கடந்த ஃபெப்ருவரி 27 அன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற அடியேனின் ஏழு புத்தக வெளியீட்டுக்கு இலக்கிய உலகில் வரலாறு காணாத கூட்டம் வந்தது. இவ்வளவுக்கும் அன்றைய தினம் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதிப் போட்டி, இளையராஜாவின் 1000 பட விழா நடந்தது. அதையும் மீறித்தான் ராஜா அண்ணாமலை மன்றம் நிறைந்தது. அதன் கொள்ளளவு 800. வந்திருந்த பார்வையாளர்களில் 90 சதவிகிதம் பேர் இளைஞர்கள். இந்த மன்றம் பலமுறை ஹவுஸ்ஃபுல் ஆகியிருக்கிறது. ஆனால் என்றுமே இந்த அளவு இளைஞர் கூட்டத்தைப் பார்த்ததில்லை என்று மன்ற நிர்வாகி கூறினார். இதற்குக் காரணமான அத்தனை நண்பர்களுக்கும் வாசகர் வட்ட நண்பர்களுக்கும் வெளிநாடுகளிலிருந்தும் வெளியூர்களிலிருந்து வந்திருந்த நண்பர்களுக்கும் உள்ளூர் நண்பர்களுக்கும் என் நன்றி.
ஆனாலும் புத்தகங்கள் அதிகம் விற்கவில்லை. அதன் காரணம் பார்வையாளர்கள் அல்ல; நான் தான் என்று தாமதமாகவே தெரிந்தது. அன்றைய தினம் மாதக் கடைசி என்பதால் பலரிடமும் பணம் இல்லை. அதனால்தான் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரமே தேதி குறித்து விட்டோம்.
அந்த வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட நூல்களில் ஒன்று அந்திமழை பதிப்பகம் வெளியிட்ட அறம் பொருள் இன்பம். அந்திமழை இணைய இதழில் எழுதிய கேள்வி பதில் பகுதி. இதில் உள்ள விஷயங்களை நான் இந்தக் கேள்விகளை எதிர்கொண்டிருக்காவிட்டால் எழுதியிருக்க மாட்டேன் என்பதுதான் அந்த நூலின் சிறப்பு. அதை சாத்தியப்படுத்திய அந்திமழை இளங்கோவன் மற்றும் அசோகன் ஆகிய நண்பர்களுக்கும் அந்திமழை டீமுக்கும் என் நன்றி. அறம் பொருள் இன்பம் தொகுப்பை நீங்கள் வாங்கிப் படிப்பதோடு நிற்காமல் பத்து இருபது பிரதிகளை வாங்கி நண்பர்களுக்கும் பரிசளியுங்கள். அது முக்கியம். இப்போது அந்த நூலை நீங்கள் அமேஸானிலும் வாங்கலாம். அதற்கான விபரம்: http://www.amazon.in/dp/8192460967