(பின்வருவது ஜி. கார்ல் மார்க்ஸின் சிறுகதைத் தொகுதிக்கு (எதிர் வெளியீடு) அடியேன் எழுதிய முன்னுரை. நூல் வெளியீட்டு விழா மார்ச் 19-ஆம் தேதி சனிக்கிழமை மாலை சென்னை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள அமேதிஸ்ட் உணவகத்தில் உள்ள அரங்கில் நடக்க உள்ளது.)
லௌகீக வாழ்வில் எனக்கு மூட நம்பிக்கைகள் கிடையாது; ஆனால் இலக்கிய வாழ்வில் உண்டு. அதில் முக்கியமான ஒன்று, கீழ்வரும் பட்டியலில் அடங்குபவர்கள் யாராலும் நல்ல, காத்திரமான இலக்கியம் படைக்க முடியாது. யார் அவர்கள் என்று பார்ப்போம்.
காலை பத்து மணி வரை உறங்குபவர்கள்.
தெளிவான, குழப்பமில்லாத அரசியல் கட்டுரை எழுதுபவர்கள்.
இடதுசாரிகள்.
பொலிடிகல் கரெக்னஸ் கொண்டவர்கள்.
முகநூல் மூலம் பிரபலம் ஆகும் இளைஞர்கள்.
வெளிநாட்டில் வசிப்பவர்கள்.
வசீகரமாகவும் சினிமா நடிகரைப் போன்ற தோற்றம் கொண்டவர்கள்.
ஜி. கார்ல் மார்க்ஸ் மேலே உள்ள அத்தனை தகுதிகளையும் ஒருங்கே பெற்றவர் என்பதால் நிச்சயமாக அவரால் நல்ல கதை எழுத முடியாது என்ற தீவிர நம்பிக்கையுடனே அவருடைய இந்தத் தொகுப்புக்குள் நுழைந்தேன். என்ன ஒரு ஏமாற்றம். ஒவ்வொரு கதையாகப் படிக்கப் படிக்க என்னுடைய மூட நம்பிக்கையெல்லாம் தவிடுபொடியாகி விட்டது. ஒரு கட்டத்தில் ஜி. கார்ல் மார்க்ஸ் என்ற பெயரை எடுத்து விட்டு இத்தொகுப்பில் தி. ஜானகிராமன் என்று போட்டால் கூட நம்பி விடலாம் போல் தோன்றியது. ஒன்றிரண்டு கதைகளில்தான் இரண்டாயிரத்துக்கு அப்புறமான வாழ்வியல் சாதனங்களின் (உ-ம். ஆணுறை) அறிமுகம் நடக்கிறது. இப்படிச் சொல்வதால் கார்ல் மார்க்ஸின் இந்தச் சிறுகதைகள் சர்வதேசத் தரம் வாய்ந்ததாக உள்ளன என்று பொருள்.
அது என்ன சர்வதேசத் தரம்? கிரிக்கெட்டிலிருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் அலைபேசி வரை எல்லா விஷயங்களிலும் சர்வதேசத் தரத்தைப் பேணுகிறோம். அதேதான் இலக்கியத்திலும். ஒரு சிறுகதை என்றால் அது மாப்பஸானையும் செகாவையும் பல்ஸாக்கையும் நினைவுபடுத்துகிறது என்றால் அது சர்வதேசத் தரம் வாய்ந்தது என்று தீர்மானமாகச் சொல்லி விடலாம். இத்தொகுதியில் உள்ள பல கதைகள் எனக்கு அந்த மேதைகளின் கதைகளை ஞாபகப்படுத்தின.
இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு – சார்வாகன் காலமாவதற்குச் சில தினங்கள் முன்பு அவருடைய கதைகள் – உதாரணமாக, மகா பண்டிதர், முடிவற்ற பாதை – செகாவின் கதைகளுக்கு ஈடானவை என்று எழுதியிருந்தேன். பின்னர் அவரைச் சந்தித்த போது, ”இப்படியெல்லாம் புகழக் கூடாது. புகழ்ந்தால் ’சாரு என்றால் இப்படித்தான்; ஒருவரைப் பிடித்தால் வானளாவப் புகழ்வார். இல்லாவிட்டால் தூக்கிப் போட்டு மிதிப்பார்’ என்று சொல்லி விடுவார்கள். உங்களுடைய credibility போய் விடும்” என்றார். அடுத்த சில தினங்கள் சென்று அசோகமித்திரனைச் சந்தித்த போதும் இதே வார்த்தைகளைச் சொன்னார். நான் அவர்களிடம் எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால் பிறகு யோசித்துப் பார்த்த போது பல உண்மைகள் புலப்பட்டன. முதல் விஷயம், நாம் யாரையுமே மனம் திறந்து பாராட்டுவதில்லை. அதனால்தான் பாராட்டு என்பதே நம்புவதற்கு அரிதான, சந்தேகத்திற்குரிய விஷயமாக மாறி விட்டது. காரணம், அரசியலும் சினிமாவும். அங்கே பாராட்டு என்றால் வழிபாடு. தமிழ்நாட்டின் காற்றிலேயே இந்த ஆபாசமான வழிபாடு கலந்து போய் விட்டது. ஒரு கட் அவுட் தன் தலைவரை கரிகால் சோழனே, முத்தமிழ் வேந்தனே என்று வழிபட்டால் உடனே இன்னொரு கட் அவுட் தன் தலைவியை திவ்யப் பிரபந்தமே என்று துதிக்கிறது. இந்தத் துதிபாடல்களைத்தான் நாம் தினந்தோறும் கடந்து போகிறோம். இப்படிப்பட்ட சூழல்தான் நம்முடைய நிஜமான பாராட்டின் வண்ணத்தை மாற்றி முகஸ்துதியாக சந்தேகம் கொள்ள வைக்கிறது.
என்னுடைய நாற்பதாண்டு இலக்கிய வாழ்வில் நான் யாரையும் காரண காரியமின்றிப் போற்றியோ பின்னர் தூற்றியோ எழுதியதில்லை. நகுலன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா., லா.ச.ரா, அசோகமித்திரன் என்று யாரை எடுத்துக் கொண்டாலும் என் கருத்து ஒரே விதமாகத்தான் இருந்திருக்கிறது. புதுமைப்பித்தன் விஷயத்தில் மட்டும் என் கருத்தை மாற்றிக் கொண்டேன். அதுவும் நன்மையாகவே முடிந்தது. அவர் எழுத்தில் ஜாதியம் தூக்கலாக இருந்ததால் அவரை என்னால் ஏற்க முடியவில்லை. அதனால் விமர்சித்தேன். ஆனால் அப்படிப் பார்த்தால் திருக்குறளிலேயே பெண்ணடிமைத்தனமும் ஆணாதிக்கமும் வலியுறுத்தப்பட்டிருக்கிறதே? அதற்காகத் திருக்குறளைப் புறக்கணிக்க முடியுமா? இந்தத் தெளிவு வர எனக்கு இத்தனைக் காலம் ஆயிற்று. ஆனால் என் வாசிப்பின் நம்பகத்தன்மையை கடவுளே வந்தாலும் குறை சொல்ல முடியாது. நான் ஒரு எழுத்தாளன் என்பதை விடவும் அடிப்படையில் ஒரு வாசகன். அந்த வாசிப்பின் பலத்தில் சொல்கிறேன், இந்தத் தொகுப்பில் உள்ள பல கதைகள் சர்வதேசத்தரம் வாய்ந்தவையாக உள்ளன.
தமிழின் ஆகச் சிறந்த சிறுகதையாளர்கள் எனப் பட்டியலிட்டால் அதில் சார்வாகன், தி.ஜ.ரங்கநாதன், கு.ப.ரா., புதுமைப்பித்தன், மௌனி, தி. ஜானகிராமன், ஆதவன், தஞ்சை ப்ரகாஷ், அசோகமித்திரன் என்று பலர் வருகின்றனர். உலகில் எந்த மொழியிலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஆகச் சிறந்த சிறுகதைகளை சிருஷ்டித்ததில்லை. என்னைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயம் என்னவென்றால், கார்ல் மார்க்ஸ் தன்னுடைய முதல் தொகுதியிலேயே மேலே குறிப்பிட்ட மேதைகளின் அருகில் போய் அமர்ந்து கொண்டிருக்கிறார். எனக்கே இது நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்தப் படைப்பாளிகள் அனைவருமே தங்கள் இளமைக் காலத்தில்தானே – அதாவது, கார்ல் மார்க்ஸின் பிராயத்திலேயே – பல சாதனைச் சிறுகதைகளை சிருஷ்டித்தவர்கள்தானே?
என்னுடைய பள்ளியிலிருந்து பல எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள் உருவாகி வந்துள்ளனர். இத்தனை எழுத்தாளர்களை நம் எழுத்து உருவாக்கியிருக்கிறதா என்ற பிரமிப்பு எனக்கு எப்போதும் உண்டு. இந்த வரிசையில் வந்த யாரையுமே என்னுடைய அர்த்தத்தில் ஒரு முழுமையான எழுத்தாளர் என்று என்னால் சொல்ல முடிந்ததில்லை. இப்போதுதான் கார்ல் மார்க்ஸை மிகுந்த திருப்தியுடன் அப்படி அழைக்க முடிகிறது. கார்ல் மார்க்ஸை வாசிக்கும் போது தி.ஜா.வையும் சாரு நிவேதிதாவையும் கலந்து அடிக்கும் காக்டெய்லைப் போல் இருக்கிறது. திடீரென்று எனக்கு வூடி ஆலனின் மிட்நைட் இன் பாரிஸ் என்ற படமும் ஞாபகம் வந்தது. அந்தப் படத்தில் பிகாஸோ, சல்வதோர் தாலி, ஹெமிங்வே போன்ற பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் கற்பனைப் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர். கார்ல் மார்க்ஸின் தொகுதியில் பல கதைகள் எனக்கு இப்படிப் பல சர்வதேச இலக்கிய மேதைகளையும், கலைஞர்களையும் நினைவூட்டிக் கொண்டிருந்தன. உதாரணமாக, கடைசி கதையான ’கட்டுத்தரை’ ஒரு அகிரா குரஸவாவின் படத்தைப் போல் என் பிரக்ஞையில் சென்று தங்கியது. ’காட்டாமணக்கு’, ’அப்போது அது வேறாக இருந்தது’, ’உப்புச் சுவை’ போன்ற கதைகள் உலகின் மகத்தான சிறுகதைகளில் சேர்க்கத் தகுந்தவை. இந்த நான்கு கதைகளில் நாம் காணும் கிராமங்களும் அதன் வன்மமும் கண்ணீரும் வெம்மையும் தனிமையும் காமமும் மெக்ஸிகன் எழுத்தாளர் ஹுவான் ருல்ஃபோவின் (Juan Rulfo) மற்றும் கார்ஸியா மார்க்கேஸின் கிராமங்களுக்கு நிகரானவை. மகிழம் பூ, ட்ராகன் டாட்டூ போன்ற கதைகள் ஹாருகி முராகாமியின் உலகைச் சார்ந்தவை.
***
கார்ல் மார்க்ஸ் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியிலேயே தமிழ் இலக்கிய உலகில் மிக வலுவான தடத்தைப் பதித்திருக்கிறார் என்று சொன்னால் அது சம்பிரதாய வார்த்தைகளாகப் போய் விடும்.
கார்ல் மார்க்ஸ் என்ற ஒரு மகத்தான கலைஞன் தமிழில் தன் பயணத்தைத் துவக்கியிருக்கிறான். அவனை வாழ்த்துகிறேன்.
மைலாப்பூர்
கோடை எட்டிப் பார்க்கும் ஒரு ஃபெப்ருவரி மாத மதியம்…
சாரு நிவேதிதா
(தொகுப்பில் உள்ள ’கட்டுத்தரை’ என்ற சிறுகதை கீழே)
கட்டுத்தரை
ஜி. கார்ல் மார்க்ஸ்
வாசலில் தம்பீ… என்ற குரல் கேட்டது. கேட்ட மாத்திரத்திலேயே அது இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக ஒலிக்கும் குரல் என்று புரிந்தது. தொலைக்காட்சியின் ஒலியளவைக் குறைத்துவிட்டு ”அம்மா வெளில யாரோ வந்திருக்காங்க, பாரேன்” என்று கத்தினேன்.
அம்மாவிடம் இருந்து பதில் இல்லை. உள்ளே பார்த்தேன். மனைவியும் கண்களுக்குத் தட்டுப்படவில்லை. படுக்கையறையில் குழந்தையைத் தூங்க வைத்துக்கொண்டிருக்கிறாள் போல. அப்பா கொல்லைப்புறத்தில், மாமர நிழலில் ஈஸிசேரில் படுத்திருந்தார். இப்போதும் படுத்திருக்கிறாரா தெரியவில்லை.
தம்பீ…
இப்போது தொலைக்காட்சியின் ஒலியில்லாததால் அது தழைந்த முதிய குரல் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் நடுக்கமற்ற நேரான குரல். எழுந்து வெளியே வந்தேன். கேட்டைத் தாண்டி, உள்ளே வந்து வராண்டா படிகளில் உட்கார்ந்திருந்தார் கிழவர். சன்னமாகத்தான் விளித்திருக்கிறார்.
ஒல்லியான சிவந்த தேகம். வயதில் மெல்லிய அடுக்கான கரளைகளோடு இருந்திருக்க வேண்டும். வெண்ணிற தாடி நெஞ்சைத் தொட்டுக்கொண்டிருந்தது. பழுப்படைந்த ஆனால் தூய வேட்டி. மேலே துண்டு மட்டும் கிடந்தது. நான் வந்து நிலைப்படியில் நின்று யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் நான் நிற்பதைக் கண்டுகொள்ளாதது போன்றதொரு உடல் மொழியில் இருந்தார்.
வாசல்படியில் கால்களை மடக்கி உட்கார்ந்து கொண்டு, வதங்கிய வெற்றிலையொன்றைத் தொடையில் வைத்து அதன் பின்னால் சுண்ணாம்பு தடவிக்கொண்டிருந்தார். பிளாஸ்டிக் பொட்டலம் ஒன்று பக்கத்தில் பிரித்து வைக்கப்பட்டிருந்தது. பின்பு பொட்டலத்தில் இருந்து கொஞ்சம் சீவலை எடுத்து கைக்குள் வைத்து வெற்றிலையுடன் கசக்கத் தொடங்கும்போதுதான் நிமிர்ந்து பார்த்தார். சட்டென்று கசக்குவதில் ஒரு சுணக்கம். ஒரே வினாடிதான். முகம் மலர்ந்தது.
கசக்கிய தாம்பூலத்தை வாயில் போட்டுக்கொண்டு கைகளைத் தட்டிக்கொண்டவர், இரு கைகளையும் என்னை நோக்கி நீட்டி வாய்யா… என்றார். நான் கண்களைச் சுருக்கவும், ”இந்தக் கெழட்டு வைத்தியனை மறந்து போச்சா உனக்கு?” என்றார்.
பொறி தட்டியது போல் நினைவு வந்தது எனக்கு. சுருங்கிப் போயிருந்த கிழவரது முகத்தை இன்னும் சற்று உற்று நோக்கினேன். மாட்டு வைத்தியர் தாத்தால்ல இது…பாத்து எத்தன வருஷம் ஆச்சு…
சமாளித்துக்கொண்டு, ”இல்ல தாத்தா… மறக்கல, நீங்க ஏன் வெளில உக்காந்துகிட்டு யாரோ மாதிரி தம்பி தம்பின்னு கூப்புடுறீங்க, உள்ள வர வேண்டியதுதானே?” என்று சொல்லிவிட்டு மீண்டும் அம்மா என்று உட்புறம் நோக்கிக் குரல் கொடுத்தேன். பதிலே இல்லை. பக்கத்துக்கு வீட்டுக்கு எதுவும் போயிருக்கிறாள் போல.
மெல்லிய முறுவல் கிழவரின் முகத்தில். புகையிலையைக் கொஞ்சம் எடுத்து, பிசிறில்லாமல் கடைவாயில் போட்டுக்கொண்டு கைகளை அழுத்தி வேட்டியில் துடைத்துக்கொண்டு ”இங்க வாயேன், இப்படி வந்து உக்காரேன் கொஞ்சம்” என்றார். உட்கார்ந்தவுடன் ”அப்பன் இருக்கானா வீட்ல?” என்றார்.
”ம்ம் இருக்காரு தாத்தா. கொல்லைப்பக்கம்தான் மரத்தடியில இருக்கார். கூப்பிடவா?”
”இல்ல… இல்ல… இருக்கட்டும். எங்க போய்ட போறான். உன்னதான் பாத்து எத்தன வருஷம் ஆச்சு? பொண்டாட்டியவும் நீ வேல செய்ற நாட்டுக்கே கூட்டிட்டுப் போயிட்டியாமே? எப்ப வந்த ஊருக்கு? புள்ள ஒண்ணுதான உனக்கு?”
”ஆமா தாத்தா. நான் வந்து ஒரு வாரம் ஆச்சு. பையன் தூங்கிட்டிருக்கான். ரெண்டு வயசு ஆவுது. நான் பொண்டாட்டிய என்கூடக் கூட்டிட்டுப் போனதெல்லாம் உங்களுக்கு யாரு சொன்னா?”
”ஏண்டா, உங்கப்பன்தான் சொல்லுவான். நான் எப்பவாவது ஒரு தடவை இங்க வந்து எட்டிப்பாத்துட்டுப் போறவன்தான. மறக்க முடியுமா இந்த வூட்ட. உன் தாத்தன. இதோ கட்டாந்தரையா போட்டு வச்சிருக்கீங்களே இந்த மாட்டுக் கொட்டாய? எத மறக்க முடியும் சொல்லு? பெரியதம்பி உயிரோட இருந்திருந்தா அது வேற தான்.”
தாத்தாவைப் பற்றிச் சொல்லும்போது அவரது குரலில் ஒரு சோகம் வந்துவிட்டிருந்தது. ஆனாலும் அதே முறுவலும் பரவசமும் முகத்தில் மின்னிக்கொண்டிருந்தன. ”உங்கப்பன் கிட்டயும் நான் வருவாந்தோறும் சொல்றதுதான். ஒரு கெடேரி கன்னுக்குட்டியாவது வாங்கிக் கட்டுடான்னு. எங்க காதுல வாங்குறான். எவ்வளவு மாடு இருந்த கட்டுத்தர. இப்ப காண சகிக்கிதா…”
”யாருப்பா பாக்குறதுன்னு கேக்குறான். அவன் சொல்றதும் ஞாயம்தான். பில்லு அறுத்துப் போட வேணாம்தான். ரெண்டு வக்யல புடிங்கி போட்டாக் கூட போதும். ஆனா சாணி அள்ளனுமே. கன்னுகுட்டிக்குத் தண்ணி காட்டணுமே. அதெல்லாம் செய்யணுமில்ல. நீங்கள்ளாம் படிச்சிட்டு வெளியூருக்கு வேலைக்குப் போய்ட்டீங்க. இனிமே மாடு கன்னு எதுக்குன்னு நினைக்கிது உங்கம்மா. பாக்கெட் பாலதான் கொண்டு வந்து வூட்டுலையே போடுறான இப்ப…”
அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அம்மா வெளிகேட்டைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள். கிழவர் காலை மடக்கி, பொட்டலத்தைச் சுருட்டி மடியில் வைத்துக்கொண்டு அம்மாவுக்கு வழிவிட்டார்.
”கன்னுக்குட்டி ஒண்ணு வாங்கு வாங்குன்னு தொணதொணக்குறேன்னு மருமவளுக்கு எம்மேல கொஞ்சம் கடுப்பு.” சொல்லிவிட்டு கி…கி…கி… என்று சிரித்தார்.
சிரித்துக்கொண்டே எழுந்து நின்று பொட்டலத்தை இடுப்பு வேட்டியில் வைத்து சுருட்டிக்கொண்டிருந்தவரிடம், ”காலைல என்ன சாப்டீங்க, உள்ள வாங்க, சாப்டுங்க” என்றேன். ”கால சாப்பாடெல்லாம் சாப்ட்டு பல வருசமாவுது. வேணாம்… வேணாம்… வர்ற வழியிலதான் காப்பித்தண்ணி குடிச்சேன். இப்ப ஒண்ணும் வேணாம்” என்றார்.
இவரை எப்படி நான் மறந்தேன்? இவர் எப்படி நினைவின் அடுக்குகளில் இருந்து நழுவிப்போனார் என்று திகைப்பாக இருந்தது. அதுவும் முழுதாய் பதினைந்து வருடங்களுக்கு மேல்.
”இங்க இருப்பீங்கல்ல தாத்தா, மத்தியானம் சாப்ட்டுதான போவீங்க?” என்று கேட்டேன். என் குரல் எனக்கே அபத்தமாக இருந்தது.
”ம்ம்… ம்ம்… எங்க போப்போறேன். உங்கப்பன் கிட்டதான் பேசிக்கிட்டிருப்பேன்” என்று சொல்லிவிட்டு படியை விட்டு இறங்கி வீட்டை ஒட்டிய தொழுவத்தின் வழியாகப் போனார்.
எனக்கு ஒரு கணம் வீட்டின் உள்ளே போவதா அல்லது இங்கேயே நிற்பதா என்று குழப்பமாக இருந்தது.
தாத்தா செத்துப்போனவுடனே நான் அவரை மறந்திருக்கிறேன். எத்தனை முறை என்னைத் தோளில் தூக்கிக்கொண்டு நடந்திருக்கிறார்? தாத்தாவும் அவரும் இதே கொட்டகையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததை எத்தனைமுறை கேட்டிருக்கிறேன். அவர் மருந்துகள் வைத்திருக்கும் தோல்பையின் நிறம் கூட இப்போது நினைவுக்கு வந்தது.
வீட்டின் உள்ளே நடந்தேன். கொல்லைப்புறம் போய் அவர்களது உரையாடலில் கலந்து கொள்ளலாம் என்று தோன்றியது. கூடம், அதற்கடுத்த அறை, சமையலறை என்று நீண்ட வீட்டைக் கடந்து கொல்லைப்புற வாசலில் நின்று மரத்தடியைப் பார்த்தபோது, அப்பா மட்டும்தான் சேரில் உட்கார்ந்திருந்தார்.
எப்பா… வைத்தியர் தாத்தா வந்தாரே எங்க?
”அவுரு எங்க இங்க வந்தாரு” என்றார் அப்பா தலையத் திருப்பாமலே.
மீண்டும் அறைகளைக் கடந்து உள்ளே வந்து கூடத்தின் சன்னல் வழியாகப் பார்த்தால் தாத்தா தொழுவத்திலேயே நின்று கொண்டிருந்தார். அதன் ஏறவானக் கழியைப் பிடித்துக்கொண்டு தரையைப் பார்த்து குனிந்து நின்றிருந்தார். இரண்டு கைகளும் கூரையின் மூங்கில் கழியை வலுவாகப் பற்றியிருக்க, உடல் லேசாக அசைந்துகொண்டிருந்தது. வாய் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்தது.
அது தவம் செய்வது போல இருந்தது. ஏதோ ஒரு வாசத்தை உள்ளிழுத்துக் கொள்வதைப்போல. தன்னை எதற்குள்ளோ கரைத்துக்கொள்வது போல. அந்நேரம் தாத்தா ஒரு குழந்தையைப் போல தோன்றினார். சிரிப்பு வந்தது எனக்கு. என்ன தாத்தா பண்ணுறீங்க என்று குரல் கொடுத்தேன்.
எங்கிருந்து குரல் வருகிறது என்று பிடி கிட்டாமல் ஒரு கணம் தடுமாறியவர், சன்னல் வழியாக என்னைப் பார்த்துவிட்டு, ஒண்ணும் இல்ல, சும்மா எரவானத்தப் புடிச்சிகிட்டு நின்னேன், வேறென்ன என்று கையைத் தளரவிட்டார்.
வெட்கப்படுபவர் போல் தோளில் கிடந்த துண்டை எடுத்து, வாயின் ஓரத்தில் ஒற்றிக்கொண்டு தம்பீ… என்று அப்பாவை அழைத்துக்கொண்டே மரத்தடியை நோக்கி நடந்தார். அவரது செய்கை விசித்திரமாகத் தோன்றினாலும், அதன் பின்னுள்ள துயரத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.
இந்த வீட்டில் அவரது இடமென்பது இந்தக் கைவிடப்பட்ட கட்டுத்தரைதான். இந்த வீட்டின் மீது அவருக்கு இருக்கும் பாத்யதைக்குப் பின்னுள்ள பிடிப்பு வேறு எதுதான். இந்த மாட்டுக்கொட்டகையும் அங்கிருந்த மாடுகளும்தானே.
அவர் வைத்தியத்துக்காக மாட்டைப் படுக்க வைக்கும் விதமே அவ்வளவு ரசனையாக இருக்கும். முன்னங்கால்களை ஒட்டி மாட்டின் உடலைச் சுற்றி கயிறைக் கட்டி ஒரு முனையை அதன் உடலோடு அணைத்துப் பிடித்துக்கொண்டு மறுமுனையை மெல்ல அழுத்தம் கொடுத்து இழுத்தால், ஒரு குழந்தை சாய்வது போல எவ்வளவு பெரிய மாடும் தரையில் சாயும். பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் அதைச் செய்வதற்கு வலு வேண்டும். பக்கவாட்டில் சாயும் மாட்டைத் தாங்கும் வலு. மெல்ல அதை சமநிலைக்குக் கொண்டு வரத் தேவைப்படும் வலு.
உழவு மாட்டுக்கோ வண்டி மாட்டுக்கோ மூச்சுப் பிடித்துக்கொண்டால், மாட்டைப் படுக்கவைத்து அதன் கழுத்தை ஒட்டியப் பகுதியில் பல்லால் கடித்துத் தூக்குவார். தனது தொண்டை நரம்புகள் புடைக்க அவர் அதைச் செய்யும்போது ஒளிரும் அவரது கண்களை எப்படி இத்தனை வருடம் மறந்து போனேன் என்பது ஆச்சர்யமாக இருந்தது.
வைத்தியம் முடிந்து, மருந்தெல்லாம் கொடுத்து மாட்டின் கண்ணில் கொஞ்சம் பச்சிலைச் சாந்தை அப்பிவிடுவார். எரிச்சல் தாங்காமல் கண்ணில் நீர் வடிய மணிக்கணக்காக முளைக்குச்சியை சுற்றிச் சுற்றி வரும் மாட்டைக் காண பாவமாக இருக்கும்.
என்ன பண்ணுறது, கொஞ்ச நேரம் எரிச்சல பொறுத்துதான் ஆகணும், அப்புறம் மூச்சு புடிப்ப வச்சுகிட்டு எப்படி ஒழவடிப்ப, வண்டி இழுப்ப என்று அதட்டலாகப் பேசிக்கொண்டே அதன் உடல் மீது கையைத் துடைத்துக்கொள்வார்.
மாடென்பது அவருக்கு வெறும் விலங்கல்ல என்று இப்போது தோன்றுகிறது. இந்த வீட்டில் அவரைப் பிணைத்திருந்த கண்ணி அது. தாத்தா உயிரோடு இருந்திருந்தால் அந்தக் கண்ணி அறுபடாமல் இருந்திருக்குமோ என்னவோ.
தாத்தா சாகும் வரை அந்தக் கொட்டகையில்தான் படுத்திருந்தார். இரண்டு மூன்று வேட்டிகளை பெஞ்சின் மேல் ஒன்றன் மீது ஒன்றாகப் போட்டு மெத்தை மாதிரி விரித்து அதில்தான் படுத்திருப்பார். அவரது படுக்கையில் பிரத்தியேக வாசம் இருக்கும். தாத்தாவின் வியர்வையை உறிஞ்சி உறிஞ்சி அந்த வேட்டிகள் தனக்கான வாசத்தை உருவாக்கி எனக்குத் தந்திருக்கின்றன என்று இப்போது தோன்றுகிறது.
பகல் நேரத்தில் மாடுகள் தென்னை மர நிழலில் கட்டப்பட்டிருக்கும்போது, அந்த பெஞ்சில் படுத்தால் நம்மைத் தனித்துவிட்டதைப்போல் இருக்குமே என்பதெல்லாம் இப்போது ஞாபகம் வந்தது.
இப்பொழுது மாட்டுத் தொழுவம் டூ வீலர்கள் நிறுத்தும் இடமாக, வீட்டின் வேண்டாத சாமான்கள் போட்டு வைக்கும் மூலையாக ஆகியிந்தது. பழைய நினவுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆவியாகி இல்லாமலாகி விட்டிருக்கிறது. இல்லை, அப்படி இல்லை. இல்லாமலாகி விடவில்லை. தூசி படிந்து கிடந்திருக்கிறது. கிழவரின் வருகை அந்தத் தூசியை ஊதி நீக்கிவிட்டிருக்கிறது, அவ்வளவு தான்.
நான் மீண்டும் தொலைக்காட்சியில் லயிக்கத் தொடங்கியவுடன் நேரம் போனது தெரியவில்லை. சிணுங்கிக்கொண்டிருக்கும் மகனோடு மனைவி எழுந்து வெளியே வந்தாள். இவனைக் கொஞ்ச நேரம் தாத்தாகிட்ட குடுத்துட்டு வாங்க என்று குழந்தையைக் கொடுத்தாள். நான் அவனைத் தூக்கிக்கொண்டு கொல்லைப்புறம் போனேன்.
ஏய், வா… வா… வா… என்று தாத்தாதான் வந்து அவனை வாங்கிக்கொண்டார். அவனுக்கும் அவரைப் பார்த்தவுடன் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. கிர்ர் கிர்ர் என்று சிரித்தான். அந்த சிரிப்பைக் கேட்டவுடன் பேரானந்தம் கிழவருக்கு. நான் உள்ளே வந்துவிட்டேன். அப்பாவும் தாத்தாவும் சத்தமாகச் சிரிக்கும் சத்தம் உள்ளறை வரை கேட்டது.
எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. விழிப்பு வந்தபோது நீண்ட நேரம் ஆகிவிட்டிருந்தது. தாத்தா போயிருந்தார். சாப்பிட்டாரா என்று கேட்டேன். சாப்பிட்டார் என்று சொன்னாள் மனைவி. எப்போது போனார், என்னை எழுப்பியிருக்கலாமே என்று கேட்டபோது, உங்களுக்குத்தான் தூக்கத்துல எழுப்பினா பிடிக்காதே, அதான் எழுப்பல என்றாள். அவள் மீதொரு கசந்த பார்வையோடு எழுந்து முகம் கழுவப் போனேன்.
இரவு உணவின் போதுதான் அப்பாவிடம் கேட்டேன், தாத்தா எந்த ஊருப்பா என்று. அவர் சொன்ன ஊர் இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் இருக்கும்.
நீ ஒரு தடவை கூட அவரைப் போய் பார்த்ததில்லையா என்று கேட்டபோது தாத்தா மட்டும்தான் அந்த ஊருக்குப் போயிருக்கிறார், நான் போனதே இல்லையென்று சொன்னார்.
நீ ஏம்ப்பா ஒரு தடவை கூட அவரைப் பாக்க போகல என்ற கேள்விக்கு அப்பாவிடம் பதிலில்லை.
எனக்கு இன்னும் நான்கு நாட்கள் தான் லீவ் மிச்சமிருக்கிறது. எல்லா லீவிலும் செய்வது போலவே, வேலைகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்து கடைசி மூன்று நாளில் செய்வதற்கு நிறைய வேலைகளைக் காக்க வைத்திருந்தேன். என்றாலும் மனதில் எங்கோ ஓர் ஓரத்தில் அவரைப் போய் பார்த்துவிட்டு வர வேண்டும் என்று தோன்றியது.
ஊருக்குப் போவதற்கு முதல் நாள்தான் செல்வதற்கு வாய்த்தது. டூ வீலரில் போவதற்கு எளிதாகத்தான் இருந்தது. வழியெங்கும் வயல் வெளி. விளைந்த நெல் அறுவடைக்குத் தயாராகி நிற்கும் பருவம்.
ஊரின் தலைப்பிலேயே ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. இரண்டு கிழவர்கள் கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு ரோட்டைப் பார்த்து அமர்ந்திருந்தார்கள். கோவிலையொட்டி இருந்த வேப்பமர நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு, இறங்கிப் போய் வைத்தியர் தாத்தாவைப் பற்றி விசாரித்தேன். அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது. அவரது பெயரே எனக்குத் தெரியவில்லை. பெருசுகளும் அவரது பெயர் என்னவென்று கேட்கவில்லை. வைத்தியர் என்றதும் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.
இன்னும் இரண்டு தெருக்களைத் தாண்டிப் போக வேண்டியிருந்தது. தெருவைக் கடந்தவுடன் தாத்தாவின் வீட்டுக்குச் செல்லும் வழி ஒரு பெரிய வரப்பைப் போல் இருந்தது. மாட்டு வண்டிகள் செல்லும் அளவுக்கு அகலமாக இருந்தது. அந்தத் தெருவில் மிகவும் சொற்பமான வீடுகளே இருந்தன. ஆங்காங்கே ஒன்றிரண்டு கான்க்ரீட் வீடுகளும், ஓட்டு வீடுகளும் இருந்தன. “அதுதான் வைத்தியர் வீடு” என்று அவர்கள் கைகாட்டிய இடத்தில் ஒரு சிறிய கூரை வீடு இருந்தது. வீடென்று சொல்வது கூட கொஞ்சம் அதிகப்படுத்திச் சொல்வது போல. கூரைக் கொட்டகை அது. அதன் வாசலில் சிறிய புங்கமரம் ஒன்று இருந்தது. வீட்டைச் சுற்றி மூங்கில் முள்ளாலான வேலி.
படலைத் திறந்துகொண்டு உள்ளே போனால், சிறிய வாசற்கதவு சாத்தியிருந்தது. தாத்தா… தாத்தா… என்று அழைத்துக்கொண்டே கதவைத் தள்ளினேன். திறந்து கொண்டது. உள்ளே போகலாமா என்று ஒரு கணம் தயங்கினேன். அட… நம் தாத்தா வீடல்லவா இது என்ற நினைவு எனது தயக்கத்தைப் போக்கி உள்ளே செலுத்தியது.
நொய்ந்த கூரையை ஊடுருவிய சூரியக்கதிர்கள் வீடு முழுக்க வட்ட வட்டமான காசுகளை விசிறி வைத்திருந்தது. அந்த வெளிச்சத்தில் ஒரு சிறிய கட்டிலும், கொஞ்சம் தட்டு முட்டுச் சாமான்களும், சிறிய மண் அடுப்போடு கூடிய தடுப்பும் கண்ணுக்குப் பட்டது. தாத்தா வீட்டில் இல்லை.
கொல்லைக்கதவைத் திறந்தால் சிறிய கைப்பம்பு ஒன்று இருந்தது. அதையொட்டி, அம்மியொன்று கிடந்தது. பயன்படுத்தி வருடங்களாகியிருக்கும் என்று பார்த்தவுடன் தெரிந்தது. மீண்டும் வீட்டின் உள்ளே போய், இரண்டு கதவுகளையும் மூடி வைத்துவிட்டு வெளியே வந்தேன்.
பக்கத்து வீட்டிலிருந்து வெளியே வந்த பெண்ணொருத்தி, என்னிடம் வேறெந்தக் கேள்வியும் கேட்காமல் வைத்தியரு இவ்ளோ நேரம் இங்கதான் இருந்தாரு, இப்பதான் தோ குளத்துக்கரை பக்கமா போனாரு… என்று சொல்லிவிட்டு, வெளியில் கிடந்த விறகுகளில் கொஞ்சத்தை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள்.
நான் வண்டியின் மீது அமர்ந்து தெருவை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.
தாத்தாவுக்கு யாருமே இல்லை என்ற நினைவு துயரத்தைக் கூட்டியது. பக்கத்துக்கு வீடுகளில் கூட அவரிடம் அனுசரணையாக இருப்பதற்கு ஆட்கள் இருக்காது போலவே.
புகை பிடிக்க வேண்டும் போல இருந்தது. எப்படியும் இந்தத் தெருவில் ஒரு பெட்டிக்கடை இருக்கும், வாங்கலாம் என்று நினைத்து வண்டியிலிருந்து காலை கீழே வைத்தபோது தாத்தா தூரத்தில் வந்துகொண்டிருப்பது தெரிந்தது.
தெருவில் ஆட்கள் நடமாட்டமே இல்லை. இரண்டு பக்கமும் நெடிய படல்களும், வேலிக்கால்களில் நடப்பட்டு வளர்ந்திருந்த பசிய மரங்களுக்கிடையில் தாத்தா நடந்து வருவது ஒரு சித்திரத்தைப் போல இருந்தது. தனிமையின் செறிவு கூடிய ஒற்றைச் சித்திரம்.
வைத்த கண் வாங்காமல் அவரைப் பார்த்துக்கொண்டே நின்றேன். கொஞ்சம் நெருங்கியவுடன் தனது வீட்டு வாசலில் நிற்கும் வண்டியையும், புதிய ஆள் ஒருவன் நிற்பதையும் தாத்தா கவனிப்பது அவரது நடையில் தெரிந்தது. நெருங்க நெருங்க அவரது நடையின் வேகம் கூடியது. மிகவும் பக்கத்தில் வந்தபிறகுதான் வந்திருப்பது நானென்று அவருக்குத் தெரிந்தது.
ஏய், வாய்யா வாய்யா என்று கைகைளைப் பற்றிக்கொண்டார். கொஞ்சமாக வேர்த்திருந்த ஈரக்கைகளை நானும் அழுத்தமாகப் பற்றிக்கொண்டேன்.
ஏன்ய்யா இவ்ளோ தூரம் வந்திருக்க? வெளில ஏன் நிக்கிற? உள்ள போயி கட்டில்ல உக்கார வேண்டியது தான என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்து உள்ளே போனார். நான் தொடர்ந்தேன்.
தோளில் கிடந்த துண்டை எடுத்து, கட்டிலின் மீது கிடந்த போர்வையின் மீது தட்டிவிட்டு உட்காரு என்றார். நான் உட்கார்ந்தவுடன் அவரும் உட்கார்ந்து கொண்டார்.
எங்கள் இருவருக்கும் பேசுவதற்கு ஒன்றுமே இல்லையென்பது அபத்தமாகத்தான் இருந்தது. நான் அதிகமாக நெகிழ்கிறேன் என்பது எனக்கே தெரிந்தது. தாத்தாவைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. இத்தனை நாட்களாக நான் அவரைக் கைவிட்டிருக்கிறேன் என்பது குற்றவுணர்வைக் கூட்டி என்னைப் பேச முடியாமலாக்கி விட்டிருந்தது. கூரை, அடுப்படி, கொல்லைப்புறம் என்று நான் பார்வையை ஓட்டினேன்.
தண்ணி குடிக்கிறியா என்று கேட்டார். இல்ல தாத்தா வேணாம் என்று அவரிடம் சொன்னேன். இருந்தாலும் எழுந்து சென்று, மண் குடத்தில் இருந்த தண்ணீரை மொண்டு குடித்தேன். அண்ணாந்து குடிக்கும் போது முகத்தில் குவிந்த சூரிய வெளிச்சம் கண்ணை மூட வைத்தது.
அவருக்கும் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொடுத்தேன். குடித்துவிட்டு குனிந்து சொம்பைக் கீழே வைத்துவிட்டு தாத்தா திரும்பி எனது முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தார். கி…கி…கி… என்று அவர் சிரிக்கும் சிரிப்பைக் கேட்க வேண்டும் போல இருந்தது எனக்கு.
உனக்கு ஊருக்குப் போக இன்னும் எத்தன நாள் இருக்கு என்று கேட்டார். நாளைக்குப் போகணும் என்றவுடன், ஓ அப்படியா என்றார்.
அவரிடம் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக, நான் செய்யும் வேலை, அந்த நாட்டைப் பற்றியெல்லாம் நிறைய சொல்லிக்கொண்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக தாத்தா சகஜமாகிக் கொண்டிருந்தார். நிறைய கேள்விகள் கேட்டார். படல் திறந்திருந்ததால், வீட்டின் உள்ளே வந்து எட்டிப்பார்த்த ஆடு ஒன்றை துண்டால் விசிறி ஓட்டிவிட்டு மீண்டும் வந்து அமர்ந்துகொண்டு, என்னிடம் கதை பேசத் தொடங்கினார்.
ஏன் தனியாக இருக்கிறீர்கள், சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்கவேண்டும் எனத் தோன்றியது. மிக எளிய கேள்விகள்தான் அவை. ஆனால் என்னால் அதைக் கேட்கவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் மனதுக்குள் ஒத்திகை பார்த்தபடி, அக்கேள்விகளின் தொனியில் திருப்தியுறாமல், கேட்காமல் நிராகரித்துக்கொண்டே இருந்தேன்.
தாத்தா மாட்டு வைத்தியத்தில் நிகழ்ந்த சுவராசியமான சமபவங்கள் பலவற்றைச் சொல்லி சிரிக்கத் தொடங்கினார். அடிக்கடி, உன் தாத்தன் என்ன பண்ணினான் தெரியுமா என்றும் சொல்லிக்கொண்டே இருந்தார். சோகத்தை உள்ளூர வைத்துக்கொண்டு வெளியில் சிரிக்கும் சிரிப்பல்ல அது. மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார். நான் அவர் மீது அவசியமற்ற பரிதாபம் கொண்டு அவரை சிறுமைப்படுத்துகிறேன் என்று கூட ஒரு கணம் தோன்றியது.
அப்போது தான், “தாத்தா, நீங்கள் கல்யாணம் பண்ணிகிட்டீங்களா இல்லையா” என்று கேட்டேன். ம்ம்… பண்ணிக்கிட்டேன் பண்ணிக்கிட்டேன். அது இல்லாமலா. ஒரு ஏழெட்டு வருஷம் அவ கூட வாழ்ந்திருப்பேன்.
அப்புறம்?
அப்புறம் என்ன அப்புறம்… அவ செத்துப் போய்ட்டா. இப்ப நடந்த மாதிரி இருக்கு. அவ செத்தே நாப்பது வருசத்துக்கு மேல ஆச்சு. அதைச் சொல்லும்போது அவரது குரலில் துளி வருத்தம் இல்லை. அது வெறும் தகவல் என்பது போல பகிர்ந்து கொண்டார்.
நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் கிளம்பலாம் என்று தோன்றியது. நான் கிளம்பவா தாத்தா என்று கேட்டபோது, “சரிய்யா, பாத்து பத்திரமா போ” என்று சொன்னார். எந்த துக்கமுமற்ற, கோரிக்கைகளற்ற அழுத்தமான குரல்.
நான்தான் கொஞ்சம் தடுமாறினேன். அவருக்குத் தருவதற்காக எடுத்து வந்திருந்த பணத்தைத் தரலாமா வேண்டாமா என்று தயக்கமாக இருந்தது.
‘’பாத்து… குனிஞ்சி வெளில வா’’ என்று சொல்லிவிட்டு அவர் முதலில் வெளியேறினார். நான் என்னிடம் இருந்த மொத்தப் பணத்தையும் எடுத்துக் கட்டிலில் வைத்துவிட்டு வெளியே வந்தேன்.
நான் வண்டியை நெருங்கியபோது தாத்தா ஏதோ நினைத்துக்கொண்டவரைப் போல மீண்டும் உள்ளே போனார். வரும்போது அவரது கையில் சிறிய பாட்டில் இருந்தது. அதனுள்ளே பச்சை வண்ணத்தில் திரவம் இருந்தது. அதை என்னிடம் கொடுத்துவிட்டு, அன்னைக்குப் புள்ளையை பாத்தேன்ல, நெஞ்சுச் சளி நிறைய இருந்துச்சு. இதெல்லாம் பச்ச புள்ளைவோளுக்கு வர்றது தான். இந்த மருந்தை பஞ்சுல தொட்டு ராத்திரில மட்டும் நெஞ்சில தடவி விடு. பயப்படாத… என்னடா தாத்தா மாட்டுக்கு வைத்தியம் பாக்குறவனாச்சே புள்ளைக்கு மருந்து தர்றானேனு.
“இத நானும் தடவிக்கலாமா தாத்தா” என்ற போது, அதுவொரு பெரிய நகைச்சுவையைப்போல கி…கி…கி… என்று சிரித்தார்.
அவரது சிரிப்பை ஊடுருவிக் கொண்டே, ”நாம மாடு வாங்கலாமா தாத்தா. அப்பா பாக்கலைனா என்ன, நாம ஆளு வச்சு பாத்துக்கலாம்” என்றேன்.
‘’இல்லடா… வேணாம்…’’ என்றார்.
”இல்லைன்னா இப்படிப் பண்ணலாமா தாத்தா, நீங்களும் நம்ம வீட்டுக்கே வந்திடுங்க. நீங்களே பாத்துக்கங்க” என்று சொன்னேன். எனது குரல் ஒரு சிறுவனுடையதைப் போல தோன்றியது எனக்கு.
”எனக்கு வைத்தியம் பாக்க மட்டும் தாண்டா தம்பி தெரியும். மாடு கன்னெல்லாம் வளர்க்க வராது” என்றார். அது எல்லாவற்றுக்குமான பதிலைப் போல இருந்தது. அந்தத் தெருவைக் கடக்கும் வரை வண்டியின் கண்ணாடியில் தாத்தா தெரிந்து கொண்டே இருந்தார்.