எனக்குப் பிடித்த எழுத்தாளர்

ஒரு நண்பர் முகநூலில் ரகளை பண்ணிக் கொண்டிருந்தார். ஒரு ரஜினி ரசிகன் மாதிரி அவர் போடும் போஸ்ட்டுகளைப் படித்துத் திளைத்துக் கொண்டிருந்தேன்.  அவருக்குமே போதையில் நிலை கொள்ளவில்லை.  யாருக்குத்தான் புகழ்ச்சி பிடிக்காது.  பிறகு ஒரு நாவல் எழுதினார்.  படித்தேன்.  முடிந்தது கதை.  திட்டுவதற்குக் கூட லாயக்கு இல்லை.  விமர்சனம் செய்வதற்குக் கூட லாயக்கு இல்லை.  கொடுமை, கொடுமையிலும் கொடுமை.  முகநூலில் தெரிந்த அந்த சரவெடி சரவணனை   நாவலில் காணவே காணோம்.  (சும்மா எதுகை முகனைக்காகச் சொன்னேன்.  நீங்கள் ரோலக்ஸ் சரவணனை நினைத்து விடாதீர்கள்!)  நாவலில் தெரிந்தது ஒரு மோசமான ராஜம் கிருஷ்ணன்.  கள ஆய்வாம், மண்ணாங்கட்டி!

இப்போது பிரபு காளிதாஸுக்குப் பரம ரசிகனாக இருக்கிறேன்.  அவருடைய போஸ்டிங்குகளைத் தேடித் தேடிப் படிக்கிறேன்.  அவரை நாவல் எழுதுங்கள் என்று வற்புறுத்திக் கொண்டும் இருக்கிறேன்.  அடித்துச் சொல்கிறேன், பிரமாதமாக எழுதுவார்.  தஞ்சாவூர்க்காரன் சோடை போனதே இல்லை.  தஞ்சாவூர்க்காரர்கள் படு சோம்பேறிகள்.  அப்படிப்பட்ட சோம்பேறிகளை உலகிலேயே பார்க்க முடியாது.  என் ஆயுள் உள்ளளவும் கார்ல் மார்க்ஸ் சொன்ன ஒரு வாக்கியத்தை என்னால் மறக்கவே முடியாது.  ஜெர்மன் கார்ல் மார்க்ஸ் சொன்னாரே, உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்று, அதை விட அட்டகாசமான வாசகம் அது. ஒருநாள் கார்ல் கும்பகோணத்திலிருந்து சென்னை வந்தார்.  நள்ளிரவு ஆகியிருக்கும்.   எட்டு மணிக்கு எழுப்பி விட்டு விட்டேன். வேறு ஒன்றுமில்லை.  கணேச குமாரனின் புத்தக வெளியீட்டுக்கு அழைத்திருந்தேன்.  அதுவும் பத்து மணிக்குத்தான் நிகழ்ச்சி.  அண்ணன் நான் போய் அரை மணி நேரம் சென்றுதான் வந்தார்.    அன்று மாலை மகா முத்ரா போகலாம் என்றேன் கார்லிடம்.  அப்போதுதான் அந்தப் பொன் மொழியைச் சொன்னார்.  ”நான் தூங்கனும் சாரு.  நாளை பார்க்கலாம்.”   இதுதான் தஞ்சாவூர் மண்ணின் மணம்.  ஆனால் என்னதான் தூங்கிக் கொண்டே இருந்தாலும் காரியத்தில் இறங்கினால் ஜெயித்து விடுவார்கள்.  கார்ல் ஜெயித்து விட்டார்.  ஒரே கல்லில் இரண்டு புத்தகங்கள்.  இரண்டுமே பிரமாதம்.

பிரபு காளிதாஸ் தஞ்சாவூர்க்காரராக இருந்தாலும் கொலை சுறுசுறுப்பு.  எல்லாம் அடியேனின் பள்ளி.  அதை பிரபு காளிதாஸ் சொல்வதில் சில சங்கடங்கள் உண்டு.  நான் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்தவன் என்று சொன்னால் எவன் மதிப்பான்?  மேலும், சாருவின் பள்ளி என்று சொன்னாலே சொன்ன வாய்க்கு சோறு கிடைக்காது.  யாரும் வீட்டுக்குள்ளேயே விட மாட்டார்கள்.  எனவே என் பள்ளியைச் சேர்ந்தவர்கள் வாயையும் இன்னொன்றையும் மூடியபடியேதான் வளைய வருவார்கள்.   யாராவது பதுங்கிப் பதுங்கி வேலை செய்கிறார்கள் என்றாலே நீங்கள் கண்டு பிடித்து விடலாம், இவன் சாரு பள்ளியைச் சேர்ந்தவன் என்று.  நிலைமை அப்படி.  நெஞ்சை நிமிர்த்தினால் குஞ்சிலேயே கொடுப்பார்கள்.  சாவு தான்.  அதனால் நான் தான் பேக்கு மாதிரி இவர் என் பள்ளி அவர் என் பள்ளி என்று கத்திக் கொண்டிருக்க வேண்டும்.  எல்லாம் எவ்வளவு காலம்?  இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து புத்தகங்கள் மட்டும்தானே நிற்கப் போகிறது? அப்போது ஜி. கார்ல் மார்க்ஸின் புத்தகங்களும் பிரபு காளிதாஸின் புத்தகங்களும்தான் நிற்கும்.  பாரதம் ராமாயணம் எல்லாம் அலமாரியில் கறையான்களுக்கு உணவாகத் தங்களின் ஜீவிதக் கடமையை நிறைவேற்றியபடி வாழும்.  இதுவும் அனுமானம்தான்.  யார் கண்டது!!!

சொல்ல வந்தது என்னவென்றால், நான் பிரபு காளிதாஸின் ரசிகனாகவே ஆகி விட்டேன்.  அவர் எதை எழுதினாலும் நன்றாக இருக்கிறது.  மேலும் அந்த ஆளுக்கு தினந்தோறும் எதாவது நடந்து கொண்டே இருக்கிறது.  நானும் தான் எத்தனையோ நூறு முறை பாண்டிச்சேரி போயிருக்கிறேன்.  பாருங்கள், பிரபுவின் குட்டிக் கதையை.

”கோடிக்கணக்கான பாம்புகள் நாக்கை நீட்டுவதுபோல வெயில் தரரையிரங்கிக்கொண்டிருந்த நேற்றைய மதிய நேரத்தில் பாண்டிச்சேரி சிவாஜி சிலை ஸ்டாப்பில் ஓரமாக நின்றுகொண்டு பைக்கில் வருபரைப் பார்த்து லிஃப்ட் கேட்டேன். உடனே ஒருவர் நிறுத்த…”அண்ணே, அந்த அருண் ஐஸ்கிரீம் கடைகிட்ட எறக்கி விட முடியுமா…?” என்று கேட்க, ஏறிக்க என்றார்.

அவர் மீனவர். இழுத்துக் கட்டிய பறை போல் உடல். உடலில் அங்கங்கே மீன் செதில்கள் வெயிலில் வெள்ளி போல் மினுங்க, பைக்கில் ஏறிய கையோடு பேச ஆரம்பித்து விட்டார். “பண்ணெண்டு நாளா அலைய விடுறான் ஸார் ஒரு கவர்மெண்ட் ஆபிஸர். எதுக்கு, ஒரு கையெழுத்துக்காக. அந்த தேவுடியாப் பயலுக்கு காசு வோணுமாம். அப்பதான் லோன் லைன் க்ளியர் பண்ணுவானாம். அவனுங்களுக்கு என்ன ஸார், மாசம் அம்பதாயிரம் நோகாம சம்பாரிப்பானுங்க… வர்ற கோவத்துக்கு ஒருநாள் ஆபிஸ் விட்டு அந்த நாய் வெளிய வர்றப்ப போட்டுறணும்ன்னு தோணுது ஸார். கொல்ல முடியலன்னா கொறஞ்ச பட்சம் அந்த கையயாவது எடுத்துறணும். கையெழுத்து போடாத நாய்க்கு கை எதுக்கு..? என்ன சொல்றீங்க…?” என்றார்.

அதற்குள் அருண் ஐஸ்கிரீம் வந்துவிட்டது. நன்றி சொல்லி இறங்கிவிட்டேன். ஆளாளுக்கு ஏதோ ஒரு வெறுப்பில் தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.”

இது இன்றைய முகநூலில் பிரபு காளிதாஸ் எழுதியிருப்பது.  எப்படி இருக்கிறது!  எனக்கோ எதுவுமே நடப்பதில்லை.  ஃபின்லாந்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் மனித நடமாட்டமே இல்லாத பனிக்காட்டில் தனியாக அமர்ந்திருக்கும் ஒரு மனிதனைப் போல் என் அறையில் ஆயிரக் கணக்கான புத்தகங்களுக்கிடையில் அமர்ந்திருக்கிறேன்.  என்ன நடக்கும் இங்கே?  புத்தகம் புத்தகம் புத்தகம்.

உயிர்மை நிகழ்ச்சிகளில் இனிமேல் கலந்து கொள்ள மாட்டேன் என்று எழுதியிருந்தேன்.  ஆனால் பிரபு காளிதாஸுக்காக நான் எதுவும் செய்வேன்.  எனவே வரும் எட்டாம் தேதி மாலை ஆறு மணிக்கு கவிக்கோ அரங்கில் பிரபு காளிதாஸின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருவேன்.  நிகழ்ச்சியில் யாரும் என்னைப் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  ஒரு 48 நாட்களுக்கு புகைப்படம் எடுக்காமல் இருந்தால்தான் சைத்தானின் அருள் பார்வை கிடைக்கும் என்று மலையாள மாந்த்ரீகர் சொல்லியிருக்கிறார்.  அதையும்தான் பின்பற்றிப் பார்ப்போமே.  சைத்தானின் கோபத்தை சைத்தான் மூலமாகவே எதிர்கொள்வோம் என்று ஒரு சிறு முயற்சி!