மனிதாபிமானிகளின் அக்குறும்பு…

அவந்திகாவிடம் நான் அடிக்கடி சொல்வதுண்டு, நல்லவர்களை விட எனக்குத் திறமைசாலிகளே தேவையாக இருக்கிறார்கள் என்று.   நல்லவர்கள் என்னைப் போலவே பேக்குகளாக இருக்கிறார்கள். அதேபோல் இன்னொரு டார்ச்சர் பேர்வழிகள் மனிதாபிமானிகள்.  அடிக்கடி அவர்களை நான் நண்பர்களாக அடையும் பேறு பெறுகிறேன்.  அப்படிப்பட்ட மனிதாபிமானிகள் போனில் அழைத்தால் எடுக்காமல் போன் அழைப்பை வெட்டி விட்டு அவர்களே அழைப்பார்கள்.  காரணம், என்னுடைய செலவைக் கட்டுப்படுத்துகிறார்களாம்.  எப்போது பார்த்தாலும் நான் ஏழை, பணத்துக்கு சிரமப்படுகின்றவன் என்றேவா ஒருத்தரின் மனதில் என்னைப் பற்றிய எண்ணம் தோன்றும்.   போலியோவினால் பாதிக்கப்பட்ட என் நண்பர் ஒருவர் ஒருமுறை “உடம்பைக் குறைக்க வேண்டும் சாரு” என்று என்னிடம் சொன்ன போது “சோம்பேறியா இருக்காம வாக்கிங் போங்க” என்று ஆக்ரோஷமாகச் சொன்னேன்.  சொன்ன பிறகும் எனக்கு உறைக்கவில்லை.  அவரே, ஏங்க… நானா…? என்று கேட்டதும் தான் நினைவு வந்து, ஓ சரி, சரி, அது முடியாது, யோகா பண்ணுங்க என்றேன்.  இதே இடத்தில் வேறொரு ஆளாக இருந்தால் ஏதோ தான் ஒரு கொலைக் குற்றத்தைப்  பண்ணி விட்டது போல் நினைத்துக் கொண்டு கண்ணீர் மல்க நண்பரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கதறி அவரை ஒரு பாடு படுத்தியிருப்பார்கள்.  என்ன விஷயம் என்றால், பெரும்பாலான மனிதர்களுக்கு மற்றவர்களின் உடல் குறைபாடே மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  சகஜமாகவே இருக்க மாட்டேன் என்கிறார்கள்.  காபி ஷாப்பில் வந்து நான் தான் பணம் கொடுப்பேன் என்று என்னிடம் அக்குறும்பு பண்ணும் மனிதாபிமானிகளிடம் யோவ், என் மேலே உனக்கு ரொம்பக் கரிசனம் இருந்தால் ப்ரஸீலுக்கு ஒரு டிக்கட் எடுத்துக் குடுய்யா என்று சொல்வதுண்டு.  இந்த ஒர்ருவா, ரென்ட்றுவா காசில்தான் ரொம்ப மனிதாபிமானத்தைக் காண்பிக்கிறார்கள்.

இன்று the Intouchables என்ற ஃப்ரெஞ்ச் படத்தைப் பார்த்தேன்.  அதில் வரும் கறுப்பனான த்ரிஸ் போன்றவன் தான் நான்.  எனக்கு அவர்களைப் போன்ற மனிதர்களைத்தான் பிடிக்கும்.  எப்போது பார்த்தாலும் அடுத்தவனின் குறையையே நினைத்துக் கொண்டிருப்பது ஒருவித மனநோய்.  The Intouchables என்ற அருமையான படத்தைப் பற்றி நண்பர் ராஜேஷ் எப்போதோ எழுதியிருக்கிறார்.  படித்துப் பாருங்கள்.   ஃப்ரெஞ்ச் படத்தை நிச்சயமாக தமிழில் கைமா பண்ணியிருப்பார்கள் என்பதால் தோழா படத்தை நிச்சயம் பார்க்க மாட்டேன்.

http://karundhel.com/2013/02/the-intouchables-2011-french.html