கேள்வி: ”தமிழ் வாசகனுக்கு இன்றுள்ள மிகப் பெரிய சவால் விஷ்ணுபுரத்தையும் கொற்றவையையும் எதிர்கொள்வதுதான்” என்று ஜெயமோகன் எழுதியிருக்கிறார். உங்கள் கருத்து?
செல்வகுமார் கணேஷ்.
பதில்: ஜெ. சொல்வது நூற்றுக்கு நூறு சரி. அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலரே அந்த இரண்டு நாவல்களையும் படித்ததில்லை என்பதை நான் அறிவேன். பிரச்சினை என்னவென்றால், ஜெ. தன் காலத்திலேயே legend ஆகி விட்டார் என்பதுதான். ஒருவர் லெஜண்ட் ஆகி விட்டால் அவரைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் புத்தகங்களை வைத்துக் கொண்டிருப்பதே ஒரு அந்தஸ்து. லெஜண்டின் புத்தகங்கள் தலையணை தலையணையாக அலமாரிகளில் தூங்கும். லெஜண்ட் ஒரு அலங்காரப் பொருள். இப்படி லெஜண்டான எத்தனையோ பேர் மேற்கில் இருக்கிறார்கள். மிகப் பெரிய உதாரணம், ஜேம்ஸ் ஜாய்ஸ். உலகில் அவர் பெயர் தெரியாத ஒரு இலக்கிய வாசகன் இல்லை. ஆனால் யாருமே படித்ததில்லை. படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன, இதெல்லாம் பற்றிக் கவலைப்படும் நிலையில் ஜாய்ஸ் இல்லை. அல்லது, அவருடைய ஆவி இது பற்றிக் கவலைப்படுகிறதா இல்லையா என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு நமக்கு இல்லை. ஆனால் உயிரோடு வாழும் லெஜண்டையும் அலமாரியில் வைத்து அலங்கரித்து விட்டால்?
நல்லவேளையாக என் எழுத்துக்கு அப்படிப்பட்ட ஆபத்து நேரவில்லை. என் எழுத்தைப் படிக்காமல் ஒதுங்க முடியாது என்பதே என் பலம். என் எழுத்தை வெறுக்கலாம். குப்பை என்று தூற்றலாம். ஆனால் படிக்காமல் இருக்க முடியாது. என் எழுத்தைப் படித்து மனப்பிறழ்வு கொண்டவர்களாக கத்திக் கொண்டும், தனியே இணையதளம் வைத்து என்னைத் திட்டிக் கொண்டும் இருக்கும் நண்பர்கள் குழாம் நமக்கு உணர்த்தும் செய்தி அதுதான். என் எழுத்தை விலக்க முடியாது. அதே சமயம் என் எழுத்தைப் படித்தால் மனப்பிறழ்வு உண்டாகிறது. கவனியுங்கள். நான் எல்லோரையும் சொல்லவில்லை. ஒரு பாதியைச் சொல்கிறேன். ஒரு பாதிக்கு நான் ஒரு ஜென் குருவாகவும், நண்பனாகவும், அவர்களின் வாழ்வையே மாற்றி அமைத்தவனாகவும் தெரிகிறேன். இன்னொரு பாதிக்கு மனப் பிறழ்வை உண்டாக்குபவன். இது எப்படி நிகழ்கிறது எனில், என் எழுத்து மிகுந்த புதிரான விதிகளைக் கொண்ட ஒரு ஆட்டத்தை ஆடச் சொல்லி சவால் விடுகிறது. விளையாட மறுத்து ஒதுங்குபவனையும் அந்த விளையாட்டின் புதிர்த்தன்மை எப்போதும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. ஆக, விளையாட்டின் ஆரம்பத்திலேயே வாசகன் தன் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டத்தில் நுழைகிறான். அதாவது, விளையாடத் தயங்குபவனையும், ஒதுங்குபவனையும் கூட தனது வசிய சக்தியால் என் எழுத்து உள்ளே இழுத்து விடுகிறது. Jumanjee பார்த்திருக்கிறீர்களா? அது ஒரு உதாரணம். விளையாட்டில் நுழைந்தவுடன் அது உங்களை மிக ஆபத்தான, சாகசங்கள் நிறைந்த ஒரு மாயாலோகத்துக்கு இட்டுச் செல்கிறது. அங்கே நீங்கள் நீங்களாக இல்லை. இருக்க முடியவில்லை. வேறு ஏதேதோவாக மாறுகிறீர்கள். பைத்தியம் பிடித்து விடுவது போல் இருக்கிறது. எதிராளியைக் கொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது. உங்களைச் சுற்றியிருப்போர் உங்களுக்குக் கிறுக்குப் பிடித்து விட்டது என்கிறார்கள். ஆனால் நீங்கள் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. ஒளித்து வைத்தாவது படித்து விடுகிறீர்கள். விளைவு?
இங்கேதான் ஆட்டத்தின் சவால் இருக்கிறது. சரியானபடி எதிர்கொண்டால் எல்லாத் தடைகளையும் வென்று வெளியே வந்து விடலாம். வெளியே வந்தாலும் நீங்கள் முன்பு இருந்தபடியே இருக்க மாட்டீர்கள். சூரியக் குளியல் அல்லது ஒரு பிரபஞ்சப் பயணம் சென்று வந்தது போல் உணர்வீர்கள். இல்லாமல் உங்கள் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்து உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டால் மனப்பிறழ்வு உண்டாகி விடுகிறது. ’சாரு நிவேதிதாவை செருப்பால் அடிப்போர் வட்டம்’ என்ற மாதிரி ஏதோ ஒன்றை வைத்துக் காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. அப்படியும் அந்தக் கொடியவனிடமிருந்து ஓட முடியுமா? முடியாது. அவனுக்கே கேள்வி பதில் பகுதிக்குக் கேள்வி எழுதிப் போடத் தோன்றுகிறது. அவனையே புகைப்படம் எடுக்க வேண்டியிருக்கிறது. தப்பவே முடியவில்லை.
இப்படிப்பட்ட ஆபத்தான ஆட்டத்தின் புதிர்களையும் சவால்களையும் எதிர்கொள்வதற்கு ஏதாவது உபாயம் உண்டா? உண்டு. கொஞ்சம் நல்ல மனம் வேண்டும், அவ்வளவுதான். நல்ல மனம் என்றால்? பேராசை, சுயநலம், துவேஷம், வன்மம் போன்ற குணங்கள் இல்லாமல் இருந்தாலே போதும், ஆட்டத்தை ஆடி விடலாம். ஆட்டத்தில் வெற்றி தோல்வி இல்லை. இந்தப் புதிர் விளையாட்டை ஆடி முடிப்பதே வெற்றிதான்.
இத்தகைய சவாலை என் நாவல்கள் மட்டுமல்ல; என் எழுத்து ஒவ்வொன்றுமே முன் வைக்கிறது.