பிச்சைக்காரன் – விமர்சனம் (திருத்தப்பட்டது)

நண்பர் சசியின் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் படத்தைப் பார்த்த சூட்டோடு எழுதுகிறேன்.  படம் பிடிக்கவில்லை.  ஓ ஓ ஓ என்று படம் பூராவும் அம்மா பாச அசரீரி செவியைக் கிழிக்கிறது.  பின்னணி இசை கோரம்.  சகிக்கவில்லை.  இசை மிகப் பெரிய குறை.  சண்டைக் காட்சிகள் படு மோசம்.  படத்தில் எனக்குப் பிடித்த இடம், நாயகி டைட்டஸ், விஜய் ஆண்டனியின் கைகளில் முகம் புதைத்து அழும் காட்சி.  நானும் அழுது விட்டேன்.  இரண்டு பாடல்கள் கடி.  இரண்டு பாடல்கள் சூப்பர்.  நெஞ்சோரத்தில் பாடலைப் பல நூறு முறை கேட்கலாம்.

படம் பிடிக்காவிட்டாலும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் தினமும் 4.20 காட்சிக்குப் போய் விடலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.  அந்தக் காலத்தில் அப்படித்தான் எம்ஜியார் ரசிகர்கள் படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களை தினமும் விடாமல் பார்ப்பார்கள்.  ஒரே படத்தையே அந்தப் படம் தியேட்டரை விட்டுப் போகும் வரை பார்ப்பார்கள்.  காரணம், எம்ஜியார்.  அதுபோல் இந்தப் படத்தைப் பார்க்கப் போகிறேன்.  காரணம், சட்னா டைட்டஸ்.  ஹீரோயின்.  இப்படி ஒரு அழகைக் கனவு கூட காண முடியாது.  மை காட்! மூச்சு முட்டுது!!