சினிமா ரசனையைப் பொறுத்தவரை பிரபு காளிதாஸுக்கும் எனக்கும் நன்றாக ஒத்துப் போகிறது. நேற்று ’காதலும் கடந்து போகும்’ பார்த்தேன். இது பற்றி பிரபு எழுதியிருப்பது. “மரக்கன்றுகள் முறையான கைகளில் சிக்கினால் எவ்வளவு நல்லதோ அவ்வளவு அருமையாக சினிமா இளைஞர்கள் கையில் சிக்கியுள்ளது. மிகவும் சந்தோஷம்.
பின்னணி இசை, ஒளிப்பதிவு, சவுண்ட் டிசைன் எல்லாமே அற்புதம். விஜய் சேதுபதி படுபயங்கரம். அவர் உலக அரங்கை வெகுவிரைவில் நிச்சயம் தொடுவார். சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு இதில் நன்றாக நடித்துள்ளார். எடுத்தவுடன் வரும் நன்றி கார்டில் கருந்தேள் ராஜேஷ் பெயர். இனி சினிமா கொஞ்சம் தப்பித்துக்கொள்ளும்.”
படத்தைப் பார்த்த போது உலக சினிமா தமிழுக்கு வந்து விட்டது என்றே மகிழ்ச்சி அடைந்தேன். ‘விசாரணை’யில் பார்த்தது போல் எந்தவிதமான சமூக நீதி அஜால்குஜால் எதுவும் இதில் கிடையாது. அதுவே பெரும் ஆறுதலாக இருக்கிறது. சமீப காலமாகத்தான் தமிழ் சினிமா திரைக்கதை என்ற விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. இல்லாவிட்டால் காலம் காலமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு கதையை இவ்வளவு சுவாரசியமாக ஆக்க முடியாது. மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த, படித்த, மென்பொருள் துறையில் வேலை பார்க்கும் ஒரு வெள்ளைத் தோல் பெண், சொந்தமாக ஒரு ‘பார்’ வைக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு ரவுடியைக் காதலிக்கிறாள். இதுதான் கதை. இதை ஒரு நிமிடம் கூட அலுப்பு ஏற்படுத்தாமல் படு சுவாரசியமாகக் காட்சிப்படுத்துவதே திரைக்கதை. படத்தில் இது கனகச்சிதமாக அமைந்துள்ளது. ராஜேஷை தமிழ் சினிமா நல்ல முறையில் பயன்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.
படத்தின் மற்றொரு சிறப்பு அம்சம், சந்தோஷ் நாராயணின் இசை. தமிழ் சினிமாவில் இந்த இசை மிகவும் புதியது. புரட்சிகரமானது. இது போன்ற இசை தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததில்லை. மட்டுமல்லாமல் மகாதேவன், விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான் போன்றவர்களின் மூலம் தமிழர்கள் பழகி வந்த இசை ரசனையை முற்றிலும் தலைகீழாகப் புரட்டிப் போடுவதாக இருக்கிறது சந்தோஷ் நாராயணனின் இசை. மேலே குறிப்பிட்டுள்ள இசையமைப்பாளர்களின் தொடர்ச்சி அல்ல இது. இது வேறெங்கிருந்தோ வந்து நமக்கு இசையாக அறிமுகமான சப்தங்களைக் கலைத்துப் போடுகிறது. சில நண்பர்களோடு ஊட்டியிலிருந்து சென்னைக்குக் காரில் வந்து கொண்டிருந்தேன். காரில் இருந்த அத்தனை பேரும் ராஜாவின் இசைக்கு வெறித்தனமான ரசிகர்கள். வாயே திறக்க முடியாது. நானும் வேறு எதையெதையோ பேசிக் கொண்டு வந்தேன். மூன்று நான்கு மணி நேரம் சென்று காரின் இசையை நைஸாக ஏ.எம். ராஜாவுக்கு மாற்றினேன். உடனே உஷாராகி விட்டார் நண்பர் கண்ணன். அவர்தான் காரை ஓட்டிக் கொண்டு வந்தார். ஏ.எம். ராஜாவெல்லாம் கேட்கும் நேரம் இது அல்ல என்று சொல்லி விட்டு அவருக்குப் பிடித்த ராஜாவையே போட்டார். அப்போது ஏதோ பேச்சினிடையே மற்றொரு நண்பர் ராஜா தன் மகளுக்கு இளையராஜாவின் இசை பிடிக்காது; அதனால் அவளோடு காரில் போகும் போது கேட்க வேறு இசைத் தகடுகளை எடுத்துப் போவேன் என்றார். இசையில் நானும் அவருடைய மகள் தலைமுறையைச் சேர்ந்தவன்.
சந்தோஷ் அந்தத் தலைமுறைக்கான இசையைத் தருகிறார். இறுதிச் சுற்று படத்துக்கும் சந்தோஷ்தான் இசை. அதைப் பாராட்டி எழுதியிருந்த போது ஒரு வாசகி சந்தோஷ் பல மேல்நாட்டுப் படங்களிலிருந்து எடுக்கிறார் என்றும், உதாரணத்துக்கு ’மெட்ராஸ்’ படத்தின் தீம் மியூஸிக் In the Mood for Love என்ற படத்தின் தீம் மியூஸிக் என்றும் எழுதியிருந்தார்.
மெட்ராஸ்:
In the Mood for Love:
அப்படிப் பார்த்தால் எல்லா இசையமைப்பாளர்களுமே பிற மொழிப் படங்களிலிருந்து சர்வ சாதாரணமாக எடுக்கிறார்கள். ஆஸ்கர் விருது பெற்ற ரஹ்மானின் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தின் பாடல்கள் 60களில் வெளிவந்த இந்தி சினிமாப் பாடல்களின் அப்பட்டமான நகல். இது பற்றி அப்போதே பெரும் கூச்சல் எழுந்தது. என்ன செய்வது, சினிமா இசையில் இதெல்லாம் சகஜம் போல.
இவ்வளவுக்குப் பிறகும் சந்தோஷிடம் நான் பாராட்டும் அம்சம் என்னவென்றால், இதுவரையிலான சினிமா இசை ரசனையை மக்கள் ரசிக்கக் கூடிய வகையிலேயே தலைகீழாகப் புரட்டிப் போடுகிறார் என்பதுதான்.
இது போல் இசை ரசனையையே முற்றிலும் தலைகீழாக மாற்றிய இசையமைப்பாளர் என அமித் திர்வேதியை மட்டுமே சொல்ல முடியும்.
பங்காளி என்ற பாடல்:
க க க போ:
நாற்பது வயதுக்காரர்களின் இசை ரசனைக்கு எதிர்த் துருவத்தில் அலையும் பாடல் க க க போ. தமிழ் சினிமா இசையில் ஒரு புரட்சி.
போங்கு:
படத்தில் குறைகள் என்று பட்டது இரண்டு விஷயங்கள்: ஹீரோயின் முகம். மீண்டும் பிரபு காளிதாஸையே அழைக்கிறேன். ஹீரோயினைப் பார்த்த போது வேக வைத்து இறக்கிய கொழுக்கட்டையே ஞாபகம் வந்தது. பிரபுவும் அதையே எழுதியிருக்கிறார். ”மடோனா வேகவைத்து இறக்கிய கொழுக்கட்டை போல் இருக்கிறார். எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நடிப்பும் மொண்ணை. நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பல வருடங்களாக இந்த ஒரே முக ஜாடை ஏன் பிடிக்கிறது என்பது ஆய்வுக்குரியது.”
இன்னொன்று, இப்படி ஒரு கதை நம் தமிழ் வாழ்விலேயே கிடைக்காதா? இதற்காக கொரியா வரை போக வேண்டுமா என்ன?
மொத்தத்தில், தமிழ் சினிமாவில் நாம் வழக்கமாகப் பார்க்கும் ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்ததற்காகவும், தமிழ் சினிமாவின் வெற்றி ஃபார்முலாவையே முற்றிலும் மாற்றியமைத்ததற்காகவும், மாற்று சினிமா என்ற பெயரில் எங்கள் கழுத்தை துருப்பிடித்த கத்தியால் அறுக்காமல் படு சுவாரசியமான படத்தைக் கொடுத்ததற்காகவும் இயக்குனர் நலன் குமரசாமிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.