பின்நவீனத்துவ போலி!

எந்த வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதையே தனது சமீபத்திய புதினத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதுவது போல் விதம்விதமாகப் பட்டியல் போன்று எழுதிச் சென்ற ஒரு ‘பின்நவீனத்துவ’ எழுத்தாளர் கூட இந்த எதிர்ப்புக் கூட்டத்தின் முன்னணியில் நின்றி ஆவேசமாக உரையாடியது ஒரு சுவாரசியமான முரண்நகை.  இவரே அளித்துக் கொண்ட தன்னிலை விளக்கத்தில் ‘நான் கூட இது போன்ற வார்த்தைகளை என் நாவலில் எழுதியிருக்கிறேன்.  ஆனால் அவற்றைக் குழந்தைகள் வாசிக்க வாய்ப்பில்லை’ என்கிறார்.  புத்தகங்களுக்கு சென்சாரை எப்போது கொண்டு வந்தார்கள் எனத் தெரியவில்லை.

என்று இப்படியாகப் போகும் ஒரு கட்டுரையில் ஒரு கட்டுரையாளர் அந்தப் பத்தியின் கடைசியில் “அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் கவன ஈர்ப்பிற்காகவும் காமம் சார்ந்த கிளர்ச்சியை மட்டும் தூண்டும் பின்நவீனத்துவப் போலிகளும் இந்தச் சர்ச்சை எதிர்ப்பில் கலந்து கொண்டதுதான் நகைச்சுவை” என்று சொல்லியிருக்கிறார்.

30 ஆண்டுகளாக இதே வசை.  முன்பு சரோஜாதேவி என்றார்கள்.  இப்போது பின்நவீனத்துவப் போலி என்கிறார்கள்.  ஆங்கில விமர்சகர்கள் என் எழுத்தை விளதிமீர் நபக்கோவுடன் ஒப்பிடுகிறார்கள்.  ஸீரோ டிகிரியை இந்தியாவில் வெளிவந்த ஐம்பது முக்கிய நூல்களில் ஒன்றாக ஹார்ப்பர் காலின்ஸில் புத்தகம் போடுகிறார்கள். இங்கே சில குஞ்சுகள் என்னை இன்னமும் போலி போலி என்று சொல்லிக் கொண்டு அலைகின்றன.

இந்த மாத உயிர்மையைப் படித்து விட்டு கையா முய்யா என்று ஆவேசமாகத் திட்டிக் கொண்டிருந்தாள் அவந்திகா.  என்னவென்று எட்டிப் பார்த்த போது குஞ்சின் கட்டுரை இருந்தது.  கட்டுரையில் என்னைத் திட்டும் போது என் பெயரைக் கூட போடவில்லை குஞ்சு.  பெயரைப் போட்டாலே தீட்டு ஒட்டிக் கொண்டு விடும்.  அந்த அளவுக்குத் தீண்டத் தகாதவன் நான்.

நமக்கு அந்தப் பிரச்சினை எல்லாம் இல்லை.  கட்டுரைக் குஞ்சின் பெயர் சுரேஷ் கண்ணன்.