என் எழுத்தைப் படித்து படை, அரிப்பு போன்ற சரும வியாதிகள் வருபவர்கள் இதைப் படிக்க வேண்டாம்…

நான் இரவில் பழம் மட்டுமே சாப்பிடும் வழக்கம் உடையவன் என்பதாலும் என் தேக ஆரோக்கியத்தைக் கருதியும் என்னைச் சந்திக்க வரும் நண்பர்கள் பழம் வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  அவர்களுடைய அன்புக்கு என் நன்றி.  ஒருவகையில் இது அவர்களுக்கே செய்து கொள்ளும் உபகாரமாகவும் நான் பார்க்கிறேன்.  நான் நீண்ட நாள் வாழ்ந்தால் நீண்ட நாள் எழுதுவேன்.  அந்த எழுத்து அவர்களுக்கு நன்மை அளிக்கிறது.  என் எழுத்தைப் படித்துப் பலரும் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் என்றாலும் பொதுவாக அது நன்மையையே அளிக்கிறது என்று பலரும் சொல்வதை நான் நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் எனக்குப் பழம் அளிக்கும் நண்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள் இது.  மற்றவர்கள் இதைப் படித்து மனப்பிறழ்வு அதிகம் கொண்டு உடம்பைப் பிறாண்டிக் கொண்டால் அதற்கு நான் ஜவாப்தாரி அல்ல.  நான் கோவை சென்ற போது என்னைச் சந்திக்க வந்த நண்பர்கள் அஞ்சு பேர் ஆளுக்கு அஞ்சு கிலோ ஆப்பிளை வாங்கி வந்ததால் ஒரு பெரிய மூட்டையில் போட்டு போர்ட்டர் மூலம் சென்னை வந்து சென்னை செண்ட்ரலில் இருந்தும் போர்ட்டர் மூலம் ஆட்டோவில் வைக்கச் சொல்லி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வந்தேன்.  பிறகு ஈரோடு சென்ற போதும் இவ்வாறே போர்ட்டர் மூலமே பத்து கிலோ ஆப்பிளைத் தூக்கி வந்தேன்.  சமீபத்தில் என் நெருங்கிய நண்பர் 4000 ரூபாய்க்கு ஆப்பிளும் மாதுளையும் வாங்கி நண்பரிடம் கொடுத்து அனுப்பினார்.

இந்த அன்புக்குக் கைம்மாறு என்னவென்றால், தினம் இந்த அறையில் (பதினஞ்சுக்குப் பதினஞ்சு இருக்குமா செல்வா, அல்லது பத்துக்குப் பத்தா?)  காலை பத்து மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை படிப்பும் எழுத்துமாகவே இருக்கிறேன்.   மற்றவர்களுக்கு இது தனிமைச் சிறை.  எனக்கு சொர்க்கம்.  செய்யும் காரியம் அவ்வளவு அற்புதம் என்பதால் இந்தச் சிறிய அறையே சொர்க்கமாகி விட்டது.  நிற்க.  இப்போது என் அன்பு நண்பர்களுக்கு என் வேண்டுகோள் என்னவென்றால், பழம் என்றால் ஆப்பிள் மட்டும் அல்ல என்று சொல்வதற்காகத்தான்.  பழங்களில் எத்தனையோ வகை உள்ளன.  அது ஏன் எல்லா நண்பர்களும் ஆப்பிளை மட்டுமே பழம் என்று கருதுகிறார்கள் என்று தெரியவில்லை.  கறுப்புத் திராட்சை, உலர வைத்த அவகாதோ (Avacado), கொய்யா, கூஸ்பெரி (gooseberry), செர்ரி, ப்ளம்ஸ், அத்திப் பழம், உலர்ந்த அத்திப்பழம், கிவி என்று பழங்களில் எத்தனையோ வகைகள் உள்ளன.  ஒருமுறை பார்ட்டியின் போது ஒரு நண்பரை பழம் வாங்கி வாருங்கள் என்று சொன்ன போது பப்பாளிப் பழம் வாங்கி வந்தார்.  அதுவும் காய்.  என்னடா இது, பழம் வாங்கிக் கொடுத்தால் அதையும் விமர்சிக்கிறானே என்று நினைக்காமல் தயவு செய்து புரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.  உலர்ந்த அவகாதோ (Avacado) Nuts and Spices கடையிலும் இன்னும் சில பெரிய டிபார்ட்மெண்டல் கடைகளிலும் கிடைக்கும்.  இதை ஏன் வலிந்து கட்டி எழுதுகிறேன் என்றால், நீங்கள் எத்தனையோ பேரைப் பார்க்கச் செல்வீர்கள்.  எத்தனையோ நோயாளிகளைப் பார்க்க மருத்துவமனை செல்வீர்கள்.  உறவினர் வீடுகளுக்குச் செல்வீர்கள்.  எல்லோருமே எப்போதுமே ஆப்பிளை மட்டுமே வாங்கிச் செல்லாதீர்கள்.  ரொம்பக் குழப்புகிறேனா?  சரி, எதுவும் வேண்டாம்.  பாதாம் பருப்பு வாங்கிச் செல்லுங்கள்.  பாதாம் பருப்பு கெட்டுப் போகாது.  நீண்ட நாள் வைத்திருந்து சாப்பிடலாம்.  உடம்புக்கும் நல்லது.

என்னைப் பொறுத்தவரை சொல்கிறேன். என் ஆரோக்கியம் உங்கள் அக்கறை எனில் ஆப்பிள், மாதுளையைத் தவிர்த்து விட்டு, பாதாம் பருப்பு, அவகாதோ, உலர்ந்த அத்திப்பழம், உலராத அத்திப்பழம், கருப்புத் திராட்சை, கொய்யா, கடைசியாக பையில் இடம் இருந்தால் மட்டும் ரெண்டு ஆப்பிள், ரெண்டு மாதுளை வாங்கி வரலாம்.  அல்லது, உங்களுக்கும் வேண்டாம்; எனக்கும் வேண்டாம். என் கையில் ரூபாயைக் கொடுத்து விடுங்கள்.  நானே வாங்கிக் கொள்கிறேன்.  ராதாகிருஷ்ணன் சாலையில் ஸ்பென்ஸர் வாசலில் அதியற்புதமான பழக்கடை உள்ளது.  உள்ளே நுழைந்தால் ஆயிரம் ரூபாய் பழுத்து விடும்.  ஆனால்  அங்கேயும் உலர்ந்த அவகாதோ கிடைக்காது.  அது நட்ஸ் அன் ஸ்பைஸில்தான் கிடைக்கும்.  அவகாதோ என்றால் முழிப்பார்கள்.  அவகாடோ என்று தப்பாக உச்சரித்தால்தான் புரியும்.  (போர்ஹேஸை போர்ஹே என்று சொல்வது போல!)

அசிங்கமாக எழுதுவதாக நினைக்க வேண்டாம். எதார்த்தமாக இருக்கலாமே என்றுதான்.  பெரியாரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட நல்ல பழக்கங்களில் இது ஒன்று.  இல்லாவிட்டால், உங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தவுடனேயே ஒரு மருந்துக் கடை இருக்கும்.  (இப்போதெல்லாம் ஒரு தெரு என்று எடுத்துக் கொண்டால் அதில் வீடுகளை விட மருந்துக் கடைகள் தான் அதிகம் இருப்பதால் சொல்கிறேன்.) அந்த மருந்துக் கடையில் Brilinta 90 mg என்று ஒரு மாத்திரை இருக்கும்.  14 மாத்திரை ஒரு டப்பா.  ஒரு டப்பாவின் விலை 700 ரூ.  நான் ஒரு மாதத்துக்கு 4 டப்பா சாப்பிட வேண்டும்.  இன்னும் ஒன்பது மாதம் சாப்பிட வேண்டும்.  அதை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விடுங்கள்.  மிகவும் எளிது.

மீண்டும் சொல்கிறேன்.  இதிலெல்லாம் உணர்ச்சிவசப்படாமல் எதார்த்தமாக யோசியுங்கள்.  ஏதும் தவறாக எழுதியிருந்தால் மன்னியுங்கள்.  ஆனால் குற்றவுணர்ச்சி கொண்டு என்னிடம் வருத்தம் தெரிவிக்காதீர்கள்.  அது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும்.  அன்பாகச் செய்யும் விஷயங்களில் தப்பு பார்க்கக் கூடாது என்பார்கள்.  ஆனால் நான் ஊரோடு ஒத்து ஊதுபவன் அல்ல.  ஒரு நண்பர் என் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் கேக்கும் மலர்க் கொத்தும் குரியரில் அனுப்புவார்.  நான்கு ஆண்டுகள் பார்த்து விட்டு நண்பரிடம் சொல்லி விட்டேன்.  வரும் கேக்குகள் ஆக மட்டமாக இருக்கின்றன.  பூங்கொத்தும் அப்படியே.  இவ்வளவுக்கும் நண்பரிடமிருந்து நிறைய பணம் வாங்கிக் கொண்டு இப்படி ஏமாற்று வேலை செய்கிறார்கள்.  அதனால் சொல்வது என் கடமை இல்லையா?  எதற்கு எனக்கும் உதவாமல் நண்பருக்கும் வீணான பணச் செலவு?

முன்பெல்லாம் என் காலை உணவில் அவகாதோ இருந்தது.  இப்போது நிலவும் கடும் பஞ்சத்தில் அவகாதோவை கண்ணால் பார்த்தே பல ஆண்டுகள் இருக்கும்.

பின் குறிப்பு: Brilinta போல் இன்னும் ஒன்பது வகை மாத்திரைகளை உட்கொள்கிறேன்.  காலையில் பத்து மாத்திரை.  இரவு பத்து மாத்திரை.  அந்தக் கதையெல்லாம் இங்கே சேர்த்தால் அப்புறம் நீங்கள் நேரில் வரவே அஞ்சுவீர்கள்.  எனவே ப்ரிலிண்டாவோடு நிறுத்திக் கொண்டேன்…

 

Comments are closed.