ரங்கநாதன் கோதண்டராமனின் முகநூல் பதிவு:
எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் புத்தக(ங்கள்) வெளியீட்டு விழா அழைப்பிதழ் மின்னஞ்சலில்.
ஒவ்வொரு ஆண்டும் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற முனைப்பிலேயே கழிந்து, இறுதியில் கலந்து கொள்ள முடியாமலேயே போய்விடும். இந்த ஆண்டும் அப்படித்தான் (சனிக்கிழமையாய் இருந்தும்).
சாரு எழுதிய புத்தகங்களை உடனே வாங்க வேண்டும் என முனைந்ததில்
அறம் பொருள் இன்பம் (அந்திமழை)
கடைசிப் பக்கங்கள் (கிழக்கு)
பழுப்பு நிறப் பக்கங்கள் (கிழக்கு)
இன்று தபாலில் வந்து சேர்ந்து விட்டன.
அந்திமழை வெளியீட்டான அறம் பொருள் இன்பம் (கேள்வி-பதில்) படிக்கும்போது, சாருவின் மீதான மதிப்பு கூடத்தான் செய்கிறது (என் அபிமான தலைவர் படம் லிங்காவைப் போட்டுத் தள்ளினாலும் கூட .
சாதாரண கேள்விகளுக்கும் தன்னை தயார் செய்துகொண்டு ரொம்பவும் சின்ஸியராகப் பதில் சொல்கிறார். எல்லாவற்றிற்கும் பதில் இருக்கலாம். ஆனால், சாருவின் கோணம் நம்மை வேறு தளத்திற்கு இட்டுச் செல்கிறது.
தன்னை ட்ரான்ஸ்கிரஸிவ் என்று பிரகடனப் படுத்திக் கொள்கிறார். பெருமாள் முருகனைச் சாடுகிறார். பிராமணர்களும் தலித்துகளும்தான் இன்று புறக்கணிப்பட்டவர்கள் என்கிறார். உலக எழுத்தாளர்களைப் பட்டியிலிடும் அதே நேரத்தில் சங்க இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி ஆச்சரியப் படுத்துகிறார். அவித்த முட்டை எப்படியிருக்க வேண்டும் என்பதையும் எழுத முடிகிறது. அக்கார வடிசல் எங்கு நன்றாயிருக்கும் என்பதையும் எடுத்துக் கொடுக்க முடிகிறது. வேப்பிலைக்கட்டி தயாரிப்பது எப்படி என்று கிளாஸ் எடுத்து, நம்மை ‘ஏ’ க்ளாஸ் போட வைக்கிறார். அவருக்குப் பிடித்த 10 சினிமாப் பாடல்களைப் படித்தபோது, ‘அட! நமக்கு இதில் 8 பிடித்திருக்கிறதே!’ என்று ஆச்சரியம்! ஊடே அவருக்குரிய நையாண்டி/பகடி கெடாமல் அப்படியே இருந்து, தெறிக்கிறது.
வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள இடைவெளி இத்தகைய கேள்விகள் கேட்பதால் குறைகிறது என்பது என் கருத்து. என்னைப் போன்ற கேள்விகள் கேட்காது, தூரத்தில் இருந்து எக்கச்சக்க மரியாதையுடன் நோக்கும் வாசகனுக்கும் இதைப் படிப்பதனால் எழுத்தாளனுடன் நெருக்கம் ஏற்படுகிறது என்பதுதான் சாருவின் சிறப்பு.
உங்கள் விழாவிற்கு வர முடியவில்லையே என்கிற ஏக்கம், ஏமாற்றத்துடன், உங்களைச் சந்தித்த போது, பயங்கலந்த மரியாதையினால், புகைப்படத்துடன் முடித்துக் கொண்டேனே என்கிற ஆதங்கமும் அறம் பொருள் இன்பம் படிக்கும் போது எனக்கு.
வாழ்த்துக்கள் சாரு!