முதல் பதிவைப் படித்து விட்டு எனக்கு ஜெ. மீது பொறாமை என்று யாரும் நினைத்து விட வேண்டாம். ஏற்கனவே என் பேச்சில் கூறியபடி ஜெயமோகனோ எஸ். ராமகிருஷ்ணனோ எனக்குப் போட்டியாளர்கள் அல்ல. நான் போட்டியாளர்களாக நினைப்பது ஓரான் பாமுக்கையும் ஸல்மான் ருஷ்டியையும்தான். நான் சர்வதேச அளவில் வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த விருப்பதையும் மிக வெளிப்படையாகச் சொல்லி வருகிறேன். என்னிடம் எதுவுமே ஒளிவு மறைவு இல்லை.
பொதுவாகவே லட்சியவாதம் என்பது ஃபாஸிஸம் நோக்கித்தான் நம்மை இட்டுச் செல்லும். என்னைக் கொல்லத் துடிப்பவர்களின் லட்சியமும் லட்சியவாதம்தான் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஹிட்லரை விட பெரிய லட்சியவாதி யாரேனும் உண்டா?
ஜெயமோகன் மீது உங்களுக்கு விசுவாசம் இருந்தால் அதைத் தெரிவிக்க என்னைக் கொல்வதுதான் உத்தமமான வழியாக உங்களுக்குத் தோன்றுகிறதா நண்பரே? சரி, உணர்ச்சிவசப்பட்டு செய்திருக்கலாம். இன்றைய முகநூல் பதிவிலும் நண்பர் அந்த விஷத்தையே கக்கியிருக்கிறார். சாரு நிவேதிதா என்ற முட்டாளை, எழுதத் தெரியாதவனை, குப்பையை உங்கள் தேக பலத்தின் மூலமும், சொற்களின் மூலமும் காயப்படுத்துவன் மூலம்தான் ஜெயமோகன் மீதான் உங்கள் விசுவாசத்தைக் காட்ட முடியும் என்றால் அது மிகவும் பரிதாபகரமானது. இந்தப் பதிவுகளுக்கு நீங்களும் உங்கள் தொண்டர்களும் எப்படியெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு என்னைத் தாக்கப் போகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என் மீது காறிக் காறித் துப்பினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தண்ணீரில் என்னை சுத்தப்படுத்திக் கொள்ள எனக்குத் தெரியும். காறித் துப்புவதன் மூலம் உங்கள் அழுக்கு வெளியேறினால் அது போதும் எனக்கு. அதுதான் நான் உங்களுக்குச் செய்யும் நன்மை.
ஆனால் அறம் பேசுகின்றவர்கள் ஆயுதத்தை எடுப்பதுதான் இந்தக் காலகட்டத்தின் பிரச்சினையாக இருக்கிறது. அதுதான் என் எழுத்தின் கவனத்துக்குரிய விஷயமும். அறம் என்ற மகத்தான கோட்பாட்டை வலியுறுத்துபவனின் சீடன் ஏன் பலம் பொருந்திய தன் கரத்தையும் உடலையும் இன்னொருவனைக் கொல்ல ஆயுதமாகப் பயன்படுத்த நினைக்கிறான்? எப்படி அவனிடம் ஃபாஸிஸம் செயல்படுகிறது? இதெல்லாம்தான் என் கவனத்துக்குரிய விஷயங்கள். நூறு சந்நிதானங்கள் பற்றி நான் என்ன சொன்னேன் என்பது இப்போது அவசியம் இல்லாததாகப் போய் விட்டது.
எண்ணிக்கை தான் பெரிய விஷயம் என்றால் நாம் எல்லோருமே பொறாமைப்பட வேண்டியவர் ஜெயமோகன் அல்ல; ரமணி சந்திரன் தான். ஏதோ ஒரு இடத்தில் ஜெ. எழுதியிருந்தார், வெண்முரசின் வாசகர் எண்ணிக்கையில் நாலில் ஒரு மடங்கு கூட மற்ற எழுத்தாளர்களுக்கு இருக்காது என்று. இது நேரடியாக மற்ற எழுத்தாளர்களின் இடுப்புக்குக் கீழே கட்டையால் தாக்கும் செயல். ஆனால் எனக்கு அது ஆச்சரியமாக இல்லை. அறம் என்று பேசுபவர்கள் அனைவருமே இப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் இதில் உள்ள நகைமுரண் என்னவென்றால், மகாபாரதம்தான் எனக்கு அடக்கத்தைக் கற்பித்தது. மகாபாரதம்தான் எனக்கு பணத்தின் மீதும் புகழின் மீதும் பற்றற்ற தன்மையை வளர்த்துக் கொள்ளக் கற்பித்தது.
மகாபாரதத்தின் கடைசிப் பகுதி இது. பாண்டவர் மேரு மலை செல்கிறார்கள், சொர்க்கம் நோக்கி. முதலில் திரௌபதி இறந்து வீழ்கிறாள் (என்று நினைக்கிறேன்). ஏன் அவள் இறந்து விட்டாள் என்று பீமன் தர்மனைக் கேட்கிறான். நம் ஐவர் மீதும் சமமான அன்பு கொள்ள வேண்டிய அவளுக்கு அர்ச்சுனன் மீது அதிக அன்பு இருந்தது; அதனால்தான் இறந்தாள் என்கிறான் தர்மன். அடுத்து நகுலன் வீழ்கிறான். காரணம், அவனுக்குத் தான் ஒரு நிகரற்ற அழகன் என்று கர்வம்; அதனால்தான் சொர்க்கம் வரை வர முடியாமல் இறந்தான் என்கிறான் தர்மன். அடுத்து சகாதேவன். காரணம், அவனுக்கு சாஸ்திர ஞானத்தில் தன்னை வெல்ல யாரும் கிடையாது என்ற கர்வம். அடுத்து வீழ்வது அர்ச்சுனன். அவனுக்குத் தன் வில்வித்தையின் மீது கர்வம். தன்னை மிஞ்சிய வில் வித்தைக்காரன் இந்த உலகத்திலேயே கிடையாது. இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே பீமனுக்கு மயக்கம் வருகிறது. பலத்திலும் வீரத்திலும் தன்னை மிஞ்சியவன் இந்த உலகில் கிடையாது என்ற கர்வம் உனக்கு. அதனால்தான் உன்னாலும் சொர்க்கம் அடைய முடியவில்லை என்கிறான் தர்மன். மிஞ்சியது, தர்மனும் ஒரு நாயும்.
நான் அப்படி ஒரு நாயாகவே இருக்க விழைகிறேன். என்னை யாரும் படிக்க வேண்டாம். நகுலனை எத்தனை பேர் படித்தார்கள்? படித்துக் கொண்டிருக்கிறார்கள்?
வெண்முரசில் இந்தப் பகுதி ஆகச் சிறந்த முறையில் எழுதப்படும். எழுதிய அடுத்த கணமே, இப்படி எழுத என்னை விட்டால் இந்த உலகிலேயே யாரும் இல்லை என்றும் எழுதும். அதுதான் பின்நவீனத்துவமும் ஃபூக்கோவும் துவங்கும் இடம். அங்கிருந்துதான் நானும் எழுத ஆரம்பிக்கிறேன்…