தேர்தல் களம் – அடியேனின் கருத்து

நடைபெற இருக்கிற தேர்தலில் சிறப்பே, கூட்டணி பேரத்தில் எல்லா கட்சிகளும் குறைந்தது இரண்டு முறைக்கு மேல் அசிங்கப்பட்டது தான். ஆனால், எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்த அரசு மீது ‘அதிருப்தி அலை’ இல்லை. ஜெயாவின் இந்த செயல்படாத அரசு மீது உள்ள முணுமுணுப்பு, திமுகவுக்கான அலையாக ஏன் மாறவில்லை? போன ஐந்து வருடத்தில் திமுக ஆடிய ஆட்டம், மக்களுக்கு மறக்கவில்லை. அதுதான்.

மட்டுமல்லாமல் திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட விஜயகாந்த் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார். அது எப்படி? விஜயகாந்தின் அரசியலே இரண்டு திராவிட கட்சிகளின் பலவீனத்தின் மீது கட்டப்பட்டிருப்பது தான். அதனால் தான் அவரது கோரிக்கைகள் திமுகவால் ஜீரணிக்க முடியாத அளவுக்கு மிகுதியாக இருக்கின்றன. கருணாநிதியை விட, திமுக அனுதாபிகள் இந்த விஷயத்தில் ரொம்பவும் தம் கட்டுகிறார்கள். விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வராமல் போனது ஸ்டாலினின் தோல்வி. இப்போதும் கருணாநிதிதான் அரசியல்வாதி. அவர் இறங்கி வந்து கெஞ்சியதுதான் கள எதார்த்தம். தேர்தல் முடிந்ததும் விஜயகாந்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற அவரது திட்டம் தோற்றுப்போய் விட்டது.

விஜயகாந்த் மநகூ வுக்கு போய்விட்டதால், ஏதோ அதன் மாண்பு கெட்டுவிட்டது போல புலம்புகிறார்கள். இது ஒரு சுய புலம்பல். வைகோ அங்கு ஏற்கனவே இருப்பதால், மாண்பு என்ற வார்த்தையெல்லாம் மநகூ விஷயத்தில் ரொம்ப பெரிய வார்த்தைகள். அப்புறம் நல்லகண்ணுவை ஏன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லையென்று கேட்கிறார்கள். காரணம் நம்மைவிட நல்லகண்ணுவுக்கு நன்றாகத் தெரியும். சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து அவர் அரசியலில் இருக்கிறார். நம் தமிழ்ச் சூழலில் கம்யூனிசம் என்பது ஒப்பு நோக்க, மற்ற கட்சிகளின் அற விழுமியங்களை கேள்வி கேட்க நாம் கையில் வைத்திருக்கும் ஒரு கருவி. அவ்வளவுதான். அதன் ஓட்டு பலம் என்பது மிகக் குறைவானது. ஃபேஸ் புக் லைக்கையெல்லாம் தேர்தல் கமிஷன் கவனத்தில் கொள்வதில்லை என்பது தா. பாண்டியனுக்கும் தெரியும்.

ஈழ விவகாரத்தில் திமுகவுக்ககாக பாவம் சுமந்ததன் பயன் திருமாவுக்குக் கிட்டவில்லை; எந்த காலத்திலும் அது கிட்டாது என்பது தான் கருணாநிதியின் அரசியல். திமுக கூட்டணியில் இருந்து திருமா விலகியது, திமுகவுக்கு பலவீனம் என்ற பேச்சு வருகிறது இல்லையா.. அதுதான் திருமா சாதித்தது. அவர் முதல்வர் வேட்பாளர் என்பதெல்லாம், நல்லகண்ணுவை சொல்வது போலத்தான். எப்படியும் ஜெயிக்கப் போவதில்லை என்பதால் சொல்கிறார் போல.

இந்தத் தேர்தலில் எரிச்சலூட்டும் விஷயம் என்னவென்றால், திமுக தனது பலவீனத்தை வெளிப்படையாக ஒத்துக்கொண்டது தான். இங்கு அதற்கு என்ன பெரிய வாழ்வா சாவா பிரச்சினை வந்துவிட்டது? கருணாநிதியின் முதுமையோடு கட்சியின் அதிகார வேட்கையை போட்டு குழப்பிக் கொள்கிறார்கள் போல. கடந்த இருபது ஆண்டுகளில் உருவாகி வந்திருக்கும் வாக்காளர்களுக்கு, இளைஞர்களுக்கு கருணாநிதி யார் என்று திமுக இனம் காணாதது தான், அது விஜயகாந்த் போன்ற லும்பன்களிடம் அதை மண்டியிடும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

திமுக என்பது ஒருகாலத்தில் இளைஞர்களின் கட்சி. இன்று அது ஊன்றுகோலைக் கூட தவற விடுகிறது. அதிகாரத்துக்கு வராமலேயே ஸ்டாலினின் முகம் இளைஞர்களிடம், சோர்வூட்டுகிறது. இருபத்தாறு வயதில் ஒரு கண்ணையா குமார் தனது பேச்சால் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைக்கிறான். திமுகவில் அப்படியான முகங்கள் யார் என்று பார்த்தால், மருமகனைக் கைகாட்டுகிறது திராவிடம். சீமானிடம் தஞ்சமடைகிறது ஒரு இளைஞர் திரள்.

விஜயகாந்த் மநகூவுக்குப் போனதில் மகிழ்பவர் ஜெயாதான். அது மிக எளிமையான தேர்தல் கணக்கு. திமுகவுக்கு இப்போது மிச்சமிருப்பது வாசன் மட்டுமே. மநகூவின் ஒன்றிணைவு திமுகவுக்கு எதிரான அரசியல் தான். கணிசமான அளவில் அது அதிமுகவையும் பாதிக்கும் தான். ஆனாலும் தனது பதட்டத்தை மறைத்துக் கொள்வதில் ஜெயா ஜெயித்திருக்கிறார். வாக்காளர்களுக்குப் பணம் தரும் கட்டமைப்பில், இன்று திமுகவை விட அதிமுக வலுவான வலைப் பின்னலை வைத்திருக்கிறது. மட்டுமல்லாமல் அது இப்போது அதிகாரத்தில் இருக்கிறது. அதன் எல்லைகள் வீச்சு கூடியவை. இந்த இடத்தில் ஸ்டாலினின் ஆம்வே பாணி மக்கள் சந்திப்பின் இடம் என்ன என்ற கேள்வி எழுகிறது?

இந்த தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்பதைவிட, எத்தகைய மதிப்பீடுகள் எல்லாம் தோற்றிருக்கின்றன என்ற வகையில் மக்கள் தெரிந்து கொள்ள நிறைய காட்சிகள் கிடைத்திருக்கின்றன. மிக நேர்மையாக, எந்த கூச்சமும் அற்று மக்கள் கட்சிகளிடம் காசு வாங்குவார்கள். அந்த வகையில் எல்லா கட்சிகளையும் விட சீரழிவின் உச்சத்தை மக்களும் அடையப் போகும் தேர்தல் இது.

– சினிமாவில் பல பாடல்களையும் பின்னணி இசையையும் கேட்கும் போது அது ஏற்கனவே ஹாலிவுட்டிலோ வேறு எங்கோ பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.  அது போல கொஞ்ச நேரத்துக்கு முன்பு முகநூலில் வேறு ஒருவர் எழுதியது வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை நான் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதை யாரோ உளவு பார்த்து எழுதியது போலவே இருந்ததால் நான் அதை சுட்டு இங்கே போட்டு விட்டேன்.

எழுதியது வேறொருவர் வேறு யாரும் அல்ல; ஜி. கார்ல் மார்க்ஸ்.