இப்படி ஒரு பட்டியல் போடுவதற்கு எனக்குத் தகுதி இல்லை. ஏனென்றால், சமீபத்தில் வந்த நூல்கள் பலவற்றை அல்லது அநேகமாக எல்லாவற்றையுமே நான் வாசித்ததில்லை. இப்போதுதான் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி என்று படித்து வருகிறேன். என்றாலும் பெரியவர் ஆசீர்வாதம் மாதிரி பத்து பெயர்களைச் சொல்லுங்கள் என்றார்கள் ஒரு தொலைக்காட்சியில். படிக்க வேண்டிய புத்தகங்கள்தான். ஆனால் நிறைவான பட்டியல் அல்ல. ஏனென்றால், தமிழ்மகனின் மெட்ராஸ் பற்றிய புத்தகம் வந்திருப்பதாக அறிந்தேன். இன்னும் கிடைக்கவில்லை, படிக்கவில்லை. நேற்று மனுஷ்ய புத்திரனின் புலரியின் முத்தங்கள் நூலை விலைக்கு வாங்கி இரவே படித்தேன். (என் புத்தகத்தையே விலைக்கு வாங்கின மாதிரி இருந்தது!) ஓவியன் வான்கா மாதிரி வாழ்கிறான் மனுஷ்ய புத்திரன், யாருக்கும் தெரிய மாட்டேன் என்கிறது. அவனுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. அவன் என் மீது மிகுந்த கோபம் கொண்டிருக்கிறான். அப்படித்தான் இருக்கும். தன்னைப் போலவே இன்னொருவனும் இருந்தால் அன்பா வரும்? ஒருநாள் எனக்கு ஒரு கனவு வந்தது. தேர்தலுக்கு முன்பு. தேர்தலில் திமுக ஜெயித்து மனுஷ்ய புத்திரன் போலீஸ் மந்திரியாகி என்னை உள்ளே தூக்கி போட்டு விட்ட மாதிரி கனவு. அதே செல்லில் ஒரு பதிப்பகத்தின் முதலாளியும் இருந்தார். பெயர் சொன்னால் என் மீது கேஸ் போட்டு விடுவார். திடுக்கிட்டு அலறி அடித்துக் கொண்டு எழுந்தேன். நல்லவேளை, கனவு பலிக்கவில்லை.
புலரியின் முத்தங்களில் உள்ள அத்தனை கவிதைகளையும் எழுதியது நான் தான் என்று எனக்குத் தோன்றியது. நான் நினைத்தேன். அவன் எழுதுகிறான்.
இன்னும் ஜோ டி க்ரூஸ் படிக்கவில்லை. படிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. இந்தப் பட்டியலில் என் நண்பர்களின் நூல்களே அதிகம் உள்ளன. ஆனாலும் இவை படிக்க வேண்டிய நூல்கள்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
1. ஐந்து முதலைகளின் கதை – சரவணன் சந்திரன் – உயிர்மை பதிப்பகம்