2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குடிலில்தான் மேரி மாதா தனது இறுதிக் காலத்தைக் கழித்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும் போது நம் மனக்கண்முன் தோன்றும் காட்சிகளும் வசனங்களும் அதி அற்புதமானவை.
அந்தக் குடிலின் எதிரே நான் பல மணி நேரம் அமர்ந்திருந்தேன்.
யூதர்களுடைய பஸ்கா பண்டிகை சமீபத்திருந்த வேளையில் யேசு ஜெருசலேம் செல்கிறார். தேவாலயத்தில் ஆடுகளையும் மாடுகளையும் புறாக்களையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கயிற்றினால் ஒரு சவுக்கை உண்டுபண்ணி அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்தி விட்டு, காசுக்காரர்களின் காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப் போட்டு, புறா விற்கிறவர்களை நோக்கி, இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டு போங்கள், என் பிதாவின் வீட்டை வியாபார ஸ்தலமாக்காதீர்கள் என்றார்.
நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளையே நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்.
யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய்?
யேசு தாமஸிடம் சொன்னார்: நீ என்னைக் கண்டதினாலே விசுவாசிக்கிறாய். காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து, உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி, அநேக தூஷண வார்த்தைகளையும் சொன்னார்கள்.
உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களை நேசியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இறை வசனங்களை தியானித்தபடி அன்னையின் ஆலயத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தேன்.
மேலும் படிக்க:
http://andhimazhai.com/news/view/nilavu-22.html
நிலவு தேயாத தேசம் – 22