நிவேதனம்

பல ஆண்டுகளாக மகாமுத்ராவுக்கு brand ambassador ஆக இருந்தேன்.  அதேபோல் ரெமி மார்ட்டின்.  நான் சொல்லும் வரை ரெமி மார்ட்டினை யாருக்கும் தெரியாது.  சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ரகசியமாக உபயோகித்து வந்தனர்.  இப்போதோ அது தமிழ்நாடு முழுவதும் பிரபலமாகி விட்டது.  அதேபோல் ஹேகமைஸ்டர் (Jagermeister), சீனத்து அரச வம்சத்தினர் அருந்திய Wenjun.

இப்போது மகாமுத்ராவில் இலக்கியவாதிகளையும் அடிக்கடி பார்க்க முடிகிறது.  ஆனால் மகாமுத்ராதான் முன்பு போல் இல்லை.  தரத்தில் மாற்றம் இல்லை.  நிர்வாகம்தான் மோசமாகி விட்டது.  ஒரு உணவகம் என்றால் காலை ஏழு மணிக்கெல்லாம் திறந்து விட வேண்டும்.  அதுவே குறைந்த பட்சம்தான்.  ஆனால் மகாமுத்ராவில் பணி புரிவோருக்கு அது ஒரு அரசாங்க அலுவலகம் என்ற நினைப்பு போலும்.  முன்பு காலை ஏழரை மணிக்குத் திறந்தார்கள்.  இப்போது எட்டு மணி.  ஆனால் எட்டு மணிக்குப் போனால் செஃப்பையும் வரவேற்பாளரையும் தவிர வேறு யாருமே இருக்க மாட்டார்கள்.   எட்டரை மணிக்குத்தான் ஆள் நடமாட்டத்தையே காண முடிகிறது.  ஒன்பது மணிக்குத்தான் தரையைப் பெருக்கும் பெண்மணி சாவகாசமாகத் துப்புரவுப் பணியை ஆரம்பிக்கிறார்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக நல்லதொரு உணவகத்தைத் தேடிக் கொண்டிருந்தேன்.  நம் ஊர் வத்தக் குழம்பும் சுடசுட சோறும் கிடைக்க வேண்டும்; வட இந்திய ஃபுல்காவும் நானாவித சப்ஜியும் கிடைக்க வேண்டும்.  ஐரோப்பிய உணவு வகைகளும் (காண்டினெண்டல்) கிடைக்க வேண்டும்.  ஐரோப்பிய உணவு என்றால் பாஸ்தா, ஸ்பகட்டி, Augratin எல்லாம்.  முடிந்தால் கொரியன், சீனா, தாய் உணவும் கிடைக்க வேண்டும்.  அதே சமயம் ஆடு, மாடு, பன்றி என்று அசைவமாகவும் இருக்கக் கூடாது.  தூய சைவமாக இருக்க வேண்டும்.  அது என்ன தூய சைவம்?  முட்டை கூட கூடாது.  பேராசை.  நட்சத்திர ஓட்டலில் வேண்டுமானால் கிடைக்கலாம்.  மத்தியதர வர்க்கத்துக்கு இதெல்லாம் சாத்தியமா என்று பலமுறை நினைத்து நொந்து போயிருக்கிறேன்.  இப்போது பார்த்தால் இது எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கிறது.  அதையும் நான் மிகத் தற்செயலாகத்தான் தெரிந்து கொண்டேன்.

ஹார்ட் அட்டாக் வந்த பிறகு திடீரென்று என் தோற்றத்தில் பத்து வயது கூடியதைப் போல் உணர்ந்தேன்.  நீங்களும் என் புகைப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கலாம்.  சமீபத்தில் கூட ஒரு வாசகி, “உருவத்தில் என்ன இருக்கிறது? அதையெல்லாம் யார் பொருட்படுத்துகிறார்கள்” என்ற ரீதியில் எனக்கு ஆறுதல் சொன்னார்.  மிரண்டு போனேன்.  நான் எப்போது என் உருவத்தைப் பற்றிக் கவலைப்பட்டேன்.  ஆனால் நேற்று வரை படு ரகளையாக இருந்த தோற்றம் ஒரே ஹார்ட் அட்டாக்கில் புடுங்கிக் கொண்டதே என்ற வருத்தத்தில் இயற்கை உணவு பற்றித் தேடிக் கொண்டிருந்தேன்.  ராதாகிருஷ்ணன் சாலையில் யெல்லோ பேஜஸை ஒட்டி வி.எம். தெரு என்று ஒரு தெரு உள்ளது.  அங்கேதான் எனக்குப் பிடித்த நட்ஸ் அண்ட் ஸ்பைஸஸ் என்ற கடையும் இருக்கிறது.  அங்கே வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொள்வதற்கான சைட் டிஷஸ் அட்டகாசமாகக் கிடைக்கும்.  புகையிலை போன்ற லாகிரி வஸ்துக்கள் என்று தவறாக நினைத்து விடாதீர்கள்.  நான் சொல்வது பாக்கு மற்றும் வாசனாதி திரவியங்கள்.  வெற்றிலை போடுவதே ஒரு அபாரமான அற்புதமான விஷயம்.  அப்புறம் விபரமாக எழுதுகிறேன்.  இப்போது என் வயோதிகத் தோற்றம் பற்றி.  அந்த நட்ஸ் அண்ட் ஸ்பைஸஸ் கடைக்கு எதிரே நாலு ஐந்து கடை தாண்டி ஆர்கானிக் கடை ஒன்றைப் பார்த்தேன்.  காணாததைக் கண்டது போல் ஓடிப் போய்ப் பார்த்தேன்.  முதுமையை ஓரளவு கட்டுப்படுத்துவதற்கான அநேக வஸ்துக்கள் அங்கே இருந்தன.  அப்போதுதான் அந்த அதிசயத்தைப் பார்த்தேன்.  அந்த ஆர்கானிக் கடைக்கு எதிரே ஒரு உணவகம்.  நிவேதனம்.  ஒருநாள் சாவகாசமாகப் போனால் நான் கனவு கண்ட எல்லா வகை உணவும் கிடைத்தன.  வத்தக் குழம்பு, சோறிலிருந்து ஐரோப்பிய, தாய், வட இந்திய உணவு வரை எல்லாம் ஒரே இடத்தில்.  ருசி செமயாக இருந்தது.  இருந்தாலும் சந்தேகத்துடன் இரண்டு மூன்று முறை போய் எல்லாவற்றையும் ருசி பார்த்தேன்.  சென்னையில் இதைப் போல் இது ஒன்றுதான்.  வேறு எந்த உணவகமும் இதன் அருகே நெருங்க முடியாது.  இதன் உரிமையாளர் நிச்சயமாக ஒரு ரசிகராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  படப்பையிலும் இதற்கு ஒரு கிளை இருப்பதாகப் பின்னர் அறிந்தேன்.  மதியமும் இரவும் திறந்திருக்கும்.  மேலே குறிப்பிட்டது போல் தூய சைவம்.

இதன் இணைய தளம்:

http://www.nivedhanam.com/