சினிமா நூல்களும், pure cinema புத்தகக் கடையும்…
தமிழ் ஸ்டுடியோ அருண்
முழுக்க சினிமாவிற்கு மட்டுமேயான ஒரு புத்தகக் கடை திறப்பது என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் சினிமா சார்ந்து தமிழில் எத்தனை புத்தகங்கள் வெளியாகியிருக்கும் நண்பர்கள் யாராவது ஊகிக்க முடிகிறதா? அதற்கு முன்னர் இந்த வரலாறையும் கொஞ்சம் பார்த்துவிடுங்கள். சினிமா தமிழ்நாட்டில் தோன்றி நூறு வருடங்கள் ஆகிறது. மலையாளத்தில் சினிமா ரசனைக்கு மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கிறது. உலகம் முழுக்க சினிமாவிற்கான புத்தகங்கள் பெரும் எண்ணிக்கையில் அச்சிடப்படுகிறது. போர்களினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள், இரான், வியட்நாம் போன்ற நாடுகளில் கூட ஆயிரக்கணக்கில் சினிமா சார்ந்த புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது. தமிழ்நாட்டில் சினிமா மூலம் ஐந்து முதலமைச்சர்கள் இந்த மாநிலத்தை ஆண்டிருக்கிறார்கள். இன்னமும் ஆண்டுக்கொண்டிருக்கிரார்கள். நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட இடதுசாரிகள் கூட முதல்வராக்கத் துடித்துக் கொண்டிருக்கும் அந்த நபரும் கூட சினிமாக்காரர்தான். சினிமா புகழ் இல்லாத யாரும் போட்டிடும் முதல் தேர்தலிலேயே வெற்றி பெரும் வாய்ப்பு இங்கே மிகக் குறைவு. சினிமாவின் மூலம் கதாநாயகர்கள், இயக்குனர்கள் சிலர் சம்பாதித்த தொகை பல கோடிகளில் இருக்கும். ஒரு இயக்குனர் ஒரு புத்தகம் எழுதியிருந்தால், அல்லது ஒரு நடிகர், ஒரு துணை நடிகர், ஒரு நகைச்சுவை நடிகர், ஒரு நடிகை என இங்கே இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட அனைவரும் தனி தனியாக ஒரு புத்தகம் எழுதியிருந்தால் கூட இங்கே ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வெளியாகியிருக்கும்.
இத்தனை பாரம்பரியம் கொண்ட தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சினிமா சார்ந்த நூல்கள் அதிகபட்சம் ஆயிரத்தை தாண்டாது. இதுவரை என்னால் ஐநூறு புத்தகங்களை கூட கண்டடைய முடியவில்லை. நல்ல சினிமா இங்கே சாத்தியப்படாததன் பிரச்சனை இப்போது உங்களுக்க்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வருடமும் இலக்கியம் சார்ந்து இங்கே ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வெளிவருகிறது. மொழியின் உண்மை கட்டமைப்பான கவிதை சார்ந்து இங்கே லட்சக்கணக்கான புத்தகங்கள் வெளிவருகிறது. சாலையில் நடந்து செல்லும்போது, நீங்கள் கவிஞரே என்று அழைத்துப் பாருங்கள், அநேகமாக சாலையில் நடந்து செல்லும் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் நபர்கள் திரும்பிப் பார்ப்பார்கள். யாராவது ஒருவர் திரும்பிப் பார்க்கவில்லை என்றால் அவர் கவிஞர் அல்ல என்று பொருள் அல்ல, அவர் காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டிருப்பார். உற்றுப்பார்த்தால் உங்களுக்கே புரியும். அத்தனை கவிஞர்களை இந்த மாநிலம் கொண்டிருக்கிறது. ஆனால் சினிமா சார்ந்த புத்தகங்களுக்கு இங்கே எத்தனை தட்டுப்பாடு. உண்மையில் எனக்கு வெட்கமாக, அயர்ச்சியாக இருக்கிறது. ஒரு துறை சார்ந்து புத்தகங்கள் வெளிவரவில்லை என்றால் அந்த துறை எப்போதும் அதன் தொழில்நுட்பம், வடிவம் சார்ந்து மேம்பட வாய்ப்பே இல்லை. சிந்தித்துப் பாருங்கள், மருத்துவம் சார்ந்து, அறிவியல் சார்ந்து, மொழி சார்ந்து இங்கே புத்தகங்கள் வெளிவரவில்லை என்றால் அந்தத் துறைகள் எப்படி வளர்ச்சி பெரும். சினிமா இன்னமும் வளர்ச்சி பெறாமல், சுமாரான படங்களையே நம்முடைய சினிமா விமர்சகர்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதன் மிக முக்கிய காரணம், இங்கே போதிய அளவில் சினிமா துறை சார்ந்து புத்தகங்கள் வெளிவராததே பெரும் காரணம். நமக்கு ஒரு துறை சார்ந்து அறிவு வளர அந்த துறை சார்ந்த புத்தகங்களே பெரும் துணையாக இருக்கும். சினிமா சார்ந்த நூல்களை பதிப்பிக்கத்தான் பிரத்யேகமாக பேசாமொழி பதிப்பகத்தை தொடங்கினோம். அடுத்த பத்தாண்டுகளில் குறைந்தது ஐநூறு சினிமா சார்ந்த உருப்படியான புத்தகங்களையாவது பேசாமொழி சார்பில் பதிப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இதோ இப்போது pure cinema புத்தகக் கடை ஏப்ரல் 14ஆம் தேதி முதல் செயல்படவிருக்கிறது. உலகம் முழுக்க உள்ள சினிமா புத்தகங்களை இந்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்திட இன்னும் நிறைய திராணி வேண்டும். சினிமா அந்த திராணியை கொடுக்கும் என்றே நம்புகிறேன். ஏப்ரல் 14ஆம் தேதி pure cinema புத்தகக் கடையில் பெரும்பாலான புத்தக அலமாரிகள் காலியாகத்தான் இருக்கும். அது எங்களுடைய தோல்வி அல்ல, சினிமா சார்ந்த தமிழ் சமூகத்தின் தோல்வி. தமிழ் சினிமாவின் வறட்சி. காலக்கொடுமை. வேறென்ன சொல்ல. ஏப்ரல் 14 ஆம் தேதி pure cinema புத்தகக் கடை திறப்பு விழாவிற்கு அவசியம் வாருங்கள். நீங்கள் புத்தகம் வாங்கினால்தான், உலகம் முழுக்க உள்ள சினிமா புத்தகங்களை இங்கே வரவழைக்க முடியும். பேசாமொழி சார்பில் மேலும் பல புத்தகங்களை பதிப்பிக்க இயலும். உங்கள் ஆதரவு மிக முக்கியம். மறந்து விடாதீர்கள்.
தமிழ் ஸ்டுடியோ அருண்