எழுச்சி : ஷோபா சக்தியின் சிறுகதை: ஓர் பின்நவீனத்துவ விளக்கம்

சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை ஆகிய நாவல்களைப் பற்றிப் பேசும் போதும், கார்ல் மார்க்ஸின் சிறுகதைத் தொகுதியைப் பற்றிப் பேசும் போதும் புனைவெழுத்தும் பின்நவீனத்துவமும் பற்றி சில விஷயங்களைக் குறிப்பிட்டது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் ஏன் மோசமான கதை என்பதையும் விளக்கினேன்.  நூறு நாற்காலிகளில் தெரிவது வெறும் கண்ணீர்.  துலாபாரம் சினிமா கண்ணீர்.  தமிழ் சினிமாவின் க்ளிசரின் கண்ணீர்.  கண்ணீர்க் கதைகளைச் சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை.  ஆனால் அதை வாசகரின் கண்ணீரை வரவழைப்பதுதான் நோக்கம் என்பது போல் சொல்வது இலக்கியமாகாது.  உள்ளார்ந்த சோகம் ஓ என்ற அலறலுடன் இருக்காது.  காசுக்காக ஒப்பாரி வைப்பது உள்ளார்ந்த சோகமாகாது.

உள்ளார்ந்த சோகம் ஐந்து முதலைகளின் கதையில் இருக்கிறது.  ரோலக்ஸ் வாட்ச்-இல் இருக்கிறது.  இப்போது ஷோபா சக்தியின் எழுச்சி என்ற கதையைப் படித்துப் பாருங்கள்.  இது போன்ற ஒரு கதை ஜனரஞ்சகப் பத்திரிகையில் வந்தால்தான் தமிழனுக்கு இலக்கியத்தில் நாட்டமுண்டு என்று சொல்ல முடியும்.  இது போன்ற கதைகளை லட்சக் கணக்கான பேர் படிக்க வேண்டும்.  அது போக, எழுச்சி என்ற கதை பற்றி ஜெகா எழுதியிருந்ததைப் படித்ததும் அதை எனக்குப் படிக்கத் தோன்றியது.  செல்லப்பா எழுதிய 2000 பக்க சுதந்திர தாகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இடையில் ஒரு வேலை செய்யவில்லை.  ஆனாலும் ஷோபா சக்தியின் சிறுகதைகளுக்குத் தமிழில் மிகச் சிறப்பான இடம் உண்டு என்பதால் ஆர்வத்துடன் படிக்கத் தலைப்பட்டேன்.  எழுச்சி என்ற தலைப்பு எனக்கு ஒரே ஒரு அர்த்தத்தையே கொடுத்தது.  சே, நம் மனம் வக்கிரமாகி விட்டது என்று என்னையே கடிந்து கொண்டு கதைக்குள் நுழைந்தேன்.  இலங்கையில் தமிழர் வாழும் பகுதி.  ராணுவத்தினரின் கொடுமைக்கு ஆளான ஒரு ஆள்.  மனைவியைப் பிரிந்து அகதியாக பாரிஸில் வாழும் கொடுமை.  இதையெல்லாம் விடக் கண்ணீர் வரவழைக்கக் கூடிய ஒரு விஷயம் இந்த உலகில் உண்டா?  மற்ற கண்ணீரெல்லாம் இதற்கு அடுத்ததுதான்.  பாரிஸிலிருந்து இலங்கை வரை உள்ள சமுத்திரங்களையெல்லாம் விடப் பெரும் கண்ணீரை உருவாக்கி விடலாம்.  ஆனால் தேர்ந்த கதைசொல்லியும் பின்நவீனத்துவம் என்றால் என்ன என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டு புனைகதைகளை உருவாக்கும் எழுத்தாளனுமான ஷோபா சக்தி அப்படிப்பட்ட கண்ணீரை உருவாக்கவில்லை.  இலக்கியத்தில் பின்நவீனத்துவம் எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் எழுச்சி என்ற இந்தக் கதையைப் படிக்கலாம்.  இதுதான் ரோல் மாடல்.  ஒரு இனத்தின் மாபெரும் வரலாற்றுச் சோகம் ஒரு சாதாரண பகடியின் மூலம் நம் ஆன்மாவை உலுக்குகிறது.  இதைத்தான் உள்ளார்ந்த சோகம் என்று குறிப்பிட்டேன்.  இதில் நூறு நாற்காலிகளில் இருக்கும் ஆடம்பரமோ க்ளிசரினோ எதுவும் இல்லை.  நூறு நாற்காலிகளின் கண்ணீர் எனக்கு தேங்காய் சீனிவாசன், ஜனகராஜ் போன்றவர்களின் அழுகைக் காட்சிகளையும் துலாபாரம் சினிமாவையும் ஞாபகப்படுத்துகிறது.  அல்லது, பிச்சைக்காரன் படத்தின் சண்டைக்காட்சிகள்.  அல்லது, அந்தப் படத்திலேயே படம் பூராவுமே தொடர்ந்து வரும் அம்மா அம்மா என்ற க்ரூப் ஒப்பாரி/அசரீரி.

எழுச்சியைப் படித்துப் பாருங்கள்.  உலகத் தரமான கதை என்றால் இதுதான்.  இப்படித்தான் இன்றைய சிறுகதைகள் எழுதப்படுகின்றன.  தமிழ் சினிமாவின் ஜனரஞ்சக ஒப்பாரிக் கூச்சலிலிருந்து தமிழ் எழுத்தாளர்கள் தப்பிக்க வேண்டுமானால் இந்தக் கதைதான் அதற்கான சாளரத்தைத் திறக்கும்.

இதில் இன்னொரு நகைமுரண் என்னவென்றால், ஷோபா சக்தி ஒருமுறை எழுதியிருந்தார், ஜெயமோகன் தான் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்று.  அது ஒரு பேட்டி என்று நினைக்கிறேன்.  பகடிப் பேட்டியோ என மேலும் கீழும் படித்தேன்.  அடுத்து வந்த வரிகள் அது சீரியஸ் பேட்டி என்றே நம்ப வைத்தன.  அடுத்த வரியில் ராஸ லீலா ஒரு நாவலே அல்ல; அது ஒரு குப்பை என்பது போல் (சரியான வார்த்தைகள் ஞாபகம் இல்லை) சொல்லியிருந்தார்.  எனவே எழுத்தாளர்களின் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களது புனைகதைகளை மட்டும் படியுங்கள்.  உதாரணமாக, அசோகமித்திரனுக்குப் பிடித்த எழுத்தாளர் யார் தெரியுமா?  கல்கி!

அசோகமித்திரனை இப்போது மாதம் ஒருமுறை பார்த்து விடுகிறேன்.  இந்த முறை அவரிடமிருந்து கற்றது: உன் கதையைக் குப்பை என்று சொல்ல இன்னொருவருக்கு உள்ள உரிமையை ஏன் நீ ஆட்சேபிக்கிறாய்?

எழுச்சி கதையை பின்வரும் இணைப்பில் வாசியுங்கள்…

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1201