கடுமையான பத்திய உணவு. நீங்கள் சேர்த்துக் கொள்ளும் உப்பில் கால் அளவுதான். தியானம். நடைப் பயிற்சி. உடலுக்கு ஊறு விளைவிக்கும் எந்தப் பழக்கமும் இல்லை, ஒன்றே ஒன்றைத் தவிர. ராப்பகலாகப் படிப்பு. இன்று டாக்டர் சிவகடாட்சத்திடம் போனேன். சோதித்தார். எல்லாமே அப்நார்மல். சர்க்கரை அளவு கூடுதல். கொழுப்பு அளவு கூடுதல். ரத்த அழுத்தம் எவ்வளவு என்று சொன்னால் உங்கள் ரத்த அழுத்தம் கூடி விடும். மருந்துகளை அதிகப்படுத்திக் கொடுத்தார்.
எழுதுவதையும் படிப்பதையும் கொஞ்சம் குறைத்தால் ரத்த அழுத்தம் கொஞ்சம் குறையலாம். பழுப்பு நிறப் பக்கங்களுக்காக இரவு பகலாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். பல நண்பர்களுக்கு அந்தத் தொடர் பிடித்திருப்பது உற்சாகத்தைத் தருகிறது. ஒரு நண்பரின் கடிதம் இது:
மதிப்பிற்குரிய சாரு,
உங்கள் பழுப்பு நிறப் பக்கங்களை எல்லா வாரமும் படித்து வருகிறேன். பொழுது போக்குக்காக மட்டுமே அவ்வப்போது புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்த என்னை தீவிர இலக்கிய வாசிப்புக்கு உட்படுத்தியதில் பெரும் பங்கு உங்களையே சாரும்.
இதை துவங்கிய காலம் தொட்டு இன்றுவரை ஒரு வாசகனாக எந்த அளவிற்கு என் ரசனை முதிர்சியடைந்திருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது. தேடித் தேடி தினம் தினம் வாசிக்கும் பழக்கத்திற்கு என்னை கொண்டு வந்திருக்கிறது.
இப்போது இந்த கட்டுரைத் தொடர் நூலாக வெளிவருவதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பழுப்பு நிறப் பக்கங்கள் பற்றிய என் பார்வையை என் வலைப்பூவில் எழுதியுள்ளேன். அதற்கான சுட்டி கீழே
http://orukozhiyinkooval.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அதை படிக்க நேர்ந்தால் அதைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உங்களின் இந்த உன்னதமான பணி இன்னும் நெடு நாட்கள் தொடர வேண்டும் என்பதே என் அவா.
நன்றி
ஜகன்
இந்த வாரப் பழுப்பு நிறப் பக்கங்களில் கிருஷ்ணன் நம்பி. அடுத்ததாக ஆதவனைப் படிக்க வேண்டும்.