இறைவனுக்கு ஒரு கடிதம் – விவாதங்கள் (2)

டியர் சாரு

இது நான் உங்களுடைய புது எக்ஸைல் வாசித்துவிடுட் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதியனுப்பிய கடிதம். [உங்களிடமே கேட்பது சரியில்லை என்று தோன்றியது. நெகட்டிவாக என்ன சொல்கிறார் என்றுபார்ப்போமே என்று கேட்டேன்]

திரு ஜெ.,

நான் சாருநிவேதிதா என்பவரின் எக்ஸைல் என்ற ஆயிரம் பக்க நாவலை வாசித்தேன். அது எனக்கு பெரிய அளவிலே மன அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. கிழித்து வீசவேண்டும் என்று நினைத்தேன். இதையெல்லாம் இலக்கியம் என்று சொல்லலாமா?

ஆறு.கணேசன்.

அன்புள்ள ஆறு. கணேசன்,

ஒன்று கடைசிவரை வாசித்திருக்கிறீர்கள். ஆகவே அது உங்களை ஈர்க்கிறது. கோபமும் ஈர்ப்புதான்.

அந்தக் கோபம் ஏன் உங்களுக்கு வருகிறது , அதற்கான பன்பாட்டு காரணம் என்ன அந்தரங்கக்காரணம் என்ன என்று மட்டும் பாருங்கள். போதும். அதுதான் உள்ளே போகும் வழி

ஆறுமுறை நீங்கள் படித்துப்பார்க்கலாம். ஆறுவீர்கள் என நினைக்கிறேன்

ஜெ

இதிலே உள்ள நக்கல் என்னை புண்படுத்தியது. இதுதான் எக்ஸைலை வாசிக்கும் வழியா? அதிலே கலை என்று ஒண்ணுமே இல்லையா?

ஆறு கணேசன்.

அன்புக்கும் வணக்கத்திற்கும் உரிய என் தாயும் தகப்பனுமான இறைவனுக்கு,

ஏதோ பெரும் பாவம் செய்து அதன் பலனாய் தமிழ்நாட்டில் எழுத்தாளனாகப் பிறந்து விட்ட நூற்றுக் கணக்கான அற்பஜீவிகளில் ஒருவனாகிய சாரு நிவேதிதா எழுதிக் கொள்வது.  உம்மால் படைக்கப்பட்ட மனிதர்கள் உம்மிடம் அதைக் கொடு இதைக் கொடு என்றே எந்நேரமும் பிரார்த்தித்து உம் கழுத்தை அறுப்பதால் நீரும் பாவம் தமிழ் எழுத்தாளர்களைப் போன்ற பரிதாபமான நிலையில்தான் இருப்பீர் என்று எனக்குத் தெரியும்.  ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாபா கோவில் வாசலில் அலைமோதும் கூட்டத்தைப் பார்த்தாலே என்னால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  எல்லாக் கோவிலும் ஒரு மொழியில் உம்மை அழைப்பார்கள் என்றால் பாபா கோவில் சம்ஸ்கிருதம், தமிழ், அரபி என்று மூன்று மொழிகளிலும் அழைத்துப் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்கள்.  எனக்கு மனிதாபமானம் மட்டும் அல்லாமல், மிருகாபிமானம், தெய்வாபிமானமும் கூட இருப்பதால் உமக்காகவும் கூட சில சமயம் நான் பிரார்த்தனை செய்வதுண்டு என்பதையும் நீர் நன்கறிவீர்.

நான் உம்மிடம் என்றுமே லௌகீக விஷயங்கள் பற்றிப் பிரார்த்தனை செய்ததில்லை, இல்லையா?  இப்போதும் அப்படியே.  உண்மையில் உமக்கு மெயில் எழுதுவதைப் போன்ற வெட்டி வேலை வேறு எதுவும் இல்லை என்பதும் எனக்குத் தெரியும்.  ஆனாலும் எத்தனையோ வெட்டிவேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.  அதில் இதுவும் ஒன்று என எடுத்துக் கொள்கிறேன்.

மேலே உள்ள ஆறு. கணேசன் என்பவரின் கடிதத்தைப் படித்தீரா?  ஒரு நாவலைப் படித்து விட்டு என்ன செய்யலாம்?  நாவல் பிடிக்கவில்லை என்றால் எழுத்தாளனைத் திட்டிப் பிரயோஜனம் இல்லை.  எழுத்தாள ஜென்மங்கள் எதையெதையோ எழுதிக் கொண்டிருக்கிறதுகள்.  அதுகளின் மனப்போக்கை இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த உம்மால் கூடப் புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.  ஒரு கூட்டம் தஸ்தயேவ்ஸ்கியை இலக்கியச் சிகரம் என்று கொண்டாடுகிறது.  இன்னொரு கூட்டமோ அந்த ஆள் சராசரிக்கும் கீழே என்று சொல்கிறது.  ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனை மலம் என்று திட்டுகிறான்.  திட்டு வாங்கியவனோ திட்டியவனை குருவே என்கிறான்.  சில எழுத்தாளர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அடிதடியில் இறங்கும் வகையறாவாக இருக்கிறார்கள்.  கொஞ்ச நாள் முன்பு வரை நானும் அந்த கோஷ்டியில் இருந்தவன் தான் என்பதையும் நீர் அறிவீர்.   எப்படியோ இந்த எழுத்தாள கோஷ்டியை உம்மாலேயே புரிந்து கொள்ள முடியாது என்பதே என் முடிபு.  ஆக, ஒரு நாவல் ஒரு வாசகனுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதைத் தேர்ந்தெடுத்துப் படித்த நம்மையே தான் நாம் திட்டிக் கொள்ள வேண்டும்.  தீதும் நன்றும் பிறர் தர வாரா.  அல்லது, அதிக பட்சமாக அந்த எழுத்தாளனை மனசுக்குள் திட்டிக் கொள்ளலாம்.  அதற்கும் மேல் கேடு புத்தி கொண்டிருந்தால் இணையத்தில் திட்டித் தீர்க்கலாம்.  நன்றாக இருந்தால் பாராட்டலாம். எழுதியவனைக் கொண்டாடலாம்.  ஏதோ ஒன்று.  ஆனால் இந்த இரண்டையும் விட்டு விட்டு இன்னொரு எழுத்தாளனுக்கு லெட்டர் போட்டு அவனுடைய நேரத்தையும் யோசனையையும் வீணடிக்கலாமா?  என்ன வாசகர்கள் இவர்கள்?  தமிழ்நாட்டில் எழுத்தாளர்களின் நிலைமை தான் மோசம் என்று எண்ணியிருந்தேன்.  ஆனால் இப்போது பார்த்தால் வாசகரின் நிலைமை அதை விட மோசம் என்றல்லவா முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது?

சரி, வளர்த்திக் கொண்டு போக விரும்பவில்லை.  என் சகா ஒருத்தன் இருக்கிறான்.  ஜெயமோகன் என்று பெயர்.  உமக்குத் தெரியாதது இல்லை.  என்னை மாதிரி இல்லை.  அதிர்ஷ்டசாலி.  சீரும் சிறப்பும் சகல சௌபாக்கியங்களோடும்தான் வாழ்கிறான்.  ஆனால் என்ன ஒரு பிரச்சினை என்றால், தனக்கு வரும் எல்லா கடிதங்களுக்கும் பதில் எழுதி விடும் வியாதி பிடித்தவனாக இருக்கிறான்.  நீ மட்டும் ஒழுங்கா என்று கேட்காதீரும்.  அங்கே தான் பிரச்சினையே.  இந்த வியாதி தொற்று வியாதி போல் இருக்கிறது.  அதிலும் காற்றில் பரவும் வியாதி போல.  அதனால்தான் நாகர்கோவிலும் சென்னையும் இரண்டு எல்லைகளில் இருந்தாலும் எப்படியோ தொற்றி விட்டது.  இந்த ஆறு கணேசனின் மட்டமான, கிருத்துருவம் பிடித்த கடிதத்தை ஒன்று ஜெயமோகனாவது குப்பையில் போட்டிருக்க வேண்டும்.  அவனோ பதில் எழுதி விட்டான்.  நானாவது ஆறு கணேசனின் கடிதம், ஜெயமோகனின் பதில் எல்லாவற்றையும் சேர்த்துக் குப்பையில் போட்டிருக்க வேண்டும்.  இல்லையே?

எனவே, என்னுடைய பிரார்த்தனை என்னவென்றால், எனக்குக் கூட வேண்டாம்.  நான் எப்படியாவது போகிறேன்.  என் சகா ஜெ. தினம் 500 பக்கம் எழுத வேண்டுமென்பது அவன் வாங்கி வந்த வரம்.  (அல்லது, சாபம்…  உமக்குத் தான் உண்மை தெரியும்!) அப்படியிருக்கும் போது இம்மாதிரி கிருத்துருவம் படித்த, வஞ்சக எண்ணம் கொண்ட கடிதங்களுக்கும் சமத்காரமாக பதில் எழுதி அவனுடைய நேரத்தையும் சக்தியையும் வீணடித்துக் கொள்ளக் கூடாது.  ”இதை ஏன் நீ என்னிடம் கேட்கிறாய்?  அவனிடமே போனைப் போட்டுச் சொல்ல வேண்டியதுதானே?” என்று நீர் கேட்கலாம்.  உமக்குத் தெரியாது, அவன் யார் பேச்சையும் கேட்க மாட்டான்.  நீரே ஏதாவது உம்முடைய சக்தியைப் பயன்படுத்தி அவனுடைய மனதை மாற்றி இம்மாதிரி கிருத்துருவம் பிடித்த, வஞ்சக எண்ணம் கொண்ட கடிதங்களுக்கு பதில் எழுதக் கூடாது என்ற எண்ணத்தை உண்டு பண்ணும்.  ”நீ ஒரு எழுத்தாளனா?  உனக்கும் சராசரிக்கும் என்ன வித்தியாசம்?  இம்மாதிரி சில்லறை மேட்டருக்கெல்லாம் என்னிடம் வரலாமா?” என்று நீர் முணகுவது எனக்குக் கேட்கிறது.  இருந்தாலும் நான் இதுவரை இந்த மொழிபெயர்ப்பாளர் மேட்டரைத் தவிர வேறு எந்த வேண்டுதலையும் உம்மிடம் வைத்ததில்லை என்பதால் நீர் என்னுடைய இந்த எளிய பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பீர் என்று நம்புகிறேன்.  அப்படி நம்புவதற்கு எந்த அறிகுறியையும் நீர் இதுவரை என் விஷயத்தில் காண்பித்ததில்லை என்றாலும் உம் விஷயத்தில் நான் முழுமூடனைப் போல் நம்பிக்கையோடு இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது.  வேறு என்ன செய்ய?  உம்மை விட்டு விட்டு சைத்தானிடமா போக முடியும், சொல்லும்.  போய் விடலாம்.  அது அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாகப் போய் விட்டால்?  நீர் ஓர் யூஸ்லெஸ் என்று தெரிந்தும் கூட இந்தப் பிரார்த்தனையை வைத்தே தொலைக்கிறேன்.

இன்னொரு விஷயம் கேளும்.  பிரார்த்தனை அல்ல.  சும்மா ஒரு ஷேரிங், அவ்வளவுதான்.  தமிழ்நாட்டில் மட்டும் வாசகர்கள் ஏன் இப்படி மனித வெடிகுண்டுகளாகத் திரிகிறார்கள் என்று உம்மால் யோசிக்க முடிகிறதா?

ம்… அடுத்த ஜென்மத்திலாவது தமிழ்நாட்டில் பிறக்காமல் இருக்க வேண்டும்.  குறைந்த பட்சம் பக்கத்திலிருக்கும் கர்நாடகாவில் பிறந்தால் கூட ஜாலியாக இருக்கலாம்.  அட அடா…  அந்தக் கொரமங்களா குருவிகளைப் பார்த்துக் கொண்டே வாழ்ந்து விடலாமே இறைவா!

நமஸ்காரம்.

அடியேன்,

சாரு நிவேதிதா.

பின்குறிப்பு: பாரும், கையொப்பம் இட்ட பிறகும் சம்பாஷணை தொடர்கிறது.  ஒரு எழுத்தாளனை நக்கல் பண்ணி விட்டு, எழுத்தாளன் பதிலுக்கு நக்கல் பண்ணியதும் அது தன்னைப் புண்படுத்தியதாக என்னிடம் புலம்பும் அந்த வாசகனுக்கு நல்ல புத்தி தாரும் என்று உம்மை வேண்டிக் கொள்ள மாட்டேன்.   அதெல்லாம் உம்மைப் போல் இன்னும் ஆயிரம் இறைவன்கள் வந்தாலும் சாத்தியமாகாத விஷயம்.  எங்கள் தமூள் வாசகன் அந்த அளவுக்குப் பெலம் பொருந்தியவனாக்கும்.  ஆமாம்.