அன்புள்ள சாரு,
உங்களுக்கு இது என் முதல் கடிதம். உங்கள் ‘நிலவு தேயாத தேசம்’ தொடர்ந்து படித்து வருகிறேன். எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து, தேவையான எல்லா விடயங்களையும் தொட்டு, பின் ஆரம்பப்புள்ளியில் முடிக்கும் உங்கள் எழுத்து வியக்க வைக்கிறது. வெறும் இடங்களின் குறிப்பு மட்டும் கொடுக்காது, அதன் முழு வரலாற்றையும் சாறு பிழிந்து கொடுக்கும் உங்கள் உழைப்பு என்னை வெகு விரைவாக உங்கள் எழுத்துக்கு அடிமை ஆக்கி விட்டது. உங்கள் எல்லா புத்தகங்களையும் படிக்க ஆவல் மேலிடுகிறது. கண்டிப்பாகப் படித்து, என் கருத்தையும் மின்னஞ்சல் இடுவேன்.
உங்களிடம் ஒரு கேள்வி எனக்கு உண்டு. எவ்வளவோ எதிர்மறை விமர்சனங்களையும், உங்களை வசைபாடும் கூட்டங்களின் காழ்ப்புணர்ச்சி கொண்ட தாக்குதலையும் வெகு காலமாக தாங்கிக்கொண்டு, போராடி எழுத உங்களுக்கு எது உந்துசக்தி? என்னால் ஒரு தவறான விமர்சனத்தைத் தாங்க முடியவில்லை. (கவனிக்க – விமர்சனத்தை அல்ல; தவறான விமர்சனத்தை). அதை மீறி சிந்திக்க முடியவில்லை, சமயங்களில் எந்த வேலையும் ஓடுவதில்லை. ஒன்று, எதிர்வினை புரிந்து அவர்கள் பகையை சம்பாதித்துக் கொள்கிறேன்; அல்லது என் மனம் முழுக்க கோபத்தை அழுத்தி வைத்து உடலை கெடுத்துக் கொள்கிறேன்.
இந்த கேள்வியை பலகாலம் உங்களிடம் கேட்க நினைத்து, பின் நீங்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வீர்களோ என பயந்து காலம் தள்ளி வந்திருக்கிறேன். தவறிருந்தால் இந்தக் கடிதத்தை புறந்தள்ளி விடுங்கள்.
ஹரி
அன்புள்ள ஹரி,
இப்படி ஒரு கடிதத்தைப் பார்த்து வெகுநாட்கள் ஆகின்றன. உங்கள் தமிழ் என்னை ஆசுவாசப்படுத்தியது. இன்றைய இளைஞர்களுக்கு இப்படி ஒரு கடிதத்தைப் பிழையின்றி எழுதத் தெரியவில்லை. பத்து வரியில் முப்பது பிழைகள் போடுகிறார்கள். எழுத்தாளர்களே அப்படி இருக்கும் போது மற்றவர்களைச் சொல்லி என்ன பயன்?
உங்கள் கேள்வியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதில் கோபப்பட என்ன இருக்கிறது?
ஆனால் இந்தக் கேள்விக்கு நான் பலமுறை பதில் அளித்திருக்கிறேன். இந்தக் கேள்வி எனக்குப் பிடித்திருப்பதால் மீண்டும் மீண்டும் பதில் சொல்வதிலும் ஆட்சேபணை இல்லை. அதோடு இதை நீங்களும் பின்பற்ற ஆரம்பிக்கலாம்.
என் மீதான வசைகளை நான் பொருட்படுத்தாததற்கு முதல் காரணம், என் சுய அபிமானம். என்னை எனக்கே ரொம்பவும் பிடித்திருக்கிறது. நான் என்னை மிகவும் ரசிக்கிறேன். நான் தப்பு செய்தால் எனக்குப் பிடிக்காது. அதனாலேயே தப்பு செய்ய விரும்புவதில்லை. ஒரு ஞானி தப்பு செய்யலாமா? ஆம், என்னை நான் ஒரு ஞானி என்று கூட நினைத்துக் கொள்கிறேன். நாம் என்னவாக நம்மை நினைத்துக் கொள்கிறோமோ அதேபோல் ஆவதற்கு நம் வாழ்நாளில் வாய்ப்பு இருப்பதாக உண்மையிலேயே நம்புகிறேன். ஞானியைத் திட்டினால் வருத்தப்படுவாரா?
சரி, இதையெல்லாம் என்னுடைய தவறான நம்பிக்கை என்று வைத்துக் கொள்வோம். என்னை நான் நேசிக்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? ஒரு கத்தியை எடுத்து நம்மை நாமே வெட்டிக் கொள்ள விரும்புவோமா? வெறுப்பு என்பது கத்தி. அது எதிராளியிடம் உள்ளது. அவர் அதை உங்கள் மீது பிரயோகிக்க விரும்புகிறார்; பிரயோகிக்கிறார். அதிலிருந்து தப்ப உங்களுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அந்தக் கத்தி ஒரு மலர்மாலை என்று நீங்கள் நினைத்தால் அந்தக் கத்தி உங்கள் கழுத்தில் விழும்போது மாலையாக மாறி விடும். அந்த ஆளுக்கும் பெரும் திருப்தி உண்டாகும். வெட்டி விட்டோம் என. அவர் கண்களுக்கு நம் கழுத்திலிருந்து குருதி பெருக்கெடுத்து ஓடுவதாகவும் நம்மை வீழ்த்தி விட்டதாகவும் தோன்றும். ஆனால் நமக்கு அது மாலையாகத்தான் இருக்கும். மணக்கவும் செய்யும். நம்முடைய செயல் இப்பேர்ப்பட்ட மாயத்தை நிகழ்த்தியிருக்கிறதே, மணக்காதா என்ன?
நேரடியாக, லௌகீகமாகச் சொன்னால், எதிரியின் ஆயுதத்தை ஆயுதம் என்று நீங்கள் நம்பினால்தான் அது ஆயுதம். இன்னொரு விஷயம். டேய் நாயே என்று அவர் உங்களைத் திட்டுகிறார். இன்னும் அசிங்கமாகக் கூட. அதற்கு நீங்கள் வினையாற்றினால் அவர் உங்கள் எஜமானராகவும் நீங்கள் அவரது அடிமையாகவும் மாறி விடுகிறீர்கள். ஏனென்றால், உங்களைக் கோபப்பட வைக்க வேண்டும் என்பது அவர் நோக்கம். அந்த நோக்கத்தை நீங்கள் நிறைவேற்றி வைக்கிறீர்கள்.
டேய் சாரு, தேவடியாள் மகனே!
என் அன்பு மகனே, போய் உன் நாற்காலியில் உட்கார்.
புரிகிறதா உங்களுக்கு நான் சொல்ல வருவது? நான் தான் என் உணர்வுகளுக்கு எஜமானன். நீ கோபப்படு என்று என் மனம் கட்டளையிட்டால் மட்டுமே நான் கோபப்படுவேன். என் எதிரி கட்டளையிட்டால் அன்பு மகனே தான்.
என் உணர்வுகளில் விளையாட எதிராளிக்கு எப்போதுமே நான் அனுமதி தருவதில்லை.
மேலும்,
எனக்குக் கிடைக்கும் அன்பு அளவுக்கதிகமானது. இந்த அளவுக்கு நான் தகுதியானவனா என்றும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. தகுதியானவனாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஒரு நண்பர் துருக்கி செல்வதற்கு ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார். சென்ற மே மாதம். அந்த மாதத்தில்தான் அவருடைய மகனுக்குக் கல்லூரிச் சேர்க்கை. அதற்காக வைத்திருந்த பணத்தில் நான் துருக்கி செல்ல ஏற்பாடு செய்து விட்டார். மகனைக் கல்லூரியில் சேர்க்க பணம் போதவில்லை. யார் யாரிடமோ கடன் வாங்கிச் சேர்த்திருக்கிறார். இதை நான் எதேச்சையாகக் கேள்விப்பட்டு அவர் கொடுத்த தொகையைக் கொடுத்தேன். பாதியைத்தான் வாங்கிக் கொண்டார். அதைக் கூட ரொம்பவும் தயங்கி, கூச்சப்பட்டு என்னுடைய வற்புறுத்தல் தாங்க முடியாமல்தான் வாங்கினார். இவ்வளவுக்கும் அவர் என் எழுத்தில் ஒரு வாக்கியத்தைக் கூட படித்தவர் இல்லை. இதைக் கூட படிப்பாரா என்று தெரியாது. ஆனால் என்னை மிக நன்றாக அறிந்தவர். நான் எழுதுவது மிகப் பெரிய, உன்னதமான காரியமாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார். ஏனென்றால் அவருக்கு என்னை மிக நன்றாகத் தெரியும். அவர் பெயர் ராமசுப்ரமணியன்.
இப்படி என்னைச் சுற்றி சுமார் 40 நண்பர்கள் இருக்கிறார்கள். அதற்கும் மேல் கூட இருக்கலாம். இவர்களில் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் யாரும் பணக்காரர்கள் அல்ல. நடுத்தர வர்க்கம். இதை விடுங்கள். சில மாதங்களுக்கு முன் ஒரு வாசகி ஒரு மின்னஞ்சல் எழுதினார். அதுதான் அவரிடமிருந்து வரும் முதல் கடிதம் என்பது முக்கியமானது. அந்தக் கடிதத்தில் அவர் தன்னுடைய வங்கி அட்டை எண், அதைப் பயன்படுத்தும் ரகசிய எண், பெயர், தொலைபேசி எண் என்று சகல விபரங்களையும் அனுப்பி உங்களுக்கு எப்போதெல்லாம் புத்தகங்கள் தேவையோ அப்போதெல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று எழுதினார். சமயங்களில் என் தட்டில் செல்லாத காசும் விழும் என்பதால் 200 ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கிப் பார்த்தேன். வாங்க முடிந்தது. அதற்கப்புறம் வாங்கவில்லை. அந்த வாசகியின் அன்பும் நம்பிக்கையும் என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.
அந்த வாசகி என் ஆச்சரியத்தைப் புறக்கணிக்கிறார்.
”எப்படி என் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டாயிற்று?”
“நீங்களும் மற்றவர்களும் ஒன்றா?”
இதை விட எனக்கு ஒரு பரிசு வேறு ஏதேனும் இருக்கிறதா? கணவன் மனைவி கூட தங்களிடையே இப்படிப் பகிர்ந்து கொள்வதில்லையே?
இவ்வளவையும் பெற்றுக் கொண்டு சில பேர் திட்டினால் மட்டும் நான் சுணங்கினால் அது ரொம்பத் தப்பு இல்லையா?
சாரு