மது அருந்துவதை நிறுத்தியதால்தான் என் உயிர் இப்போது என் வசம் இருக்கிறது. இல்லாவிட்டால் இந்நேரம் எனக்கு ஜெயமோகன் அஞ்சலிக் கட்டுரை எழுதியிருப்பார். ஒரு தனிப்பட்ட இலக்கிய விவாதத்தில் ஜெயமோகனின் நூறு சந்நிதானங்கள் என்ற கதையைப் பற்றி நான் விமர்சித்ததும் ஒருவர் என்னை அடிக்க வந்தார். தன் இருப்பிடத்திலிருந்து எழுந்து ஆவேசமாக என்னை நோக்கி மிக மிக அசிங்கமான வசை வார்த்தைகளைப் பிரயோகித்தபடி வந்ததை, எனக்கு முத்தம் கொடுக்க வந்தார் என்றா புரிந்து கொள்ள முடியும்? அடிக்கத்தான் வந்தார். அடித்திருந்தால் அந்தக் கணமே என் உயிர் போயிருக்கும். ஆனால் அந்த நிலையிலும் நான் எந்தவிதப் பதற்றமும் அடையாமல் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரைப் போல் புன்னகை புரிந்தபடி, என் அன்புக்குரிய மகனே, போய் உன் இடத்தில் உட்கார் என்றதும் சூடு குறைந்து அவர் இடத்துக்குப் போனார். (நம்புங்கள், பேச்சு மொழியில் அப்படித்தான் சொன்னேன்.) மது அருந்தியிருந்தால் நானும் அவரைப் போலவே அசிங்க அசிங்கமாகத் திட்டியபடி சண்டையில் கலந்து கொண்டிருப்பேன். இப்போதைய என் உடல்நிலையில் அடி வாங்கி செத்தும் போயிருப்பேன். கடந்த 40 ஆண்டுகளாக எனக்கு அப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறது. என்னை குப்பை என்று கருதுகிறவர்களோடு மட்டுமே மது அருந்திக் கொண்டும், இலக்கியம் பேசிக் கொண்டும் இருக்க வேண்டியிருக்கும் தலைவிதி எனக்கு வாய்த்திருக்கிறது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாகத்தான் வாசகர் வட்டம் வந்ததும் இந்த நிலைமையிலிருந்து மீண்டேன். ஆனால் மீண்டும் ஒருமுறை அப்படி ஆனது. மதுவை விட்டதால் என் உயிர் பிழைத்தது. யாரும் யாரையும் தங்களுடைய ஆசானாகக் கொள்ளலாம். ஆனால் நாம் குப்பை என்று நினைக்கும் ஒருவரோடு ஒன்றாக அமர்ந்து பேசுவதும் இலக்கியம் விவாதிப்பதும்தான் பிரச்சினையாகி விடுகிறது. இனிமேல் ஜெயமோகனை ஆசானாகக் கொண்ட யாரோடும் இலக்கிய விவாதம் செய்வதில்லை என்று வேண்டிக் கொள்கிறேன். காரணம், ஜெயமோகனை ஆசானாகக் கொண்ட யாராலாவது கொல்லப்படுவேன் என்று நிஜமாகவே அஞ்சுகிறேன். அன்று இரவு விவாதத்தின் போது அந்த நண்பர் வசை வார்த்தைகளை ஆவேசமாக உதிர்த்தபடி எழுந்து வந்ததை வாழ்நாள் பூராவும் மறக்க மாட்டேன். இவ்வளவுக்கும் நான் சொன்னது ஒரு தத்துவார்த்தப் பிரச்சினை. நூறு சிம்மாசனங்களில் என்ன பிரச்சினை என்பதையே நான் விளக்கினேன். அது ஏன் அத்தனை பேருக்கும் பிடித்திருக்கிறது என்பதையே நான் கட்டுடைப்பு செய்தேன். ஏனென்றால், நான் கேரளா சென்ற போது நூறு பேராவது அந்தக் கதை பற்றி என்னிடம் பேசினார்கள். அது ஒன்றும் மொழிபெயர்ப்பு அல்ல; மலையாளத்திலேயே எழுதினது என்றும் சொன்னார்கள். மூன்று லட்சம் பேர் படித்திருப்பதாகவும், ஏழெட்டு பதிப்பகத்தார் அதை வெளியிட்டிருப்பதாகவும் சொன்னார்கள். அந்தக் கதையில் என்ன பிரச்சினை என்பதை இலக்கியரீதியாக, தத்துவார்த்தமாக விளக்கினாலே உன்னைக் கொல்லுவேன் என்று எழுந்தால் இங்கே சினிமாவைப் போல் இலக்கியமும் மதமாக மாறி விட்டது என்றே புரிந்து கொள்கிறேன்.
என் உயிர் பற்றி இப்போது கவலைப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். தேவையெனில் என் பாதுகாப்புக்கு மெய்க்காவலர்கள் வைத்துக் கொள்ளலாமா, அதற்கு வேண்டிய ஐவேஜி எனக்கு இருக்கிறதா என்றெல்லாம் கவலையாக இருக்கிறது. ஒரு எழுத்தாளனை உயிருக்கு அஞ்சும்படி செய்வதுதான் நீங்கள் ஜெயமோகனுக்குக் காட்டும் மரியாதையா? ஜெயமோகன் இதை விரும்புவாரா? ஜெயமோகன் பல காலமாகப் பேசி வரும் அறம் என்பதை இப்படித்தான் நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா?
சரி, காலை ஆறரை மணியிலிருந்து எட்டு வரை மைலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில்தான் நடைப் பயிற்சி செய்கிறேன். வந்து கொல்லுங்கள். என்ன, ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும். ஏழு ஆண்டுகள் உள்ளே இருக்க வேண்டியிருக்கும். அதற்கும் தயார் என்றால் செய்யுங்கள். நான் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தை எழுதப் பழக வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால் உங்கள் கையால் சாவு வர இருக்கிறது என்று ‘மேலே’ எழுதி வைத்து விட்டால் யார் அதைத் தடுக்க முடியும்? தாராளமாகச் செய்யுங்கள். நான் தயாராக இருக்கிறேன்.