விவாதங்கள் – 1

அன்புள்ள சாரு,

தோப்பில் முகமது மீரான் எழுதிய “ஒரு கடலோர கிராமத்தின் கதை” நாவல் வாசித்தேன். கிளாசிக். கடற் பகுதி முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை வேரிலிருந்து நுனி வரை அலசிச் செல்கிறது. இந்த நாவல் ஆங்கிலத்திலும், ஜெர்மனிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. நேற்று மீரானைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. எத்தேச்சையானதுதான்.

என் வீட்டிலிருந்து நாலு கிலோமீட்டர் தொலைவில்தான் மீரான் வசிக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் தமிழை விட மலையாள இலக்கியங்களே அதிகம் வாசிக்கிறார் சாரு. பேச்சு வளர்ந்தது. அசோகமித்திரனைச் சந்தித்தபோது நான் நேரடியாகவே ”சாரு நிவேதிதா எழுத்து, இயங்குதளம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டேன். மொத்தமாக அதில் தனக்கு உடன்பாடில்லை என்று சொல்லி உங்களை வேற்றுக் கிரகவாசியைப் போல புறக்கணித்தார். எழுத்தாளனுக்கு அதெல்லாம் தேவையில்லை என்று சொன்னார்.

அந்த அனுபவத்தினால் உங்கள் பெயரை நேரடியாக மீரானிடம் சொல்லாமல் சமகாலம் என்ற பரப்பிற்குள் நீங்கள் எதையெல்லாம் கொண்டாடுகிறீர்கள் என்று சும்மா வளச்சி நெளிச்சு கேள்வியை முறுக்கினேன் சாரு. உங்கள் பெயரைச் சொல்லவில்லை. சரி இவரும் அசோகமித்திரன் கோஷ்டி என விட்டுவிட்டு மற்றதைத் தொடர்ந்தேன். எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய சமூகக் கடமைகள் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார். “சாரு நிவேதிதா அதை ரொம்பச் சரியா பண்ணுறார். இன்னக்கி எழுதுற யாராலும் சாரு நிவேதிதா மாதிரி இயங்க முடியாது. ஒரு நிறுவனத்துக்கு, சமூகத்தோட மூடநம்பிக்கைக்கு, அரசியலுக்கு எதிரா இயங்குகிறவனே எழுத்தாளன். இன்னக்கி தமிழ்ல ஒலிக்கிற எதிரான ஒரே குரல் சாருவினுடையது” என்று சொன்னார். ”சாருவுக்கு இலக்கியம் மட்டுமில்லை; அந்தக் காலத்திலேயே இசை, நாடகம், உலக சினிமா பத்தின ஞானமும் தேடலும் இருந்துச்சி. அவர் பெரிய ஆளுங்க” என்று சொன்னார். இதுவரைக்கும் எனக்கு சாருவைத் தெரியுமென்று நான் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

ஸீரோ டிகிரி, எக்சிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும் – இரண்டும் மிகப் பெரிய சாதனை.  மீறல் என்பதைப் புரட்சியாக இல்லாமல் ஒரு உணர்வாக, கலாபூர்வமாக வெளிப்படுத்துவதுதான் சிறப்பானது; அதைச் சாரு மிகச் சரியாகச் செய்கிறார் என்றார். பிறகுதான் நான் என்னைக் குறித்தும், நான் சாருவின் நண்பர் என்றும் சொன்னேன். தொடர்ச்சியாகப் பேச்சு பல பரிமாணங்களில் நீண்டது சாரு. நான் மதிக்கும், கொண்டாடும் ஒருவர் உங்கள் எழுத்துக்களையும், இயங்குதளத்தையும் சிலாகிக்கும்போது அத்தனை சந்தோஷமாக இருக்கும். நேற்றைய சந்திப்பும் அப்படியான ஒன்று.

நேரில் சந்திக்கும்போது விரிவாகப் பேசலாம். Love u Charu.

ஸாம்.

 

டியர் ஸாம்,

பாலு மகேந்திராவை என் 61-ஆவது வயதில் பார்த்தது போல் இலக்கியத்திலும் நான் சில பல காரியங்களைச் செய்யாமல் இருக்கிறேன்.  நான் இன்னும் நீல. பத்மநாபனைப் படித்ததில்லை.  தோப்பிலையும் படித்ததில்லை.  இப்படிச் சொல்ல வெட்கமாகவும் அவமானமாகவும் இருக்கிறதுதான்.  உங்கள் கடிதத்தை அப்படியே வைத்து விட்டு, அலமாரியில் இருக்கும் தோப்பிலின் நாவல்களைப் படித்து விட்டு பத்து நாட்கள் கழித்து உங்களுக்குப் பதில் எழுதியிருக்கலாம்.  ஆனால் அது என்னையே ஏமாற்றிக் கொள்வதாகும்.  இந்தப் பதிலை எழுதி விட்டும் நான் அதைச் செய்யலாம்.  இப்போது நான் மிகத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  படிக்காத சமகால எழுத்தாளர்கள் அனைவரையும் படித்து விடுவேன்.

மேலும், அசோகமித்திரன் பற்றிய உங்கள் பதிவு எனக்கு ஆச்சரியம் தரவில்லை.  அவர் என்னை ஒருபோதும் ஒரு எழுத்தாளனாகவே அங்கீகரித்ததில்லை.  சுஜாதாவும் அப்படியே.  சுந்தர ராமசாமியும் அப்படியே.  அதையெல்லாம் நான் பொருட்படுத்தியதும் இல்லை.  அவர்கள் மீதான என் அபிப்பிராயத்தை/கருத்தை நான் உருவாக்கிக் கொள்வதற்கு அவர்களது உதாசீனங்களும் காரணமாக இருந்ததில்லை.  எனக்கு நான் தான் முதலாளி.  வேறொரு அந்நியர் அல்ல.  என் சுதந்திரத்தை நான் என்றுமே விட்டுக் கொடுக்க மாட்டேன்.  எனவே அசோகமித்திரன் பற்றிய என் கருத்து அவரைப் படித்து நானே சொந்தமாக உருவாக்கிக் கொண்டதே ஒழிய அசோகமித்திரன் என்னைப் பற்றி வைத்திருக்கும் மட்டரகமான கருத்துக்களால் உருவானதல்ல.  அசோகமித்திரனுக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ என் எழுத்து பிடிக்கவில்லை என்றால் எனக்கு அவர் மீது கோபமோ வருத்தமோ ஏற்படுவதில்லை.  மாறாக, இந்த ஆளுக்கு நம் எழுத்து புரியவில்லை என்றே நினைத்துக் கொள்வேன்.  நட்பு பாராட்டாமல் ஒதுங்கி விடுவேன்.  எனக்கு என் எழுத்தே சுவாசம்.  அந்த எழுத்தையே ஒருவர் மறுதலிக்கிறார் என்கிற போது அவருடைய சகவாசம் நமக்கு எதற்கு?  (ஆனால் ஸாம், நீங்கள் என் விஷயத்தில் அப்படி ஒரு முடிவுக்கு வராதது என் அதிர்ஷ்டம்!)

அசோகமித்திரன் என்ற மனிதர் என் விருப்பத்துக்கு உரியவர் அல்லர்.  (அது ஏன், அவருடைய முகம் எப்போதும் பச்சை மிளகாய் தின்றது போலவே இருக்கிறது?)  அவரை எதிரில் சந்தித்தால் ஹலோ கூட சொல்லாமல் நான் ஒதுங்கிப் போய் விடுவேன்.   ஆனால் அசோகமித்திரனின் எழுத்து பற்றி என்னுடைய கருத்து என்னவென்றால் –

கடந்த நூறு ஆண்டுத் தமிழ் உரைநடையில் அசோகமித்திரன் அளவுக்கு சாதித்தவர் வேறு யாரும் இல்லை.  அத்தனை பேரும் அவருக்குக் கீழே தான். அவருடைய எல்லா நாவல்களையும் முக்கியமான குறுநாவல்களையும் சிறுகதைகளையும் கடந்த மாதங்களில் மீண்டும் வாசித்து விட்டே இந்த முடிவுக்கு வந்தேன். 

அசோகமித்திரனை என் இளம்பிராயத்திலிருந்து வாசித்து வருகிறேன்.  அப்போதும் என் கருத்து அதுதான்.  இப்போதும் என் கருத்து அதுதான்.  ஆனால் இப்போது என்னுடைய Retreat-இல் நான் எனக்குப் பிடித்தவர், பிடிக்காதவர் எல்லோரையும் படித்து வருகிறேன்.  எம்.வி. வெங்கட்ராம், லா.ச.ரா., கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா., ந. சிதம்பர சுப்ரமணியம், சிட்டி, தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜி. நாகராஜன், ஆ. மாதவன், கிருத்திகா, எஸ். சம்பத், நகுலன் என்று அத்தனை பேரையும்.  இதில் விடுபட்டவர்கள் கோபி கிருஷ்ணன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி. இவர்கள் நால்வர் பற்றியும் எனக்குத் திட்டவட்டமான கருத்து உண்டு.  மீதிப் பேரைத்தான் படித்து வருகிறேன்.  நான் எதிர்பார்த்தபடியேதான் நடந்தது.  30 வயதில் எனக்கு இவர்களைப் பற்றி என்ன தோன்றியதோ அதே தான் இப்போதும் தோன்றுகிறது.  துளியும் மாற்றமில்லை.  ஜி. நாகராஜன் எழுத்தாளரே அல்ல என்று அப்போது தோன்றியது.  இப்போது அவர் பெயரை உச்சரிப்பது கூட வீண் என்று தோன்றுகிறது.

இந்த மீள்பார்வை வாசிப்பில் ஒரே ஒரு அதிசயம்தான் நடந்தது.  தஸ்தயேவ்ஸ்கி காணாமல் போய் விட்டார்.   இடியட் படித்தேன்.  300 பக்கம் படிப்பதற்குள் விழி பிதுங்கி விட்டது.  எழுத்தா அது?  குப்பை.  குப்பை.  குப்பை.  அப்புறம் ஏன் அவரை வாழ்நாள் எல்லாம் மாபெரும் சாதனையாளராகக் கொண்டாடினேன்?  “கொண்டாடினேன்” அல்ல; கொண்டாடினார்கள்.  அதையே நானும் ஏற்றுக் கொண்டேன்.  காரணங்கள் இரண்டு:  ஒன்று, அவருடைய சில குறுநாவல்கள்.  குறிப்பாக Notes from the underground.  இரண்டாவது, அவருடைய வாழ்க்கை.  இடதுசாரியாக வளர்ந்த எனக்கு, காந்தியைத் தூற்ற வேண்டும் என்று கற்பிக்கப்பட்டே வளர்ந்த எனக்கு, பெரியார் சொன்னதெல்லாம் புரட்சி என்று நம்பியே வளர்ந்த எனக்கு தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கை ஒரு மகத்தான சாகசமாக இருந்தது.  அவருடைய சைபீரிய சிறை வாழ்க்கை, அவருடைய சூதாட்டம், அவருடைய வலிப்பு நோய், அனாவுடனான அவருடைய காதல் வாழ்க்கை எல்லாமே அவர் மீது எங்களுக்கு ஒரு பிரேமையை உண்டாக்கியது.  அவருடைய நோஞ்சான் உருவம் ஒன்றே போதுமானதாக இருந்தது எங்களுக்கு, அவரைக் கலைஞன் என்று கொண்டாட.   அதே சமயம், டால்ஸ்டாய் எங்களின் வெறுக்குரியவராக இருந்தார்.  நிலப் பிரபு.  சீச்சீ… பணக்காரன் கெட்டவன்.  அதிலும் காந்தியின் குரு.  சீச்சீ… அதிலும் பலசாலி.  ம்ஹும்.  எந்த விதத்திலும் டால்ஸ்டாய் ஒரு இடதுசாரி இளைஞனின் அன்புக்கு உரிய தன்மைகளைக் கொண்டிருக்கவில்லை.

ஆனால் இந்த இலக்கிய உலகத்திலேயே என் ஆசான் என்று சொல்லத்தக்க ஒரே ஒருவர் உண்டு.  அவர் பெயர் வ்ளதிமீர் நபக்கோவ்.  அவர் தஸ்தயேவ்ஸ்கியை சராசரி எழுத்தாளர், சராசரிக்கும் கீழானவர் என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.  அப்போதெல்லாம் ஏதோ நம் குருநாதர் உளறுகிறார் என்றே நினைத்துக் கொண்டிருந்து விட்டேன்.  இப்போதுதான் தெரிகிறது எதார்த்தம்.  இப்போது நம் நாட்டில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சீரியல்களை ஒத்திருக்கிறது இடியட் நாவல்.  அதில் வரும் மாமியார், மருமகள் சண்டை ஒரு உதாரணம்.  300 பக்கம் தாண்டுவதற்குள் தாவு தீர்ந்து விட்டது.  இனிமேலும் தொடர்வது சாத்தியமில்லை.   அந்த மிஷ்கின் கொஞ்சம் சுவாரசியமான ஆள்.  அதற்காக எவ்வளவு பொறுமை காக்க முடியும்?  இப்போதுதான் புரிகிறது நபகோவ் சொன்னது எவ்வளவு சரி என்பது.  நபகோவ் வெறும் எழுத்தாளர் மட்டும் அல்ல; மிகப் பெரும் அறிஞர்.  பேராசிரியர்.  அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உலக இலக்கியம் பற்றிப் பாடம் எடுத்தவர்.

நபகோவ் தஸ்தயேவ்ஸ்கி பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.

“My position in regard to Dostoevsky is a curious and difficult one. In all my courses I approach literature from the only point of view that literature interests me-namely the point of view of enduring art and individual genius. From this point of view Dostoevsky is not a great writer, but a rather mediocre one-with flashes of excellent humor, but, alas, with wastelands of literary platitudes in between.”

“A good third [of readers] do not know the difference between real literature and pseudo-literature, and to such readers Dostoevsky may seem more important and more artistic…”

”Tolstoy is the greatest Russian writer of prose fiction. Leaving aside his precursors Pushkin and Lermontov, we might list the greatest artists in Russian prose thus: first, Tolstoy; second, Gogol; third, Chekhov; fourth, Turgenev.” [Realizing the, really, silliness of such rankings, he adds:] “This is rather like grading students’ papers and no doubt Dostoevsky and Saltykov are waiting at the door of my office to discuss their low marks.”

மேற்கொண்டு பேசும் போது நபகோவ் சொல்கிறார்…  டால்ஸ்டாயின் கலையை அவரது கோட்பாடுகள் கெடுக்கவில்லை.  கலையே பிரதானமாக இருந்தது.  ஆனால் தஸ்தயேவ்ஸ்கியின் கலை வெறும் ரத்தக் கண்ணீர்.  இந்த ரத்தக் கண்ணீரைக் காண்பித்தே அவர் ஊரையெல்லாம் ஏமாற்றி விட்டார்.

இதை நான் சொல்லவில்லை.  நபகோவ் சொல்வது.  ஊர் அல்ல; உலகமே ஏமாந்து போனது என்று நினைக்கிறேன்.  நேற்று கூட ஏதோ ஓர் விவாதம் படித்தேன்.  ”மிஷ்கின் (நம்மூர் மேதை மிஷ்கின் அல்ல; தஸ்தயேவ்ஸ்கியின் முட்டாள் மிஷ்கின்) ஒன்றும் இயேசு கிறிஸ்து அல்ல…” என்பது அந்தக் கட்டுரையின் தலைப்பு.  அடப்பாவிகளா என்று நினைத்துக் கொண்டேன்.  அப்படியானால் மிஷ்கினை கிறிஸ்துவோடு ஒப்பிட்டு எந்த இலக்கிய வெண்ணெயோ எழுதியிருக்கிறது!

ஸாம், என்னுடைய இந்த Retreat முடிவதற்குள் டால்ஸ்டாயையும் படித்து விட வேண்டும் என்று இருக்கிறேன்.  இதுவரை அவருடைய நாவல்களைப் படித்ததில்லை.  Father Sergius போன்ற குறுநாவல்களை மட்டுமே படித்திருக்கிறேன்.

ஸாம், தோப்பிலுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் சொல்லுங்கள்.  குற்றாலம் இலக்கியச் சந்திப்பில் பார்த்தது.  என் தோளில் ரேஷ்மாவைப் போட்டுக் கொண்டு இலக்கிய விவாதம் செய்து கொண்டிருந்த புகைப்படத்தை நேற்றுதான் 22 ஆண்டுகளுக்கு முந்திய இந்தியா டுடே இதழில் பார்த்தேன்.  (பழைய புத்தகங்களையெல்லாம் நண்பர்களிடம் கொடுத்து விடும் திட்டத்தில் அந்த இதழ் அகப்பட்டது) அந்தக் குற்றால இலக்கியச் சந்திப்பில்தான் தோப்பிலைப் பார்த்தேன்.  பசுமையாக ஞாபகம் இருக்கிறது.