ஜி. கார்ல் மார்க்ஸின் இரண்டு புத்தகங்கள் – ஒரு சிறிய மதிப்புரை

முகநூலில் Sarav Urs எழுதியது:

படிக்கிற பழக்கம் குறைஞ்சிடுச்சு… நாளிதழ் எல்லாம் கேக்கவே வேணாம் ஒரே டெம்ப்ளேட் எழுத்துக்கள். அலெர்ஜி. வார இதழ்’ல மனசுக்கு நெருக்கமான ஒன்னு இரண்டு பக்கங்களுக்காக மொத்தத்தையும் உருட்ட வேண்டிய சூழல். கடுப்ஸ்.

சிறுகதை எல்லாம் பிரியாணிக்கு வச்ச துவையல் மாதிரி ஒட்டவே மாட்டீங்குது. கவிதை எல்லாம் பார்த்தாலே கொலை வெறி வருது. யோசிச்சு பார்த்தால் காமிக்ஸ், வரலாறு, க்ரைம், அரசியல் கட்டுரைகள் மட்டுமே பிடிச்சிருக்கு. இதுல ஃபேஸ்புக் ரொம்ப சௌகர்யம். பிடிக்கலைன்னா விரலை ஒரு சுண்டு, சர்ர்ர்ருன்னு எல்லாம் மேல போய்டும். அதை விட நாம நினைக்கிற கருத்தை உடனுக்குடனே தெரிவிக்கவும் முடியும். படிக்கிற தளம் மாறிடுச்சு.

ஜி. கார்ல் மார்க்ஸ்’ன் புத்தக வெளியீட்டில் இரண்டு புத்தகங்கள் கிடைச்சது. ஒன்னு சிறுகதை இன்னொன்று கட்டுரை. பந்தியில் பிடிச்ச ஐட்டத்தை லைட்டா ருசி பாத்துட்டு, அப்புறமா அதை பாத்துகிட்டே பிடிக்காத ஐட்டத்தை வேக வேகமா சாப்பிட்டு முடிச்சுருவேன். திரும்ப பிடிச்ச ஐட்டத்தை மெதுவா ருசிச்சு சாப்பிடுவேன். அதே மாதிரி கட்டுரைகளை கொஞ்சம் படிச்சுட்டு வேகமா சிறுகதையை மேய்ஞ்சேன்.

10 சிறுகதையை முடிக்க சரியா ஒரு மாசம் ஆகியிருக்கு . படிக்கும் போது புத்தகத்தை ரிவர்சில் படிக்கும் பழக்கம் வேறு உண்டு. அதனால எனக்கு முதல் கதை புத்தகத்தின் கடைசி கதை..

வித்தியாசமான தலைப்புகள் சுவாரஸியமான தளங்கள். முடிவில்லாத வெளியை போல பல்வேறு சிந்தனையை தூண்டும் முடிவுகள் என்று ஒரு நல்ல புத்தகம்.

கார்லோட சமூக பார்வை, அதை அவர் காட்சி படுத்தும் விதம் எனக்கு ஆச்சர்யமா இருந்தது. சில விசயங்களை அவர் வர்ணிக்கும் போது.. அட, ஆமா இப்படி தானே இவங்க நடந்துக்குவாங்கன்னு தோணுச்சு.

உதாரணமா மனைவி இறந்து விட்டதால் பல வருடங்களாக மாமியார் வீட்டு பக்கமே போகாத ஒரு மருமகன், ஒரு நாள் போவார்.அப்ப அவரோட மாமியார் கண் தெரியாம வெளியில உக்காந்திருப்பாங்க,.. இவர் அங்க கொஞ்சம் நேரம் அமர்ந்திருப்பார் ஆனால் மாமியாருக்கு இவரை தெரியாது. சற்று நேரத்தில் ஒருத்தர் வந்து மாமியாருக்கு புரியும் வகையில் உன் மருமகன் வந்திருக்கார்ன்னு சொல்வார். உடனே மாமியார் உடல் மொழியில் வரும் மாற்றம் பற்றி கார்ல் இப்படி எழுதியிருப்பார்…

“வேகமாக கால்களை மடக்கிக் கொண்ட கிழவி முந்தானையை இழுத்து அழுத்தமாக இடுப்பில் சொருகிக்கொண்டு, ‘ உள்ள் போங்க’ என்று கையை காட்டினாள். குரல் வரவில்லை.”

பல இடங்களில் மாமியார்கள் மருமகனிடம் ரியாக்ட் செய்வதை பார்த்திருக்கேன், ஒரு வித வெட்கம் / பதட்டம் கலந்த ரியாக்ஷன் இருக்கும். அந்த உடல் மொழியை அசால்ட்டா நம்மகிட்ட கடத்துறார் கார்ல்..

அதே மாதிரி அவர் பயன்படுத்தும் உவமைகள் எல்லாம் அட்டகாசமா இருந்தது.. “நேரம் ஒரு தனித்த முதியவனின் வாழ்வைப்போல மிக நீண்டதாக இருந்தது”

“உடலெல்லாம் சுருங்கி கோடு கோடாக வெடித்துப்போன வெள்ளரிப்பழம் போல் இருந்தது உருவம்”.

“வதங்கிய கோரைபுல்லைப்போல அவ்வளவு மென்மையாக இருந்தாள் அவள். ஈனும் தருவாயில் இருக்கும் பசுவைப்போல சீறும் மூச்சுடன் அவனைக் கட்ட்க் கொண்டாள். அடர்த்தியான காற்றில் உரசிக்கொள்ளும் நெடிய பாக்கு மரங்களைப்போல் நெருக்கம் வசப்பட்டது.” – இப்படி பல இடங்களில் அவர் ஒப்பீட்டை ரொம்ப ரசிச்சேன்.

ஒரு பெண்ணிடம் சகலமும் பிடிச்சிருந்தாலும் சில நேரம் ஆண்களின் உடல் கலவிக்கு தயாராகாது. அதை பற்றி பல பேருக்கு புரிதல் இருக்காது. முக்கியமா பெண்களுக்கு. ஆண்கள் கூட உடனே சின்ன வயிசுல சுய இன்பம் செய்தேன் அதனால தான் இப்படீன்னு யோசிப்பாங்க. ஆனால் இது சாதாரண விஷயம். சில நேரம் பசி எடுக்காது இல்லியா அப்படி அது இயல்பான ஒன்று தான். மற்றொரு நேரம் அதுவே சரி ஆகும். ட்ராகன் டாட்டூ’ன்னு ஒரு கதையில் இது மாதிரி ஒரு சம்பவத்தை மையப்படுத்தியிருப்பார்.

“சட்டென்று மீண்டும் அந்த இழை அறுபட்டது போல அவன் தளர்ந்தான், அவள் மீண்டும் முயற்சித்தாள். சிறிதாக ஒலி எழுப்பிக்கொண்டே அவன் தொடைகளில் வருடினாள். அது இச்சையை தூண்டுவதாக இல்லாமல் கூச்சத்தைத்தான் தந்தது. அவளது கைகளைப் பற்றி அந்த ஸ்பரிசத்தை நிறுத்தினான். ”

இதெல்லாம் அனுபவித்தவர்களுக்கு தான் புரியும்.. (இல்லேன்னா பலர் அனுபவத்தை கேக்கும் மருத்துவர்களுக்கு.. இந்த கதை பற்றி தனி பதிவே போடலாம்…

இப்படி பல இடத்தில் நாம பார்த்த விசயங்களை நமக்கு எளிமையா ஞாபகபடுத்திகிட்டே போற அவர் ஸ்டைல் சூப்பர்… இனி கட்டுரையை ருசிக்க வெய்ட்டிங். அது என்னோட ஃபேவரைட் ஏரியா… கார்லின் புத்தகங்கள் ஆன்லைனிலும் கிடைக்கின்றன…

***

பிரபு காளிதாஸ், ஜி. கார்ல் மார்க்ஸ் இருவரது நூல்களையும் இளைஞர்கள் ரசித்துப் படிப்பது சந்தோஷத்தை அளிக்கிறது.  சரவணன் சந்திரனை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை.  அவர் ரொம்ப தூரம் போய் விட்டார்.  ஆதவன் இப்போது இருந்தால் சரவணன் போல்தான் எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது.  இதுவும் கூட ஏதோ ஒரு சந்தோஷமான ஒப்பீடுதான்.  சரவணனின் ஸ்டைல் தனி ரகம்…