புதிய எக்ஸைல் விழா பதிவுகள் (3) : மன்னிக்க வேண்டும் நண்பா!

புத்தகத்தில் கையெழுத்திட 5000 ரூ. கட்டணம் என்ற என் முடிவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.  நேற்று மூன்று வாசகர்கள்/நண்பர்கள் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள்.  15000 ரூ கிடைத்தது.  மூன்று மாதம் மாத்திரை வாங்க அந்தப் பணம் போதும். ஆனாலும் இனிமேல் என் கையெழுத்துக்குப் பணம் வாங்க மாட்டேன்.  ஏனென்றால், மரத்தில், செடியில் ஒரு இலை வாடி இருந்தால் கூட என் மனம் வாடும் தன்மை கொண்டவன் நான்.  இப்போதைய சாரு அப்படித்தான்.  சிலருக்கு அல்லது பலருக்கு அது நம்ப முடியாததாக இருக்கலாம்.  அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.  எனக்கு நான் உண்மையாக இருக்கிறேன்.  அவ்வளவுதான்.  இப்படி ஒரு பயிர் வாடுவதைக் கண்டு வாடும் மனம் கொண்ட எனக்கு நேற்று ஒரு சம்பவம் நடந்தது.  20 வயதுள்ள ஒரு இளைஞர் வந்து புதிய எக்ஸைலில் கையெழுத்து கேட்டார்.  மறுத்து விட்டேன்.  அப்போது அவர் முகம் மிகுந்த ஏமாற்றத்துடன் வாடிப் போனதை கவனித்தேன்.  அவரைத் திரும்ப  அழைப்பதற்குள் வேறு ஏதேதோ…  பயிரைக் கண்டே வாடும் நான் மனிதர்களை வருத்தப்பட வைக்கலாகாது என்பதைப் புரிந்து கொண்டேன்.

இனிமேல் என் கையெழுத்துக்கு ஒரு பைசா வேண்டாம்.  சென்னை புத்தக விழாவுக்கு தினமும் வருகிறேன்.  தினமும் உயிர்மை அரங்கிலும் கிழக்கு அரங்கிலும் அமர்ந்து என் புத்தகங்களில் கையெழுத்து இட்டுத் தருகிறேன்.  ஆனால் ஒரே ஒரு நிபந்தனை வைக்க என்னை அனுமதியுங்கள்.  என் புத்தகங்களில் மட்டும்தான் கையெழுத்து இடுவேன்.  துண்டுக் காகிதம், டயரி, பஸ் டிக்கட், உடல் உறுப்புகள், மற்ற எழுத்தாளர்களின் நூல்கள் போன்றவற்றில் கையெழுத்திட மாட்டேன்.  என் புத்தகங்களில் கையெழுத்து கிடைக்கும்.

நேற்று என்னிடம் கையெழுத்து கேட்ட இளைஞர் இதைப் படிக்க நேர்ந்தால் அந்தத் தம்பியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதோடு, புத்தக விழாவுக்கு வருமாறு அழைக்கிறேன்.  அங்கே கையெழுத்திட்டுத் தருகிறேன்.

***