வாசகி: என்ன சாரு, காத்தாலேர்ந்து உங்க ஃபோன் எங்கேஜ்டாவே இருக்கு? பொதுவா அப்படி இருக்காதே?
சாரு: ஹிண்டுல ஒரு கட்டுரை வந்திருக்கு. அதைப் பத்தி நிறைய பேர் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க, அதனாலதான்.
வாசகி: அதுதான் எப்பவுமே எதாவது ஒரு பத்திரிகைலே உங்க ஆர்ட்டிகிள் வர்றதே, அதுலே என்ன விசேஷம்?
சாரு: இல்ல, இது அன்புமணி பத்திங்கறதாலெ கொஞ்சம் பரபரப்பாயிடுச்சு, தேர்தல் நேரமில்ல…
வாசகி: அன்புமணியா, யார் அது?
சாரு: பாமாக்கா தலைவர்.
வாசகி: பாமாக்காவா? அப்டீன்னா?
சாரு: பாட்டாளி மக்கள் கட்சி. பா… மா… கா…
வாசகி: ஓ… தலித் கட்சியா?
சாரு: மை காட்… தலித் கட்சி இல்ல… அது விடுதலைச் சிறுத்தை… இது முன்னாலெ வன்னியர் கட்சியா இருந்து இப்போ பாட்டாளி மக்கள் கட்சியா வளர்ந்திடுச்சி…
வாசகி: ஓ, வன்னியரும் தலித் தானே?
சாரு: ஓ மைகாட்… வன்னியர் வேறே… தலித் வேறே… ஆனா வாழ்க்கை என்னமோ ஒன்னுதான்… ஏழ்மை தான்… அதுல ஒரு வித்தியாசமும் கிடையாது.
வாசகி: ஓ, வன்னியரும் தலித்தும் ஒன்னு இல்லியா? சரி, ஹிண்டு பார்க்கிறேன். பார்த்துட்டு கூப்பிடறேன்.
***
வாசகி: சாரு, ஹிண்டுலே பார்த்தேன். இல்லியே?
சாரு: இருக்கே? இவ்ளோ பேர் படிச்சிருக்காங்களே?
வாசகி: அப்போன்னா அது வேற பேப்பரா இருக்க வேணா சான்ஸ் இருக்கு. ஹிண்டூல வர்லே. அது நிச்சயம்.
சாரு: இங்லீஷ் ஹிண்டூ இல்ல; நான் சொல்றது தமிழ் ஹிண்டு.
வாசகி: நான் ஒன்னும் அவ்ளோ முட்டாள் இல்லே. தமிழ் ஹிண்டூலதான் பார்த்தேன். ஆர்ட்டிகிள் வர்லே.
சாரு: இல்லிங்க, நானே காலைலெ படிச்சேன்.
வாசகி: படிச்சேள் சரி. அது ஹிண்டுவாங்கறது என்ன நிச்சயம்? ஏன் சொல்றேன்னா நான் ஹிண்டுல ஒவ்வொரு பக்கமா பார்த்தாச்சு. வர்லே.
சாரு: சரி, பேப்பர் இப்போ உங்க கைல இருக்கா?
வாசகி: ஆமா, இருக்கு.
சாரு: பக்கம் எட்டைத் திருப்புங்க. அங்கே இருக்கு.
வாசகி: இல்லியே?
சாரு: என்னது இல்லியா?
வாசகி: இல்லியே.
சாரு: உங்க கைல இருக்கிற பேப்பர்ல என்ன தேதி போட்ருக்குன்னு பாருங்க, ப்ளீஸ்.
வாசகி: அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். இன்னிக்கு எட்டாம் தேதி. கையிலேயும் எட்டாந்தேதி பேப்பர்தான் இருக்கு.
சாரு: அதுல அன்புமணி ஃபோட்டோ இருக்கா, எட்டாம் பக்கத்துல?
வாசகி: அன்புமணி யாருன்னு என்னால ஐடெண்டிஃபை பண்ண முடியாதே?
சாரு: சரி, எட்டாம் பக்கத்துல ஒருத்தரோட படம் இருக்கா?
வாசகி: ஆமா, ஒரு ஜெண்டில்மென் லெஃப்ட் ஹாண்டால தலைல கை வச்சிண்டிருக்கார்.
சாரு: ஆஹா, அதுதான் அன்புமணி. அதுதான் நான் எழுதிய கட்டுரை.
வாசகி: என்னது? அடப்பாவி! ஆமா, சாரு நிவேதிதான்னு எழுதி இருக்கறதே? மை காட். என்ன அக்கிரம் இது, உங்க கட்டுரைல மிஸ்டர் அன்புமணி பிக்சரை போட்டுருக்கான்?
சாரு: அடடா, அன்புமணி பத்தின கட்டுரைல எப்படி என் ஃபோட்டோவைப் போடுவாங்க?
வாசகி: அதெல்லாம் தெரியாது. உங்க கட்டுரைல உங்க ஃபோட்டோ இருக்கறதுதான் நியாயம். இந்தப் பத்திரிகைகாராளே ரொம்ப மோசம்.