என்ன மாதிரியான தேசம் இது? (2)

என் நண்பர் டாக்டர் ஸ்ரீராம் அந்தப் பத்திரிகையாளர் இளையராஜாவிடம் கேட்டது தப்பு இல்லையா என்று என்னிடம் கேட்டார்.  பத்திரிகையாளர் அப்படி என்ன தப்பாகக் கேட்டு விட்டார்.  சிம்பு பாட்டு பற்றி உங்கள் கருத்து என்ன?  இதுதான் பத்திரிகையாளர் – அவர் தொலைக்காட்சி நிருபர் என நினைக்கிறேன் – கேட்ட கேள்வி.  இந்தக் கேள்வியை இளையராஜாவிடம் ஏன் கேட்கக் கூடாது?  ஒருவேளை அந்த இடத்தில் பதில் சொல்ல விருப்பம் இல்லாவிட்டால் அப்புறமாக வீட்டுக்கு வாருங்கள், சொல்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே?  அதை விட்டு ஏய் உனக்கு எதாவது இருக்கா?  ஏய் உனக்கு எதாவது இருக்கா?  உனக்கு அறிவு இருக்கா?  என் கிட்ட நின்னு பேச உனக்கு என்ன தகுதி இருக்கு?  உனக்கு அறிவு இருக்குங்கிறதை எந்த அறிவுல கண்டு பிடிச்சே? என்று குழாய்ச் சண்டை பாணியில் இளையராஜா ஏறு ஏறு என்று ஏறியிருக்கிறார். அவருடைய புதல்வனைப் போன்ற வயது பத்திரிகை நிருபருக்கு.  பேரன் வயது என்று கூடச் சொல்லலாம்.  இதெல்லாம் வன்முறை இல்லையா?  கையால் அடித்தால் தான் வன்முறையா?  டாக்டர் ஸ்ரீராமிடம் ரோட்டில் போகிற போது பலரும் ஏன் நம்முடைய குரல்வளையைப் பிடித்துக் கடித்துக் குதறுவது இல்லை தெரியுமா என்று கேட்டேன்.   பதில் இல்லை.  நான் சொன்னேன்.  ஏனென்றால், அவர்களிடம் அதிகாரம் இல்லை; அதனால்தான் நம் கழுத்து நம்மிடம் பத்திரமாக இருக்கிறது.  இல்லாவிட்டால் கழுத்து துண்டாகி விடும்.  அந்தப் பத்திரிகையாளருக்கு நடந்த மாதிரி.

இந்தக் கோடூரத்திலிருந்து – அதாவது இத்தகைய வன்முறையை மற்ற மனிதர் மீது செலுத்தாமல் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வது எப்படி?  நெற்றியில் விபூதி அணிவதால் அது சாத்தியம் இல்லை.  தினந்தோறும் கோவிலுக்குப் போவதால் அது சாத்தியம் இல்லை.  கோவிலுக்குக் கோபுரங்கள் கட்டிக் கொடுப்பதால் சாத்தியம் இல்லை.   தன்னை ஒரு ஆன்மீகவாதியாக மாற்றிக் கொள்வதாலும் சாத்தியம் இல்லை. வேறு எப்படி நம்முடைய மனிதத்தைக் காபந்து செய்து கொள்ள முடியும்?   இலக்கியம் படிப்பது மட்டுமே நம்மை மனிதனாக்கும்; இலக்கியம் மட்டுமே சக மனிதனை நேசிக்கச் செய்யும்.  இலக்கியம் மட்டுமே நம்மைப் பண்படுத்தும்.