவுக்கு வந்து கலந்து கொள்ள வேண்டும் என நான் உங்களை அழைக்கிறேன்.  இது குறித்து நான் உங்களிடம் மேலும் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.

முக்கியமாக, இது என்னுடைய புத்தக வெளியீட்டு விழா என்று நான் நினைக்கவில்லை.  வெளிப்படையாக அப்படித் தெரிந்தாலும் அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.  ஏனென்றால் –

இன்று தமிழில் எழுதும், தமிழை நேசிக்கும் எல்லா எழுத்தாளர்களையும் என் முப்பாட்டன் பாரதியின் வாரிசாகவே காண்கிறேன்.  அதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?  பாரதி கொடுத்துச் சென்ற பந்தத்தைத்தான் நம் பாட்டன்மார்கள் சி.சு. செல்லப்பாவும், க.நா.சு.வும் முன்னெடுத்துச் சென்றார்கள்.  அது ஒரு வேள்வியைப் போல் நடந்ததென்பது உங்களுக்குத் தெரியும்.  எழுத்து பத்திரிகையைத் தன் சொத்தை விற்றுத்தான் நடத்தினார் சி.செ.செல்லப்பா என்று என் மூத்த சகோதரர்கள் சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவன் நான்.  எழுத்து பத்திரிகையைத் தன் தோளில் போட்டுக் கொண்டு கல்லூரி கல்லூரியாகச் செல்வார் என்று வெங்கட் சாமிநாதன் என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்.

எழுத்தைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகள்.  பல்வேறு வேள்விகள்.  அஃக் பரந்தாமன் ஞாபகத்துக்கு வருகிறார்.  கசடதபற, ங, பிரக்ஞை, கொல்லிப்பாவை, யாத்ரா, இலக்கிய வெளிவட்டம், படிகள், நிறப்பிரிகை, மீட்சி, பரிமாணம் என்று எத்தனை எத்தனை பத்திரிகைகள்… இவர்கள் எல்லோரும் தங்கள் குருதியையும் வியர்வையையும் பாய்ச்சி உழுது பண்படுத்திய நிலத்தில்தான் இன்று நாங்கள் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்ச்சி என் மனதில் எப்போதும் எந்தக் கணத்திலும் ததும்பிக் கொண்டே இருக்கிறது.  அதை மறந்த ஒரு பொழுது என் வாழ்வில் இல்லை.

மௌனியும், நகுலனும், தி. ஜானகிராமனும், கு.ப.ரா.வும், கரிச்சான் குஞ்சுவும், தர்மு சிவராமுவும்,  எம்.வி. வெங்கட்ராமும், அசோகமித்திரனும், ந.முத்துசாமியும், இந்திரா பார்த்தசாரதியும், ஆதவனும், தேவதச்சனும், தேவதேவனும், நாரணோ ஜெயராமும், அபியும், ஞானக்கூத்தனும், ஆத்மாநாமும், கலாப்ரியாவும் மற்றும் நூற்றுக் கணக்கான என் ஆசான்கள் புழங்கிய, சுவாசித்த இந்தத் தமிழில் ஏதோ கொஞ்சமாக நானும் எழுதிப் பார்க்கிறேன்.  கணையாழியில் நான் படித்த பிரபஞ்சனின் பிரம்மம் என்ற கதை இன்னமும் என் ஞாபக அடுக்கில் கிடக்கிறது.  அதேபோல் ந. முத்துசாமியின் நீர்மை.  அதில் வரும் அந்த விதவைப் பெண்மணியை இன்னமும் என் நெஞ்சில் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறேன். நாஞ்சில் நாடனின் என்பிலதனை வெயில் காயும் நாவலைப் படித்து விட்டு தில்லியிலிருந்த நான் பம்பாயில் இருந்த அவருக்கு (வெங்கட் சாமிநாதனிடமிருந்து விலாசம் வாங்கி) எழுதிய கடிதம் அவருக்கு இதுவரை வந்துள்ள பல நூறு வாசகர் கடிதங்களில் மறக்க முடியாததாக இருக்கலாம்.  இருந்தால் நான் அதிர்ஷ்டசாலி.  திடீரென்று இப்போது என் நண்பர் கோபி கிருஷ்ணனின் ஞாபகம் வருகிறது.  எத்தனை பேர் இந்தத் தமிழை செழுமைப்படுத்தியிருக்கிறார்கள்!

அவர்களுக்கெல்லாம் நம் வணக்கத்தைச் சொல்லும் ஒரு இலக்கியக் கொண்டாட்டமாகவே ஜனவரி 5 காமராஜ் அரங்க விழாவை நான் கருதுகிறேன்.  அதனால்தான் அதை என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவாகக் கருதவில்லை என்று குறிப்பிட்டேன்.   அதனால்தான் உங்களையும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன்.  இதை ஒரு இலக்கிய விழாவாகக் கருதுங்கள்.  தமிழ்நாட்டில் சினிமாவுக்கு மட்டும்தானே இவ்வளவு பிரம்மாண்டமான விழா கொண்டாடுகிறார்கள்?  அதை நாம் மாற்றிக் காட்டுவோம்.

விழாவில் தருண் தேஜ்பால் பேசுவார்.  ஊடக நண்பர் நெல்சன் சேவியர் பேசுவார்.  கவிஞர் அமிர்தம் சூர்யாவும், நண்பர் ஆர். ராமகிருஷ்ணனும் பேசுவார்கள்.  இந்த ராமகிருஷ்ணன் யார் என்பதை மேடையில் அறிந்து கொள்ளலாம்.  அடியேனும் பேசுவேன்.  ரோமிலாவும், வெண்பாவும், அராத்துவும் மேடையில் ஒருங்கிணைப்பாளர்கள்.  முதலில் நினைத்தேன், என் நண்பர்களை நாவல் பற்றிப் பேசச் சொல்லலாமா என்று.  ஆனால் அதையெல்லாம் செய்தாயிற்று.  என் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளில் நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், பாரதி கிருஷ்ணகுமார், இந்திரா பார்த்தசாரதி, மதன் என்று பலரும் பேசியிருக்கிறார்கள்.   இப்போது மீண்டும் இந்த ஆயிரம் பக்க நாவலைப் படிக்கச் சொல்லி, அது பற்றி மேடையில் பேசச் சொல்லி…  இந்த நாவலை அவர்கள் ஒரே மாதத்தில் பரீட்சைக்குப் படிப்பது போல் படிக்க வேண்டும்.  ஏன் இந்த சங்கடத்தையெல்லாம் நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.  அதனால்தான் ஜாலியாக வாருங்கள், கொண்டாடுவோம் என்கிறேன்.

நினைவூட்டுகிறேன்… ஜனவரி 5, திங்கள் கிழமை, காமராஜ் அரங்கம், மாலை 6.30 மணி.  மிகச் சரியாக ஆறரை மணிக்கு விழா தொடங்கி விடும்.  எட்டரைக்கு முடிந்து விடும்.

கடைசியாக ஒரு பின்குறிப்பு:  நண்பர்களே… புதிய எக்ஸைல் வழக்கமான என் எழுத்தைப் போல் இருக்காது.  மரங்களும் செடி கொடிகளும் நாய்களும் பூனைகளும் யானைகளும் நிறைந்த ஒரு நாவல்.  மனித வர்க்கம் கொஞ்சம் கம்மி தான்.  சூழலியலாளர்கள் இந்த நாவலை அவசியம் படிக்க வெண்டும் என்பது என் வேண்டுகோள்… நிதானமாக அடுத்த ஆண்டு நீங்கள் படிக்க வேண்டிய புத்தகப் பட்டியலில் இதை வைத்துக் கொண்டால் போதும்…

அன்புடன்,

சாரு