கேள்வி பதில் : உண்மையும் பொய்யும்…

டியர் சாரு,

நான் முப்பது வயதான இளைஞன். தங்களது எழுத்துக்களை ஐந்து ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். உங்களையோ உங்கள் எழுத்தையோ விமர்சிக்கும் அளவு எனக்கு வயதோ அனுபவமோ இல்லை.  ஆனால் தங்களிடம் வியந்த ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன்.  முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சமூகத்தில் எப்படி உங்களால் ஒரு கலகக்காரரைப் போல் வாழ முடிந்தது? அதுவும் உங்கள் சமகால எழுத்தாளர்கள்  எல்லோரும் தங்களை Intellectual ஹீரோக்களாகக் காட்டிக் கொள்ளும் நிலையில், எப்படி உங்களால் இந்தச் சமூகத்தில் இத்தனை வெளிப்படையாக வாழ முடிகிறது? I mean சில நேரங்களில் பரமஹம்சர் போலவும், சில நேரங்களில் பெரியார் போலவும், சில நேரங்களில் Charles Bukowski போலவும் இருக்கிறீர்கள். You were never afraid of admitting your flaws.  உங்களது எழுத்து முழுமையும் வாசிக்க என் ஆயுள் போதாது.  So no comments about it.  But as a person, you’ve created a legacy.  நாங்கள் பின்பற்ற உங்களின் மகத்தான வாழ்வை அர்ப்பணித்திருக்கிறீர்கள்.  அது எப்படி சாத்தியமாயிற்று? ஆட்டு மந்தைக் கூட்டத்தின் முன் நீங்கள் மேய்ப்பராய் மாற எந்த நொடி முடிவெடுத்தீர்கள்? அது கட்டாயத்தினாலா அல்லது விரும்பி ஏற்றுக் கொண்டதா?  சாரு-வின் எழுத்தும், அவர் வாழ்வும் வேறல்ல என்று அவந்திகா அம்மா சொன்னதைக் கேட்டு சிலிர்த்து விட்டேன். You’re a legend charu..

ஒரு உதாரணம்.

நான் மூன்று ஆண்டுகள் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு தற்போது ஒரு அரசு வங்கியில் பணி புரிகிறேன். Software பணியில் வெளி நாட்டவரிடம் நான் கற்றுக் கொண்டது நேரத்தின் மதிப்பை.  முப்பது நிமிடத்தில் முடிக்க வேண்டிய வேலையைப் பத்து நாட்கள் இழுப்பது நம்மவர் இயல்பு. எனவே உங்களது நேரத்தின் மதிப்பு விலையில்லாதது.  நீங்கள் விரும்பினால் பதிலளிக்கவும்.  Sorry if I’ve taken up so much of your time.

Just felt like saying THANK YOU to you, Charu.

Prithivi.

டியர் பிருத்வி,

இடையே ஆங்கிலம் வந்தாலும் இவ்வளவு கோர்வையாக தமிழில் எழுதியதற்காக முதலில் என் பாராட்டுக்கள்.  இளைஞர்களுக்குத் தமிழே எழுத வரவில்லை என்பதால் இப்படிப் பாராட்ட வேண்டியிருக்கிறது.

மேலே உள்ள நாலு வரியில் உங்கள் மொத்த கேள்விக்கும் பதில் இருக்கிறது.  அதாவது, இப்போது யாருக்குமே – எழுத்தாளர்கள் உட்பட – சரியாகத் தமிழ் எழுதத் தெரியாததால் நீங்கள் சரியாக எழுதியதும் பாராட்டுகிறேன் பார்த்தீர்களா?  அதேதான் என் கதையும்.  நியாயமும், நேர்மையும், உண்மைத் தன்மையும் வெகு இயல்பான, வெகு சாதாரணமான விஷயங்களாக இருந்திருந்தால் என்னிடம் இப்படி ஒரு கேள்வியையே கேட்டிருக்க மாட்டீர்கள்.  உண்மை, பொய்.  இதில் நான் உண்மையைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் சுயநலம்.  பொய் சொன்னால் அதைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காக ஆயிரத்தெட்டு பொய்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது.  மூளையைச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.  எனக்கோ மறதி ஜாஸ்தி.  உண்மையைத் தேர்ந்தெடுத்தால் பிரச்சினையே இல்லை.  அதாவது எனக்கு.  உதாரணமாக, குடியை எடுத்துக் கொள்வோம்.  குடிக்கும் போது குடிப்பதை மறைக்கவில்லை.  குடியை நிறுத்திய போது அதையும் மறைக்கவில்லை.  எக்ஸ் என்ற சாமியாரை என் முட்டாள்தனத்தால் நம்பினேன்.  பிறகு பொய்யன் என்று தெரிந்ததும் இவன் பொய்யன் என்றேன்.  இதில் என் கௌரவம், அது இது என்று எதையும் பார்ப்பதில்லை.  என் சௌகர்யம் மட்டுமே முக்கியம் எனக்கு.  அதாவது, உண்மையை மறைத்துப் பொய் சொன்னால் அதற்காக ஒரு கொலை வேறு செய்ய வேண்டியிருக்கிறது.  என் மனசாட்சியை.  நானோ கண்ணப்ப நாயனார் சிவனை நேசித்த, பூசித்த அளவுக்கு என்னை நேசிப்பவன்.  அப்படிப்பட்ட சுய நேசம் கொண்ட நான் என் மனசாட்சியே கொலையுண்டு சாவதை – அதுவும் என் கையாலேயே சாவதைப் பார்க்க முடியுமா? கண்ணாடி முன் நின்றால் எனக்கு நானே பெருமைக்குரியவனாக இருக்க வேண்டும்.  ஆஹா, மனிதன் என்றால் இப்படியல்லவா வாழ வேண்டும்!  அட அடா சாரு, நீ ஒரு மனுஷன் டா என்று நானே எனக்கு ஷொட்டுக் கொடுத்துக் கொள்ள வேண்டும்.  மனசாட்சியைக் கொன்று குழி தோண்டிப் புதைத்து விட்டால் கண்ணாடியில் தெரியும் உருவத்தைப் பார்த்துப் பாராட்டவா தோன்றும்?

இதுதான் நான் உண்மையைத் தேர்ந்தெடுத்ததன் காரணம்.  வேறு அரிச்சந்திரன் கதையோ காந்தி கதையோ நான் உண்மையைத் தேர்ந்தெடுத்த தருணத்தில் எனக்குத் தெரியாது.  நான் உண்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பிற்பாடு தான், ஓ, நமக்கு சஹ்ருதயர்களும் இருக்கிறார்கள் போல என்று தெரிந்து தைரியம் ஆனேன்.  பிரச்சினை என்னவென்றால், உண்மையினால் கண்ணாடியின் முன்னே நின்று உங்களுக்கு நீங்களே ஷொட்டுக் கொடுத்துக் கொண்டாலும் வீட்டின் அடுப்பில் பூனை தூங்க ஆரம்பித்து விடும்.  அதையெல்லாம் பார்த்து பயந்து விடக் கூடாது.  நான் தான் எனக்கு முக்கியம்.  அப்புறம்தான் உப்பு புளி மிளகாய் எல்லாம்.  உண்மையைத் தேர்ந்தெடுத்த பிற்பாடு வேறு சில சங்கடங்களும் நேரும்.  உங்களைப் பார்த்து மற்றவர்கள் கிறுக்கன் என்பார்கள்.  லூசு என்பார்கள்.  இன்னும் பலவிதமான ஏச்சுப் பேச்சுக்களும் கிடைக்கும்.  மறைக்காமல் பேசுவதால் ஆபாசப் பேர்வழி என்பது போன்ற ஆபத்தான வசைகளும் வந்து விழும்.  எல்லோரும் உங்களைத் தீண்டத் தகாதவனைப் போல் பார்ப்பார்கள்.  மிரண்டு விடக் கூடாது.  நாம் நமக்கு முக்கியம்.

இங்கே தான் உங்கள் கேள்விக்குப் பதில் வருகிறது.  நீங்கள் எந்தக் கலகமும் செய்ய வேண்டியதில்லை.  உண்மையைத் தேர்ந்தெடுத்து விட்டாலே போதும், ஊர் உங்களைக் கலகக்காரன் என்று சொல்ல ஆரம்பித்து விடும்.  கூடவே சிலர் அல்லது பலர் உங்கள் கலகம் போலி என்பார்கள்.  நீங்கள் அசரக் கூடாது.  ஏனென்றால், நீங்கள் கலகம் எதுவும் செய்யவில்லை; உங்களைக் கலகக்காரர் என்றும் சொல்லிக் கொள்ளவில்லையே?

அடுத்து சிலர் அல்லது பலர் உங்களைப் பொய்யன் என்பார்கள்.  திரும்பத் திரும்ப உங்கள் காது கூசும் அளவுக்குச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.  நீ பொய்யன். நீ பொய்யன்.  நீ பொய்யன்.  மிரளவே கூடாது.  ஏன் என்றால், அவர்கள் பொய்யர்கள்.  அதனால் அவர்களைப் போலவே இருக்கும் – தோற்றமளிக்கும் – உங்களையும் பொய்யன் என்றுதானே நம்புவார்கள்?  வேறு நீங்கள் எப்படி இருக்க முடியும்?  நானே பொய்யன் என்கிற போது நீயும் பொய்யன் தானே?  நீ பொய்யன். நீ பொய்யன். நீ பொய்யன்.  ம்ஹும்.  மிரளவே கூடாது.  ஒருக்கணம் அந்தக் கூச்சலைப் பார்த்து உங்களுக்கே நீங்கள் பொய்யன் என்று தோன்றி விடும்.  அதெல்லாம் மாயத் தோற்றம் என்று புறந்தள்ளி விட வேண்டும்.  கண்ணாடி முன்னே நின்று ஆஹா, எப்பேர்ப்பட்ட ஆள்டா நீ என்று சொன்னால் சந்தேகம் தீர்ந்து விடும்.  பொய்யனாக இருந்து கண்ணாடி முன்னே நின்று அப்படிச் சொன்னால் கண்ணாடியில் தெரியும் தோற்றம் உங்கள் மூஞ்சியில் காறித் துப்பும்.  எனவே நான் பொய்யனாக இருக்கவே முடியாது.

இந்தச் சமூகத்தில் எப்படி இவ்வளவு வெளிப்படையாக இருக்க முடிகிறது?  ரொம்ப சுலபம்.  நீங்கள் ஒன்றும் தனி ஆள் அல்லவே?  ஏற்கனவே நம் பாட்டன் முப்பாட்டன் எல்லாம் அப்படித்தானே இருந்திருக்கிறான்கள்?  அவன்களைப் பார்த்து அவன்களைப் போலவே கை காலை அசைத்தாலே போதும்.  அவன்களைப் போலவே வெளிப்படையாகப் பேசவும் எழுதவும் வாழவும் வந்து விடும்.  பாட்டன் பெயரா?  பாரதி என்று சொல்வார்கள்.  சி.சு. செல்லப்பா என்று சொல்வார்கள்.  க.நா.சு. என்று சொல்வார்கள்.  தி.ஜானகிராமன் என்று சொல்வார்கள்.  தி.ஜ.ர. என்று சொல்வார்கள்.  ஏகப்பட்ட கிழடுகட்டைகள் இருக்கின்றன.  எல்லாருக்கும் ஒரு வணக்கத்தைப் போட்டு விட்டீர்களானால் அதுகளின் ஆசீர்வாதத்தோடு நாம் பட்டையைக் கிளப்பலாம்.  அப்புறம் நீங்கள் நினைத்தாலும் வாயில் பொய் வராது.  அதிலும் அந்த முப்பாட்டன் இருக்கிறானே, அவனைப் பிடித்துக் கொண்டால் போதும்.  அவன் இந்த விஷயத்தில் கொஞ்சம் fanatic.  நாம் புதிதாகச் செய்வதற்கு எந்த வேலையும் இல்லை.  பொய் என்றால் எல்லாமே நீங்கள் தான்.  முன்னோடியே இல்லை.  பக்கத்தில் எட்டிப் பார்த்துச் செய்யலாம் என்றால் அவன் அவன் பெரிய கோட்டைக் கொத்தளங்களோடு ரகசியமாக இருப்பான்.  எட்டிப் பார்த்தால் ஒரே இருட்டாகத்தான் இருக்கும்.  இப்படி அனாதையாக வாழ வேண்டி வரும்.  ஆனால் பணம் கிடைக்கும்; புகழ் கிடைக்கும்; இன்னும் என்னென்னவோ கிடைக்கும். கண்ணாடி முன் நிற்க முடியாதே? பரமஹம்ஸர், பெரியார், ப்யூகோவ்ஸ்கி – உண்மைதான்.  மூன்று பேருமே காட்டடியாக உண்மை பேசியவர்கள்.  நீங்கள் உண்மையின் பக்கம் இருந்தால் உண்மையின் பக்கம் இருந்தவர்கள் அத்தனை பேருமாக நீங்கள் தெரிவீர்கள்.  அதுவும் ஒரு மாயத் தோற்றம் தான்.  ஏனென்றால், நீங்கள் நீங்கள்தானே?  பெரியாரும் பரமஹம்சரும் ஒன்றாக முடியுமா?

எனவே ஆட்டு மந்தைக் கூட்டத்துக்கு மேய்ப்பவராவது எல்லாம் உண்மையைத் தேர்ந்தெடுத்தவனின் வேலை அல்ல.  அதற்கெல்லாம் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள்.  பார்த்துக் கொள்வார்கள்.  நம்முடைய வேலை ஆட்டுமந்தையிலிருந்து விலகி நடப்பதுதான்.

சாரு