ஒரு பொறாமை பொச்சரிப்பு கட்டுரை…

ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, எனக்கு இருக்கிறது.  சான்றுகளை ஏற்கனவே இந்தப் பக்கங்களில் பலமுறை எழுதியிருக்கிறேன்.  எனக்கு இப்போது பெருமாள் முருகனின் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.  மொக்கை கதைகள் எழுதப் போகும் இந்த ஜாதகதாரருக்கு 2015-இல்  ஒரு குருட்டு அதிர்ஷ்டம் அடித்து பார் புகழும் எழுத்தாளர் ஆகப் போகிறார் என்று அவருடைய கட்டங்களில் நிச்சயம் எழுதப்பட்டிருக்கும்.  நாமெல்லாம் உயிரை விட்டு எழுதினாலும் ‘பார்’ புகழும் எழுத்தாளராகத்தான் ஆக முடிகிறது.  டென் டௌனிங்கில் போய்க் கேட்டால் அந்த ரைட்டர் தானே, சர்வ சாதாரணமா எட்டு ரவுண்டு மொஹிதோ அடிப்பாரே, இப்ப எங்க கொஞ்ச நாளா ஆளைக் காணும்? என்று என் பெருமையைச் சொல்வார்கள்.  நம் ஜாதகம் அப்படி.

முந்தாநாள் நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஒரு நண்பரைப் பார்த்தேன்.  நாகர்கோவில் எழுத்தாளருக்கெல்லாம் இவர் நல்லது செய்திருக்கிறார்.  இவ்வளவுக்கும் பூங்காவின் பக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குப் பக்கத்தில் தான் வீடாம்.  ஏழு ஆண்டுகளாக என்னோடு பழக்கம் இல்லை.  அதற்கெல்லாம் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்.

இந்த முரகாமியும் நம் பெருமாள் முருகன் மாதிரிதான் போல.  முழுப்பெயர் ஹாருகி முரகாமியாம்.  ஜப்பானில் இவர் புத்தகங்கள் 20 லட்சம் 30 லட்சம் பிரதிகள் விற்கிறதாம்.  லட்சமோ, கோடியோ, ஞாபகம் இல்லை.  இந்த வயிற்றெரிச்சல் எழவெல்லாம் யாருக்கு ஞாபகம் இருக்கும்?  இவ்வளவுக்கு நான் ஒரு அனாதை; எனக்கு ஒரு நல்ல வாசகரே இல்லை என்று பிரலாபிக்கிறார் முரகாமி.  எல்லாம் நேரம்.  சரி, இவ்வளவு பேமஸா இருக்கிறாரே என்று ஒரு நாவலைப் படித்துப் பார்த்தேன்.  தூ தூ… கொடுமை கொடுமை.  என்னுடைய வைர நேரமெல்லாம் பாழ்.  நாவலா அது… இன்றைய தினம் இஸ்தான்புல் என்று தவறாக உச்சரிக்கப்பட்ட/பிரசுரிக்கப்பட்ட ஓரான் பாமுக்கின் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை எடுத்தேன்.  ஜி.குப்புசாமி மொழிபெயர்ப்பு.  மொழிபெயர்ப்பாளர் பற்றிய குறிப்பில் மீண்டும் அந்த ஆகாதவனைப் பார்த்தேன்.  யார்?  அந்த முரகாமியோ குரகாமியோ.  நம் குப்ஸ் முரகாமியின் சிறுகதைத் தொகுப்பையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் போல.  நூறு சதவீதப் பொருத்தமான ஒரு யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்த போது என்பது அந்தத் தொகுப்பின் பெயர்.  சரி என்று அந்தக் கதையை மட்டும் ஆங்கிலத்தில் படித்தேன்.  நம் தமிழ் முகநூலில் சில குஞ்சுகள் கிறுக்கும் அல்லவா, அந்தக் கிறுக்கல் போல் இருந்தது.  இப்படிப்பட்ட மொக்கை எழுத்தாளரெல்லாம் எப்படி உலகப் புகழ் பெறுகிறார்?  ஜாதகம் தான்.  அதிர்ஷ்டம்தான்.  இனிமேலாவது ஜாதகம், அதிர்ஷ்டம் எல்லாம் மூட நம்பிக்கை என்பதை விட்டு விடுங்கள்.  ஒருவேளை என் மூளைதான் மழுங்கி கிழுங்கி போய் விட்டதா என்று கதையைப் படித்து விட்டுச் சொல்லுங்கள்.  கதையில் ஒரு வெங்காயமும் கிடையாது.  குமுதம் ஒரு பக்கக் கதை என்று 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கதையெல்லாம் வந்து விட்டது.  ஒன்னுமே புரியல…  எப்படித்தான் இப்படி ஒலகப் புகழ் அடையிறாங்கிளோ தெரியல…

அந்தக் கதையின் இணைப்பு கீழே:

http://youmightfindyourself.com/post/22131227213/on-seeing-the-100-perfect-girl-one-beautiful