படிக்க வேண்டிய தத்துவவாதிகளின் பெயர்ப் பட்டியல்…

அப்பா,

இங்கே ஒரு நல்ல நூலகம் உள்ளது.  அதில் நவீன சிந்தனையாளர்களைப் படிக்க விரும்புகிறேன்.  சிலரது பெயரை எனக்குச் சொல்லுங்கள்.

வளன்.

அன்புள்ள வளன்,

இதே போல் இன்னும் ஒரு கடிதம் வந்தாலும் நான் உன்னோடான தொடர்பை நிறுத்திக் கொள்வேன்.  எனக்கு மகா மன உளைச்சலைத் தரும் கடிதம் என்றால் இதுதான்.  ஏன் தம்பி, என்னுடைய எழுத்து ஏதாவதை நீ படித்திருக்கிறாயா இல்லையா?  என்னுடைய நூல்களைப் படித்திருந்தால் நீ நாலைந்து ஆயுட்காலம் படிப்பதற்கான தத்துவவாதிகளின் பெயர்களைத் தெரிந்து கொள்ளலாமே?  நான் செல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என்னோடு கலந்து கொள்ளும் அன்பர்கள் சிலர், சார், நீங்க எங்கே வொர்க் பண்றீங்க என்ற அறிவான கேள்வியைக் கேட்பார்கள்.  அந்தக் கேள்விக்கும் உன்னுடைய கேள்விக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.  நீ என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவன் என எனக்குத் தெரியும்.  ஆனால் நான் எதிர்பார்ப்பது, என் மனசுக்கு உகந்தது, எனக்கு மிகவும் உவப்பளிப்பது என்னவென்றால், என் நூல்களைப் படிப்பதுதான்.  நீ என்னுடைய புத்தகங்களை சரிவரப் படிக்கவில்லை என்பது உன் கடிதத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

உன் கடிதம் என்னை அவமானப்படுத்துகிறது.  நான் சமீபத்தில் ஓரான் பாமுக்குக்கு ஒரு கடிதம் எழுதினேன்.  பாமும் என் அன்புக்குரியவர்.  என் கடிதத்தில் டியர் பாமுக், நீங்கள் என்னென்ன நூல்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்கவில்லை.  கேட்டால் எப்படி இருக்கும்?  அப்படித்தான் இருக்கிறது உன் கேள்வி.  தத்துவம் பற்றியே பத்து ஆண்டுகள் எழுதியிருக்கிறேன்.  அதில் ஒரு எழவையும் படிக்காமல் என்னிடமே கேள்வியா?  நான் என்ன உங்களுக்கெல்லாம் guideஆ?  நானாக இருந்தால் எப்படிக் கேட்டிருப்பேன் தெரியுமா?  இது போன்ற கேள்விகள் உனக்கு எழலாம்.  தப்பே இல்லை.  ஆனால் கேள்வி மனதில் எழுந்த உடனே சாருவை அழைக்க மாட்டேன்.  வாசகர் வட்டத்தில் உள்ள யாரையேனும் தொடர்பு கொண்டு, ஃபோனில் முடியாவிட்டால், வாசகர் வட்டத்தின் மூலமாகவே – சாரு தத்துவவாதிகள் பற்றி எந்த நூலில் எழுதியிருக்கிறார் என்று அவர்களைக் கேட்பேன்.  உங்களைப் போன்றவர்களின் பிரச்சினை என்னவென்றால், எடுத்தவுடனே என்னை அழைத்து விடுகிறீர்கள்.

என் நண்பர் மணி ஒரு பத்திரிகையின் முதலாளி.  அவர் தன் தொலைபேசி எண்ணை யாரிடமும் தர மாட்டார்.  நீங்கள் என்ன பெரிய இவரா என்று கேட்டு விட்டேன்.  உடனே அவர் ஒரு சம்பவம் சொன்னார்.  முன்பெல்லாம் என்னுடைய கேட் கீப்பருக்குக் கூட என் எண் தெரியும்.  ஒருநாள் காலை ஆறு மணிக்கு கேட் கீப்பர் எனக்கு ஃபோன் செய்து, சார், டாய்லட்டில் தண்ணீர் வர மாட்டேன் என்கிறது, என்ன செய்யட்டும் என்று கேட்டார்.  அன்றிலிருந்துதான் என் ஃபோன் நம்பரை ரகசியமாக்கினேன் என்றார்.

வாசகர் வட்டத்தில் இல்லாமல் நேரடியாக என்னுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் இதுபோல் எல்லாம் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.  வாசகர் வட்டத்தையே அணுகுங்கள்.

சந்திரகுப்த மௌரியன் கிரேக்க அரசனுக்கு யவன மதுவும், பெர்ஷிய அத்திப்பழமும், ஒரு தத்துவவாதியையும் அனுப்பி வைக்கும்படிக் கடிதம் எழுதினான்.  அதற்கு அந்த கிரேக்க அரசன் மதுவையும், அத்திப்பழத்தையும் அனுப்பி வைத்து விட்டு, தத்துவவாதிகளை வாங்குவதோ விற்பதோ எங்களுக்குப் பழக்கம் இல்லை என்று பதில் எழுதினான்.

வளன், தத்துவவாதியின் பெயர், படிக்க வேண்டிய புத்தகத்தின் பெயர் போன்ற விபரங்களைத் தருவது எனக்கும் பழக்கம் இல்லை.

சாரு