நவம்பர் 11, 2015 அன்று கார்ல் மார்க்ஸ் தனது முகநூலில் எழுதியது இது. பழுப்பு நிறப் பக்கங்கள் வெளியீட்டு விழா ஃபெப்ருவரி 27. மாலை 6.30 மணி. சனிக்கிழமை. ராஜா அண்ணாமலை மன்றம். இந்தப் புத்தகத்தோடு இன்னும் எட்டு புத்தகங்களும் வெளிவரும்.
தினமணியில் சாரு எழுதும் ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’ தொடரில் இந்த வாரம் தி. ஜானகிராமன் குறித்து அவர் எழுதியிருப்பதைப் படித்து மிகவும் நெகிழ்ந்து போனேன். எழுத்தாளனைக் கொண்டாடுவதன் தொனி குறித்த சில அடிப்படைகளை ஒவ்வொரு கட்டுரையிலும் முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்.
எழுத்தாளர்களை வாழ்வின் பகுதியாக வைத்து, அவ்வெழுத்து மானுடத்தின் மீது இறக்கி வைத்திருக்கின்ற சாரத்தை இனங்கண்டு பாராட்டும், கொண்டாடும் அட்டகாசம் இதுவரை எழுதப்படாதது. நீ நல்ல எழுத்தாளன் என்று சொல்வதல்ல அது. இது உன் குறை, இது உன் நிறை என்று சொல்வதல்ல அது. உன் எழுத்து இதை நிகழ்த்துகிறது, என்னை கரையச் செய்கிறது, இந்த வாழ்வை இப்படி தரிசிக்கச் செய்கிறது என்று சொல்கிறது. நீ அடைந்த தரிசனத்தை உனது எழுத்தின் வழியாக எனக்குக் கடத்துகிறாய், என்னைப் பரவச நிலைக்கு ஆட்படுத்துகிறாய் என்கிறது. அவனைக் கட்டற்றுத் தழுவுகிறது. எந்தத் தன்முனைப்புமற்று அவனில் ஒன்றாகி விம்முகிறது. நானும் உன் வகையில் ஒருவனல்லவா என்று பெருமிதம் கொள்கிறது சாருவின் நடை.
உனது படைப்பின் மூலம் நீ கடவுளுக்கு நெருக்கமானவன் என்று ஆகிறாய். பல நேரங்களில் நீதான் கடவுள். நீ என்னையும் அங்கு அழைத்துப் போகிறாய். உன் மொழி எனக்கு அப்படித்தான் பயன்படுகிறது. இதோ இந்த ராகத்தைப் போல, எந்நாளும் நாவில் நிலைக்கும் பெருஞ்சுவையைப்போல, என் முன்னால் இயற்கை பரப்பி வைத்திருக்கும் இந்த அற்புதத்தை என்னை உணரச் செய்கிறாய் என்று எழுத்தாளனின் ஆதார உந்துதலின் மீது நெகிழ்ந்து அவனை ஒரு பேருண்மையாக நிலைக்கச் செய்கிறது.
அந்த வகையில் எழுத்தாளர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய அஞ்சலியாக மாறுகின்றன இந்தக் கட்டுரைகள். அதே சமயம் வெறும் அஞ்சலியாக மட்டுமல்லாது, எழுதுபவனின் மீதான அன்பையும் நமது கவனக்குவிப்பையும் சாத்தியப்படுத்துகின்றன. பிஸ்மில்லாகானின் ஷெனாயைப்போல எந்த இறைஞ்சுதலும் இல்லாமல் சாரு நம்மில் நிகழ்த்தும் ரசவாதம் இது.