நாளை திருச்சி கிளம்புகிறேன். நாளை இரவு திருச்சியில் தங்கல். நாளை மறுநாள் ஞாயிறு மாலை நான்கு மணி அளவில் லால்குடி வினோபா கல்வி நிலைய வளாகத்தில் லா.ச.ரா. பற்றிப் பேசுகிறேன். லா.ச.ரா.வின் புதல்வர் சப்தரிஷியும் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்பதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் ஒரு அபாரமான மனிதர். திங்கள் மாலைதான் சென்னை எக்ஸ்பிரஸில் சென்னை திரும்புகிறேன். இரண்டு தினங்களும் திருச்சியில் என் நண்பன் சுதிர் செந்தில் இல்லாதது எனக்கு வருத்தம். வெளியூர் போயிருப்பதாகத் தகவல் அறிந்தேன். மற்றபடி திருச்சியில் யாரையும் தெரியாது. ஸ்ரீரங்கம் தான் எனக்கு இன்னொரு சொந்த ஊர் மாதிரி. என் தாயாரின் ஊர். அங்கே தங்க அறை கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் தாயாரின் அருகிலேயே இருந்திருக்கலாம். எதிரே ஒரு நன்னாரி சர்பத் கடை இருக்கிறதாமே? ஸ்ரீரங்கத்தில் அறை கிடைக்காவிட்டாலும் திருச்சியிலிருந்து போய் தாயாரைப் பார்த்து விட வேண்டியதுதான்.
லா.ச.ரா. பற்றிப் பேச எவ்வளவோ இருக்கிறது. உன் வாசிப்பிலேயே உனக்கு மிகப் பிடித்த சிறுகதை எது என்று கேட்டால் செகாவின் கதைகளைச் சொல்ல மாட்டேன். அதெல்லாம் ’ஜனனி’க்கு அடுத்துதான். ஜனனி போன்ற கதை உலக மொழிகளிலேயே கிடையாது.