கேள்வி பதில் மீண்டும் தொடர்கிறது. நண்பர்கள் கேள்விகளை அனுப்பலாம். இப்போது ஒரு கேள்வி பதில்:
அன்பு சாரு ஐயா அவர்களுக்கு,
இனியவன் எழுதுவது. தாங்கள் நலம் அல்லவா?
நீங்கள் கல்லூரி மாணவர்களிடம் இலக்கிய, சமூக விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டுகிறேன். உங்களால் ஒரு தலை முறை ஏன் திருந்த கூடாது?
அன்புடன்,
இனியவன்.
மார்ச் 21.
அய்யா,
பொறாமை பொச்சரிப்பு கட்டுரை எழுதும் நேரத்தில், எனது ஆக்கபூர்வமான கேள்விக்கு பதில் எழுதலாமே அய்யா? உங்களின் வழக்கமான பொறாமை பொச்சரிப்பு கட்டுரையினால் இந்த சமூகத்துக்கு என்ன லாபம்?
அன்புடன்,
இனியன்.
மார்ச், 23.
அன்புள்ள இனியவன்,
என்னை அய்யா அய்யா என அழைப்பவர்கள் அனைவருமே நான் இதுகாறும் என் எழுத்து இயக்கத்தின் மூலம் எதையெல்லாம் சொல்லி வந்தேனோ அதற்கு நேர் எதிர் இடத்தில் நிற்பதைக் கண்டு அஞ்சியிருக்கிறேன். பொதுவாகவே எனக்கு இந்த அய்யா என்ற வார்த்தை அசூயையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. ஏனென்றால், அய்யா என்ற வார்த்தையைப் பயன்படுத்துபவர்கள் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளைக் கொண்டவர்களாக இருப்பதையே காண்கிறேன். மார்க்சீயவாதிகளாக இருந்தாலும் அவர்களிடம் செயல்படுவது நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் தாம். மதத்துக்குப் பதில் மொழி வெறி. உலகிலேயே என் மொழிதான் சிறந்த மொழி. என் இனம்தான் சிறந்த இனம். உலகிலேயே என் இனம் தான் மிக அதிகமாக ஒடுக்கப்படுகிறது. ஆ. ஊ. ஆ. ஊ. இன வெறி, மொழி வெறி, ஜாதி வெறி, ஆணாதிக்கம், கலாச்சார அடிப்படைவாதம் இன்னபிற எல்லாம்தான் நிலப்பிரபுத்துவ சிந்தனைகள். நல்லவேளையாக எனக்குத் தமிழ் கற்பித்த நாகூர் சீனி. சண்முகம் அவர்கள் எங்களை அய்யா என்று அழைக்கச் சொல்லவில்லை. சார் தான். நிலப்பிரபுத்துவத்தை நினைவுபடுத்தும் அய்யாவை விட நவீனத்துவத்தை அறிமுகப்படுத்திய சார் பரவாயில்லை. அய்யா என்ற வார்த்தை எனக்கு ஜாதி அடையாளத்தை மட்டுமே ஞாபகப்படுத்துகிறது.
1947-க்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த ஒரு தீண்டத் தகாதவனைப் போல் தான் நான் யோசிக்க வேண்டியிருக்கிறது. தீண்டாமையை நிர்ப்பந்தித்த இந்து மதமா? தேசத்தைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் வெள்ளைக்காரனா? இந்த விஷயத்தில் நான் வெள்ளைக்காரன் பக்கம் தான் சேருவேன். என்னைத் தீண்டத்தகாதவன் என்று சொல்லும் லோக்கல் மதமோ, லோக்கல் தலைவரோ, லோக்கல் கொள்கைகளோ எனக்கு வேண்டாம். அதேபோல் நிலப்பிரபுத்துவ அய்யாவா? நவீனத்துவ சாரா? இரண்டும் வேண்டாம். பின்நவீனத்துவ சாரு! சாரு என்று அழையுங்கள். இல்லாவிட்டால் சார். அய்யா வேண்டாம். அய்யா என்று சொல்பவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தை வெறுப்பவர்கள். ஆங்கிலம் தெரியாதவர்கள். பத்தாம்பசலிகள். நிலப்பிரபுத்துவ சிந்தனைகளில் ஊறிய அதிகார குணம் கொண்டவர்கள். பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் கூட அவர்கள் சகிக்க மாட்டார்கள். பெண்கள் தாவணி போட வேண்டும் என்று நினைப்பவர்கள். (இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் அவர்கள் கட்சி! ஆனால் காரணம் வேறு!) இப்படிப்பட்ட கொடூரமான ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்களே அய்யா என்று அழைக்கிறார்கள். அய்யா என்பது தீண்டத்தகாதவனாக நடத்தப்பட்ட என் பாட்டன் அவன் ஆண்டையை அழைத்த வார்த்தை. அந்தப் பின்னணி தெரியாமல் என்னை ஏன் அப்படி அழைக்கிறீர்கள்? என்னை அய்யா என்று அழைக்கிறீர்கள் என்றால் என் எழுத்தை நீங்கள் வாசிக்கவே இல்லை என்றுதான் அர்த்தம். அல்லது, வாசித்தாலும் உங்களுக்கு எதுவுமே புரியவில்லை.
இப்போது உங்கள் கேள்விக்குப் பதில். நான் கல்லூரி மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒத்துக் கொள்கிறேன். ரொம்பக் காலத்துக்கு முன்பு ஜெயகாந்தன் அதைச் செய்தார். அவர் பேச்சும் எழுத்தும் எனக்கு ஒரு கட்டம் வரை வழிகாட்டியாக இருந்தன. பல கல்லூரிகளில் ஜெயகாந்தன் உரையாற்றியிருக்கிறார். இப்போது அந்த வேலையை ஞாநி, எஸ். ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் போன்ற நண்பர்கள் செய்து வருகிறார்கள். ஆனாலும் இளைய சமுதாயம் ஒரு இஞ்ச் கூட முன்னே சென்றதாகத் தெரியவில்லை. வெளியே சினிமா, தொலைக்காட்சி என்ற சூறாவளி ஆபாசங்கள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன. இளைய சமுதாயம் அதற்கு அடிமையாகி எத்தனையோ காலம் ஆகிறது. மூன்று பேரால் எதையும் செய்ய முடியாது. இது பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் செய்ய வேண்டிய வேலை. ஆனால் கல்வியாளர்களே சினிமாவுக்கும் தொலைக்காட்சிக்கும் அடிமையாகிக் கிடப்பதால் ஒட்டு மொத்தமாக இந்த சமூகத்தையே திருத்த வேண்டும்.
ஞாநி, எஸ். ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் போன்றவர்களை களப் பலிக்கு நேர்ந்து விட்டு காலம் ஆகிறது. இன்னும் பலி தேவை என்கிறீர்கள். சரி. நான் தயார். வாரம் மூன்று கல்லூரிகளில் பேசத் தயார். காசு வேண்டாம். நீங்கள் ஏற்பாடு செய்து தாருங்கள்.
தருவீர்களா இனியவன்?
***
நீங்கள் எத்தனை நாளாக என் எழுத்தை வாசிக்கிறீர்கள், ம்? குண்டியை மறைக்கக் கோவணம் இல்லை; நீங்கள் பட்டுப் பீதாம்பரம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். விவரம் சொல்கிறேன். தமிழ்நாட்டில் என்னை எந்தக் கல்லூரியிலும் பேச அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால், என் மீது கண்ணுக்குப் புலனாகாத ஒரு தடை நிலவுகிறது. விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் என் எழுத்து வராததற்கும் அவர்கள் விதித்திருக்கும் இந்த invisible ban தான் காரணம். சமீபத்தில் ஒரு ஃப்ரெஞ்ச் பெண் (சென்னையில் படிக்கிறார்) தன் ஆசிரியையிடம், “சாருவின் எழுத்துக்களையும் ஃப்ரெஞ்ச் பின்நவீனத்துவ சிந்தனையாளர்களையும் (ரொலான் பார்த், ஃபூக்கோ) ஒப்பிட்டு ஆய்வு செய்யப் போகிறேன்” என்று சொன்ன போது அந்த ஆசிரியையின் எதிர்வினையை நான் நடித்துத்தான் காண்பிக்க முடியும். அந்த ஆசிரியை சென்னையில் பிரபலமானவர். பெயரைச் சொன்னால் மாணவிக்கு ஆபத்து. அந்த ஆசிரியை வேறு பல பெயர்களை சிபாரிசு செய்தாராம். அவர்களில் சிலர் பெருமாள் முருகன், பிரபஞ்சன், திலீப் குமார், ஜெயமோகன், ரா.பி. சேதுப்பிள்ளை. இப்படி என் பெயரைச் சொன்னாலே தெறித்து ஓடும் நிலையில் உள்ள கல்வியாளர்களா என்னை மாணவர்களிடையே பேச அழைப்பார்கள்? இதுவரை தமிழ்நாட்டில் நான் மூன்று கலாசாலைகளில் மட்டுமே பேச அழைக்கப்பட்டிருக்கிறேன். கேரளத்தில் நான் பேசாத கல்லூரியே இல்லை என்று சொல்லலாம். சில கல்லூரிகளில் இரண்டு மூன்று முறை. சில மருத்துவக் கல்லூரிகளிலும் பேசி இருக்கிறேன். ”மருத்துவம் பயிலும் மாணவர்களிடையே அடிக்கடி தற்கொலை நடக்கிறது; என்ன செய்யலாம்?” என்று அப்போது கேள்வி பதில் நேரத்தில் ஒரு மாணவர் கேட்டது இன்னமும் எனக்கு நினைவு இருக்கிறது. ஐந்து ஆண்டுகள் இருக்கலாம்.
ஆனாலும் மனம் தளராதீர்கள். முயற்சி செய்து கல்லூரிகளைப் பிடியுங்கள். பேச நான் தயார். ஆனால் அதற்காக ஒவ்வொரு கல்லூரி வாசலிலும் நின்று ஏ பாவிகளே என்று என்னால் அழைக்க முடியாது. அந்த அளவுக்கு நான் கீழே இறங்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
அடுத்து என் எழுத்து மீதான உங்கள் விமர்சனம். விமர்சனம் செய்யும் அதே நேரத்தில் உங்கள் கேள்விக்கு நீங்களே வேறு சபாஷ் சொல்லிக் கொள்கிறீர்கள்; உங்கள் கேள்வி ஆக்கபூர்வமான கேள்வி என்று. உண்மையில் உங்கள் கேள்வி படு முட்டாள்தனமானது. உங்கள் கேள்வியை ஆக்கபூர்வமானது என்று நீங்கள் சொல்லும் போது அதைப் படுமுட்டாள்தனமான கேள்வி என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏன் முட்டாள்தனமான கேள்வி என்பதை இதுவரையிலான பதிலிலேயே புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் புரிந்து கொள்வீர்கள் என்பதற்கான நம்பிக்கைக் கீற்று எதுவும் உங்கள் கேள்விகளில் இல்லை. அதனால் அதை விட்டு விட்டு அடுத்த கேள்விக்குச் செல்வோம். பொறாமை பொச்சரிப்பு கட்டுரையால் சமூகத்துக்கு என்ன பயன் என்பது உங்கள் அடுத்த கேள்வி. ம்ஹும். இப்போதுதான் மேலே போய் உங்கள் கேள்வியை மீண்டும் பார்த்தேன். பயன் என்பது என் வார்த்தை. ”சமூகத்துக்கு என்ன லாபம்?” என்று கேட்கிறீர்கள். இதிலிருந்தே தெரிகிறது, உங்களுக்குப் புத்தகப் படிப்பே தேவையில்லை; நீங்கள் அதையெல்லாம் கடந்து விட்டீர்கள் என்று.
சரி, லாப நஷ்டக் கணக்குப் போடுவதற்கு நான் என்ன வியாபாரமா செய்து கொண்டிருக்கிறேன்? என் எழுத்து ஒரு காட்டருவி. காட்டருவியினால் சமூகத்துக்கு என்ன லாபம் என்று திறமை இருந்தால் நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் விட்டு விடுங்கள்.
இருந்தாலும் எவ்வளவு ’அறிவார்த்தமான’ கேள்வியாக இருந்தாலும் பதில் சொல்வது என் பழக்கம் என்பதால் இதற்கும் பதில் சொல்லி விடுகிறேன். உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதா? நான் கொடுத்த இணைப்பில் இருந்த முரகாமியின் கதையைப் படித்தீர்களா? என் யூகம் சரியெனில் நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள். படிக்காததால்தான் இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். நான் சொல்ல வந்தது என்னவென்றால் (சாரு, நீ உருப்படவே போவதில்லை!), முரகாமி என்ற எழுத்தாளர் எழுதுவது மரண மொக்கை. ஆனாலும் உலகப் புகழ் பெற்றவர். இது ஒரு அபத்த நிலை. இது போன்ற அபத்தங்கள் இலக்கிய உலகில் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. காரணம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். ஒருவேளை அவர் என் மதிப்பீட்டையும் மீறி நல்ல எழுத்தாளராக இருந்தால் எனக்கு அறிவுறுத்துங்கள். என் கருத்தை மாற்றுங்கள். இதெல்லாம்தான் என் கேள்வியின் பொருள். ஆனால் இது இலக்கிய சமாச்சாரம். நீங்கள் சமூக சீர்திருத்தத்தில் ஈடுபாடு செலுத்துங்கள். நீங்கள் போக வேண்டிய இடம், சீமான் அல்லது தங்கர் பச்சான். சாரு நிவேதிதா அல்ல.