மனம் கொத்திப் பறவை – ஒரு மதிப்புரை – ஸ்ரீராம்

மனம் கொத்திப் பறவை

சாருவின் அனைத்துக் கட்டுரைத் தொகுப்புகளுக்கும் ‘வாழ்வது எப்படி? – 1, 2, 3…’ என்று பெயர் வைக்கலாம். நம் வசதிக்காகத்தான் வேறு வேறு பெயர்களை வைத்திருக்கிறார். கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ள பெங்களூரு செல்கிறார் சாரு. இவருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறையில் வேறு ஒருவர், அறையை காலி செய்துகொண்டிருக்கிறார். அந்த ஐந்து நிமிடத்தில் அந்த நபர், சாருவிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுத் தள்ளுகிறார். நாம் இன்னொருவருடன் எப்படி உரையாடுவது என்றே தெரியாமல் இருக்கிறோம்.

இந்தத் தொகுப்பின் ஆரம்பக் கட்டுரைகளில் நமக்கு அதிகப் பரிச்சயம் இல்லாத கோலா பூஃப் பற்றியும் ஹௌபாரா என்ற அறியவகைப் பறவை பற்றியும் சாரு நிவேதிதா எழுதுகிறார்.

ஏன் என்று யோசித்ததில், இது ஒரு உத்தி என புரிந்தது. இந்தப் பெயர்களை முதலில் காட்டி, வெகுஜன இதழ் மட்டுமே படிக்கும் ஒரு வாசகனை உள்ளே இழுக்கிறார் சாரு நிவேதிதா. ஹௌபாரா பற்றிக் குறிப்பிட்டு, அதே கட்டுரையில் ஹேமலட்டில் இருந்து இந்த வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.

“There is special providence in the fall of a sparrow. If it be now it is not to come; if it be not to come, it will be now; if it be not now, yet it will come – the readiness is all.”

ஆங்கிலத்தில் இதன் சாரத்தை முழுவதும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதே கட்டுரையில் இந்த வரிகளை மிக அருமையாக சாரு மொழிபெயர்த்திருக்கிறார்.

“இப்போது நடக்கும் என்றால், அது நடக்காமல் போகலாம்; நடக்காது என்றால், நடந்தாலும் நடந்துவிடலாம்; இப்போது நடக்கவே நடக்காது என்றால் அது நடந்தே தீரும். எல்லாம் நடப்பவற்றை எதிர்கொள்ளும் ஆயத்தத்தில்தான் இருக்கிறது. எப்படி பிதாவின் சித்தம் இல்லாமல் ஒரு சிட்டுக்குருவி தரையிலே விழாதோ, அதுபோலவே நம்முடைய உயிர் போவதும் போகாமல் இருப்பதும் இறைவனின் கையில்தான் இருக்கிறது!”

இந்தத் தொகுப்பில் வெளிப்பட்டிருக்கும் சாருவின் கோபம் பரிசுத்தமானது (innate) மற்றும் நியாயமானது (justified). ஹைதராபாத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு துப்பாக்கி சுடுவது பற்றிய பயிற்சி ஒன்று நடக்கிறது. காவலரின் கவனக்குறைவால், தோட்டா நிரப்பிய துப்பாக்கி, பயிற்ச்சியில் பயன்படுத்தப் படுகிறது. இதில் இரண்டு மாணவர்கள் இறக்கிறார்கள். அதிகம் போனால், இந்தக் காவலரை இடைநீக்கம் செய்வார்கள். இதுவே ஒரு ஐரோப்ப தேசத்தில் நடந்திருந்தால் கலவரம் வெடித்திருக்கும்; இங்கு இது மற்றும் ஒரு செய்தி, அவ்வளவுதான், எனக் கோபப்படுகிறார் சாரு. மேலும், தான் கலவரத்தை நியாயப் படுத்தவில்லை; தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார் சாரு. இதற்கு மேல்தான் விஷயமே.

சாருவின் கோபம் innate என்று சொன்னேன் அல்லவா. இந்த வரிகளைப் படியுங்கள்.

“மாணவர்கள் ஏன் துப்பாக்கிபற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? துப்பாக்கி என்பது மனித உயிர்களைக் கொல்வதற்காக மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கொலைக் கருவி; மனித நாகரிகத்தின் அவலங்களில் ஒன்று. துப்பாக்கியே இல்லாத சமூகம் உருவாவதைப்பற்றி அல்லவா மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்? அன்பையும் பண்பையும் போதிக்க மறந்துவிட்ட நாம், நம் குழந்தைகளுக்கு இவ்வாறாக வன்முறையைப் போதித்துக்கொண்டு இருக்கிறோம்.”

சாருவின் உலகம் தனி. நம் உலகின் அசிங்கங்கள் அவருக்கு அந்நியமானவை. அவர் ஆன்மா பரிசுத்தமானது. அதுவே அவர் எழுத்திலும் வெளிப்படுகிறது.

ஸ்ரீராம்

***

மனம் கொத்திப் பறவை – முதல் பதிப்பு, 2010 – விகடன். இரண்டாம் பதிப்ப்பு, 2016 – உயிர்மை.

இணையம் மூலம் வாங்க: http://bit.ly/1TJIDzN