23-8-2015 அன்று வாசகசாலை என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட அழகிய பெரியவன் கதைகள் பற்றிய விவாத அரங்கில் கலந்து கொண்ட போது நான் பேசிய பேச்சு கீழ்க்கண்ட இணைப்பில் கிடைக்கிறது. கூட்டத்துக்கு வர முடியாதவர்கள் இந்தப் பேச்சைக் கேட்கலாம். பொதுவாக என் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு, பிடித்தால் ஒருவரை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடுகிறேன்; பிடிக்காவிட்டால் காலில் போட்டு மிதிக்கிறேன். இந்த விமர்சனத்தில் ஒரு இம்மியளவு கூட உண்மை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உதாரணமாக, அந்த சாமியாரை எடுத்துக் கொள்வோம். முதலில் அவரை நான் இந்தியப் பாரம்பரியத்தில் வந்த உண்மையான துறவி என்று எண்ணினேன். அவருடைய நூல்களில் அள்ள அள்ளக் குறையாத ஞானம் கிடைத்தது. (இப்போதும் அந்த நூல்கள் அப்படியே தான் உள்ளன. என்ன… எல்லாம் பல்வேறு ஞானிகளிடமிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டவை.) பிறகுதான் அவருடைய உண்மையான சொரூபம் தெரிந்து விமர்சித்தேன். நானா மாறினேன்? உருவெளித் தோற்ற மாறுதல் அவரிடமிருந்து அல்லவா வந்தது? மோடியை எடுத்துக் கொண்டால் குஜராத்தின் முதல் மந்திரியாக இருந்த மோடி வேறு; இப்போதைய மோடி வேறு. இப்படி அரசியல், ஆன்மீகம் ஆகியவற்றில் என் கருத்துக்கள் மாறுவதற்குக் காரணம் நான் அல்ல. மற்றவர்கள். இன்று அராத்துவின் இரண்டு நூல்களையும் பாராட்டி எழுதியிருக்கிறேன். வெகுவாகவே பாராட்டினேன். அதற்குத் தகுதியானவைதான் அவை. நாளையே அவர் பெருமாள் முருகன் மாதிரி எழுதினால் திட்டுவேன். நானா காரணம்? நானா மாறி விட்டேன்?
மற்றபடி என் 25 வயதிலேயே, எழுத ஆரம்பித்த முதல் நாளிலேயே, சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன் மூவரும் சராசரி எழுத்தாளர்கள் என்று எழுதினேன். இன்றளவும் அதில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. அப்போதே கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், நகுலன், க.நா.சு., கு.ப.ரா., ஆதவன், லா.ச.ரா., அசோகமித்திரன், ந. முத்துசாமி போன்றவர்களைப் பாராட்டித்தான் எழுதினேன். இன்றளவும் அதில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. முன்னுக்குப் பின் முரண் என்ற பேச்சுக்கு என்னிடம் இலக்கியத்தில் இடமில்லை.
இப்போது ஒரே ஒரு விதிவிலக்காக அழகிய பெரியவன் இருப்பார் போலிருக்கிறது. அவருடைய சில கதைகளைப் படித்து விட்டுப் பெரிதும் பாராட்டி எழுதியிருக்கிறேன். எனக்குப் பிடித்த சமகால எழுத்தாளர்களில் அவர் பெயரை எப்போதும் வைத்திருந்தேன். ஆனால் இப்போது அவருடைய மொத்த தொகுப்பையும் (சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள்) வாசித்த போது அவர் எழுத்து பற்றிய என் கருத்து மாறி விட்டது. ராஜு முருகனை நான் தமிழ்நாட்டுக் கலாச்சார சீரழிவின் குறியீடாகக் காண்கிறேன். அழகிய பெரியவன் கதைகளிலிருந்து அவர் ஒரு refined ராஜு முருகனாகத் தெரிகிறார். அவர் எழுதுவதெல்லாம் விளிம்பு நிலை மக்கள். ஆனால் அந்த எழுத்தின் அரசியலில் ராஜு முருகன் இருக்கிறார். தோப்பு என்ற சிறுகதை பற்றிப் பேசியிருக்கிறேன். அச்சு அசலாக ராஜு முருகன் கட்டுரை. என் பேச்சின் துவக்கத்திலேயே என் வாதங்களுக்கு அழகிய பெரியவன் பதில் எதுவும் சொல்லத் தேவையில்லை என்று அறிவுறுத்தினேன். என்னைப் பொறுத்தவரை இதில் விவாதத்துக்கு எந்த அவசியமும் இல்லை. விவாதிக்கவும் நான் தயாராக இல்லை. நல்லவன் – கெட்டவன், பணக்காரன் – ஏழை, உயர்ஜாதி – கீழ்ஜாதி என்ற binary opposition-இல் வைத்து சமூகத்தைப் புரிந்து கொண்டு கதை எழுதினால் அதில் விவாதிக்க எனக்கு எதுவுமே இல்லை. அழகிய பெரியவனின் கதைகளுக்கும் வசந்த பாலனின் சினிமாவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
பெயர் வாங்கலாம். புகழ் கிடைக்கும். ஆனால் இலக்கியம் ஆகாது. பதில் சொல்ல அவசியம் இல்லை என்று நான் சொல்லியும் அழகிய பெரியவன் என் அவதானங்களுக்கு பதில் சொன்னார். மிகக் கொடுமையாக இருந்தது. தோப்பு கதையைப் படித்து விட்டுத் தனக்கு நூறு தொலைபேசி அழைப்புகள் வந்தன என்றும், எல்லோரும் மிக நெகிழ்ந்து பேசினர் என்றும் சொன்னார். அடப் பாவமே! இன்றைய நிலையில் ரமணி சந்திரன் தான் தமிழில் நம்பர் ஒன் எழுத்தாளர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவரைப் படிக்கிறார்கள். அவருக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் கடிதம் எழுதிக் கண்ணீர் விடுகிறார்கள். என்னவென்று? என் கதையை எழுதி விட்டீர்கள் அம்மா… என் பக்கத்திலேயே இருந்து பார்த்து எழுதியது போல் இருக்கிறது அம்மா… எட்ஸெட்ரா, எட்ஸெட்ரா. ரமணி சந்திரன் பொய்யை எழுதவில்லை. உண்மையைத்தான் எழுதுகிறார். அதனால்தான் அத்தனை பேர் அவருக்குக் கடிதம் எழுதுகிறார்கள். ரமணி சந்திரன் எழுதுவதும் உண்மைதான்; ராஜு முருகன் எழுதுவதும் உண்மைதான்; அழகிய பெரியவன் எழுதுவதும் உண்மைதான். இவர்கள் யாரும் பொய்யை எழுதவில்லை. ஆனால் அந்த உண்மை எப்படி இலக்கியமாகிறது? ஜூனியர் விகடனில் வருவது எல்லாமே உண்மைச் சம்பவங்கள்தான். ஆனால் அவை இலக்கியமா? நூறு பேர் நெகிழ்ந்து போய் போன் பேசுகிறார்கள் என்பதெல்லாம் ஒரு வாதமா? அந்த நூறு பேரும் வாழ்நாள் பூராவும் உலக இலக்கியங்களை வாசித்துக் கொண்டிருக்கும் நானும் ஒன்றா? அப்துல் கலாம் பற்றி நூறாயிரம் பேர் ஒரே விதமான கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே அதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டுமா? நடிகர்கள் விஜய், அஜீத் போன்றவர்களுக்கு வராத ரசிகர் கடிதங்களா? சிவாஜியின் நடிப்பைக் கண்டு எத்தனை கோடி பேர் கண்ணீர் விட்டிருக்கிறார்கள்? இன்று இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகிறது. அதற்காக அழகிய பெரியவன் மோடியை ஒப்புக் கொள்வாரா? நூறு பேர் என்பதுதானே நூறு கோடி? ஹிட்லருக்கு இல்லாத மக்கள் ஆதரவா? உங்கள் வாதத்தைத்தானே எம்ஜியாரும் சொல்லியிருப்பார்?
நான் சொன்ன விஷயங்கள் அழகிய பெரியவனின் சிந்தனைக்குள் போகவில்லை என்பதையே அவருடைய பேச்சு உணர்த்தியது. அவருடைய பேச்சு அவருடைய எழுத்தை விட தட்டையாக இருந்தது. நான் சொன்னதை அவர் வாங்கிக் கொள்ளவே இல்லை என்பதனால் எனக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் அவரிடமிருந்து இனி நல்ல கதைகள் வர சாத்தியமில்லை என்பதையே அவர் பேச்சு உணர்த்தியது.
என் விமர்சனத்தின் அடி நுனியைக் கூட அவர் பிடிக்கவில்லை என்பதை அவருடைய பேச்சின் இன்னொரு வாதம் நமக்கு உணர்த்தியது. ”நான் மிகவும் மென்மையானவன்; அதனால் என்னால் கொந்தளிப்பாகவோ ரத்தம் பீறிடவோ எழுத முடியாது” என்றார் அவர். கொலை பற்றி எழுத நீங்கள் கொலை செய்திருக்க வேண்டியதில்லை. எழுத்தின் மிக எளிய உண்மை இது. தஞ்சை ப்ரகாஷ் பற்றி என் பேச்சில் குறிப்பிட்டேன். தஞ்சை ப்ரகாஷுக்குக் கோபமே வந்ததில்லை. ஒரு ஞானியைப் போல், ஒரு துறவியைப் போல் பேசிக் கொண்டிருந்தவர் அவர். மலரைப் போல் மென்மையானவர். ஆனால் அவர் எழுத்து எப்படி இருக்கிறது? ஒரே ரத்தக் களரி. நான் பேச்சில் குறிப்பிட்டது, intensity. அசோகமித்திரனின் எழுத்தில் அந்த வலு இருக்கிறது. அழகிய பெரியவனின் கதைகள் தட்டையாக இருக்கின்றன. ஒன்னும் ஒன்னும் ரெண்டு என்பது போன்ற கணித வாய்ப்பாடுகளையே அழகிய பெரியவன் கதைகளாக முன்வைத்துக் கொண்டிருக்கிறார்.
கிளம்பும் போது இதையெல்லாம் எழுதுங்கள் என்றார் அழகிய பெரியவன். அவருடைய 600 பக்க மொத்த சிறுகதைகளை எடுத்துக் காட்டி ஒரு நீண்ட கட்டுரை எழுதலாம். நேரமில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அவருடைய கதைகள் தட்டையானவை, இலக்கியமாகத் தேறவில்லை என்பதைச் சொல்ல இனி ஒரு நிமிடமும் செலவு செய்ய என்னிடம் நேரம் இல்லை. அதை விட முக்கியமான பணிகள் பல உள்ளன. நன்றாக இல்லாத கதைகளைப் படிப்பதை விட பல அற்புதமான இலக்கிய சிருஷ்டிகளைப் படிக்க வேண்டியதே அவசரத் தேவை என்று நினைக்கிறேன். ஆனால் ஒருவர் என் பேச்சை கவனமாகக் கேட்டால் அதில் நல்ல எழுத்துக்கான மிக முக்கியமான கண்ணிகளைக் கோர்த்திருக்கிறேன்.
சரி, வேறு எதுவும் வேண்டாம். இணையத்தில் கிடைக்கும் தஞ்சை ப்ரகாஷின் 31 சிறுகதைகளைப் படியுங்கள். என் பேச்சில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியும்.
குட் பை அழகிய பெரியவன்.
நன்றி:
shruti.tv
கணேஷ் அன்பு, டாக்டர் ஸ்ரீராம்.