காலையில் நடைப்பயிற்சியை முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். மணி ஒன்பதரை. அப்போது எடிட்டர் லெனினிடமிருந்து ஃபோன். நேற்றுதான் கொஞ்சம் குற்ற உணர்ச்சியோடு நினைத்தேன், இன்னும் லெனின் சாருக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லையே என்று. இன்று எப்படியும் கொடுத்து விட வேண்டும் என்றும் உறுதி எடுத்துக் கொண்டேன். வழக்கம் போல் மறந்து போனேன். பழுப்பு நிறப் பக்கங்களுக்காக ஆதவனைப் படித்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். உடனே ஆட்டோவை நிறுத்தி விட்டு, ”கிளம்பி நான் பார்க்குக்கு வரவா, அங்கே வந்து விடுகிறீர்களா? உங்களுக்கு நான் அழைப்பிதழ் கொடுக்க வேண்டும்” என்று கேட்டேன். எனக்கும் உங்களுக்கு ஒரு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும். நானே வருகிறேன், வீடு எங்கே சொல்லுங்கள் என்றார். அரை மணி நேரத்தில் வந்தார். பப்பு, ஸோரோவை அறையில் போட்டு அடைத்து விட்டு லெனினை வரவேற்றேன். அவந்திகா தோட்டத்துச் செடி கொடி மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். கீழே நிறைய மாவடுக்கள் கொட்டிக் கிடந்தன. ஆ, மாவடு என்றார். இன்னும் இரண்டு மாதத்தில் பழங்களாகக் கொட்டும் சார் என்றேன். ஒன்றிரண்டை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார்.
ஒரு மணி நேரம் பேசினோம். அவகாதோ பழம், வால்நட், அத்திப்பழம் மூன்றையும் பெரிய பை நிறையக் கொடுத்தார். எனக்கு உள்ளே கலங்கி விட்டது. அசோகமித்திரனுக்குப் பிறகு நான் மதிக்கும் மிகப் பெரிய ஆளுமை லெனின். ஏன் என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அவர் ஒரு மகான், மகாத்மா. ஐயோ நான் அல்லவா உங்களைப் பார்த்து இதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்று குழறினேன். ஒரு மணி நேரம் சென்று கிளம்பினார். 12 B பஸ் ஸ்டாப் எங்கே இருக்கு என்றார். திசை காட்டினேன். கூடவே போய் ஏற்றி விட முடியவில்லை. பப்பு ஸோரோ இன்னும் காலைக்கடன் கழிக்காமல் உள்ளே கிடந்தன. அபாயம். அவர் கையில் பெரிய மூட்டை வேறு. அது என்ன மூட்டை என்று ஃபெப்ருவரி 27 அன்று வெளியீட்டு விழாவில் சொல்கிறேன். அது ரொம்ப ரொம்பப் பெரிய விஷயம்.
இதைக்கூட எழுத வேண்டாம், வெளியீட்டு விழாவிலேயே பேசலாம் என்றுதான் நினைத்திருந்தேன். இப்போது பத்து நிமிடம் முன்புதான் லெனின் அவர்களிடமிருந்து ஃபோன் வந்தது. இங்கே பாஃப்டாவில் இருக்கிறேன். மாவடு பிரமாதமாக இருக்கிறது. கூட இருப்பவர்கள் என்ன இது அற்புதமான வாசனை என்று கேட்கிறார்கள். கேரளத்தில் இதை கன்னி மாங்கா என்பார்கள். என்று சொல்லி எளிமையான மாவடு ஊறுகாய் போடும் முறையையும் சொல்லிக் கொடுத்தார்.